ஆன்மிக களஞ்சியம்

பரிக்கல் என்ற பெயர் வரக்காரணம்

Published On 2023-09-17 18:01 IST   |   Update On 2023-09-17 18:01:00 IST
  • அவன் ஒரு நரசிம்மர் திருக்கோவிலைக் கட்ட விரும்பினான்.
  • அதோடு வசந்தராஜனுக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்த மூர்த்தியாகக் காட்சியளித்தார்.

மகாலட்சுமியின் அன்பான அரவணைப்பால் பகவான் ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி தன் கோபத்தைத் தணித்து சாந்த மூர்த்தியான இடம் இதுவாகும்.

இங்கு மகாலட்சுமி அவளுடைய வலது கரத்தால் சுவாமியை தழுவியும், பகவான் தன்னுடைய இடது கரத்தால் தாயாரை அரவணைத்தும் சேவை சாதிக்கிறார். ஆகவே இது பரிக்கல் எனப்படும்.

வசந்தராஜன் விருத்தாசலத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தான்.

அவன் ஒரு நரசிம்மர் திருக்கோவிலைக் கட்ட விரும்பினான்.

வசந்தராஜனுக்கு பரகாசுரன் என்ற அரக்கன் பல தொல்லைகளைக் கொடுத்து வந்தான்.

அவன் அரக்கன் இரண்யகசிபுவின் உறவினன்.

இந்த தொல்லைகளிலிருந்து விடுபட வசந்தராஜன் கடும் தவம் புரிந்தான்.

அவனுடைய குருவின் ஆணைப்படி இந்த இடத்தில் தவம் புரிந்தான்.

நரசிம்ம மூர்த்தி அவனுடைய தவத்தை மெச்சி அந்த அசுரனைக் கொன்றார்.

அந்த அசுரனைக் கொன்ற நரசிம்ம மூர்த்தியின் உக்ரரூபத்தைக் கண்டு அஞ்சி வசந்தராஜன் ஸ்ரீலட்சுமித் தாயாரிடம் பகவானை சாந்தப்படுத்தும்படி வேண்டினான்.

ஸ்ரீலட்சுமி தாயாரின் அரவணைப்பால் ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்தமாகி தன்னுடைய கொடூரமான முக பாவத்தை மாற்றிக் கொண்டு ஸ்ரீகனகவல்லித் தாயாரை தன்னுடைய மடியில் வீற்றிருக்கும்படி செய்தார்.

அதோடு வசந்தராஜனுக்கு ஸ்ரீநரசிம்ம மூர்த்தி சாந்த மூர்த்தியாகக் காட்சியளித்தார்.

தேவர்களும், முனிவர்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்க்ள.

இதனால் வசந்தராஜன் ஸ்ரீநரசிம்ம சுவாமியிடம் இங்கேயே தங்கும்படி வேண்டினான்.

அந்த அசுரனின் பெயரால் இந்த இடம் "பரிக்கல்புரம்" என்றாகிப் பிறகு நாளடைவில் பரிக்கல் எனப்பட்டது.

Tags:    

Similar News