ஆன்மிக களஞ்சியம்
null

கொலு வைப்பதும்... வழிபடும் முறைகளும்..

Published On 2023-05-30 10:52 GMT   |   Update On 2023-05-30 10:52 GMT
  • 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம்.
  • ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு.

நவராத்ரியில் கருணாமூர்த்தியான அம்பாளை முதல் மூன்று நாட்கள் துர்காவாகவும், அடுத்த மூன்று நாட்கள் லக்ஷ்மியாகவும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதியாகவும் ஆவாஹனம் செய்து வழிபடுவது வழக்கம். இந்த பூஜா முறைகள் பற்றி பல புத்தகங்களில் பலவாறு எழுதப்பட்டிருக்கிறது. அவரவர் இல்லத்தில் தொன்று தொட்டு வரும் வழக்கமே ப்ராதான்யமாக கொண்டு செய்தல் நலம்.

இந்த 9 தினங்களில் கொலு வைத்து அம்பிகையை பூஜிப்பது பலர் இல்லங்களில் வழக்கம். கொலுவானது 9 படிகளாக வைப்பதே வழக்கம். ஆனால் காலப் போக்கில் அவரவர் இடம்/பொருள் வசதிக்கேற்ப ஒற்றைப்படையில் இருந்தால் போதும் என்று மாற்றிக் கொண்டுவிட்டனர். இப்படிகளில் பொம்மைகளை வைக்க முறையும் இருக்கிறது. மேலிருந்து வருகையில் முதல் படியில் மரப்பாச்சி, கலசம், இறை உருவங்கள் போன்றவை வைக்கப்பட வேண்டும். இன்று மரப்பாச்சி பொம்மைகளுக்கு மவுசு இல்லை. ஆனால் அவை கதிரம் என்று கூறப்படும் கருங்காலி மரத்தால் ஆனது. இம்மரம் அக்னி ஸ்வரூபமாக கருதப்படுகிறது. இது இருக்கும் இடத்தை தீய சக்திகள் அணுகாது என்பர்.

ஒன்பது படிகள் என்பது நவ-ராத்ரிகளையும், உடலில் இருக்கு நவ துவாரங்களையும், ஸ்ரீ சக்ரத்தில் இருக்கும் நவ கோணங்களையும், நவ கண்டங்களையும் குறிப்பது என்று சொல்வதுண்டு. இந்த ஒன்பது படிகளுக்கு இன்னொரு விளக்கமும் உண்டு. அம்பாளை வழிபடுபவர்கள் நற்கதி அடைதலை சோபான பதவி என்பர். இந்த சோபான பதவி அடைய 9 படிகளைக் கடக்கவேண்டும் என்ற தத்துவமும் உண்டு. அந்த 9 படிகளாவது, விவேகம், சலிப்பு/நிர்வேதம், விரக்தி/தாபம். பீதி, நல்வழி, எண்ணங்களில் உயர்வு, ரூப வழிபாடு, க்ஷேத்ர வழிபாடு, பகவத் அனுபவம் ஆகியவை. 

மாலை 6 மணி முதல் இரவு 8 மணிக்குள் பூஜை செய்து தீபம் ஏற்றுவது சிறந்தது.

தேவியின் பாடல்களை காம்போதி ராகத்தில் பாடுவது சிறப்பானது.

மிளகு சாதம், பால் பாயாசம், காராமணி சுண்டல் வைத்து பூஜை செய்யலாம்.

மருக்கொழுந்து மற்றும் சம்பங்கி மலர்களால் கோர்க்கப்பட்ட மாலையை அணிவிக்கலாம். இந்த மலர்களால் அர்ச்சனையும் செய்யலாம்.

Tags:    

Similar News