search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    மயில் போல் காட்சி தரும் மயிலம் மலை
    X

    மயில் போல் காட்சி தரும் மயிலம் மலை

    • இது மிகவும் சிறிய மலை, மயிலைப் போல் காட்சி அளிக்கும் மலை.
    • முருகனோடு அசுரனான சூரபத்மன் போர் செய்து தோற்றான்.

    மயிலம் தலம் சென்னை திருச்சி நெடுஞ்சாலையில் திண்டிவனத்துக்கு அருகில் இருக்கிறது.

    திண்டிவனத்தில் இருந்து பாண்டிச்சேரி செல்லும் சாலையில் சுமார் 3 மைல் தொலைவில் மயிலம் மலை முருகன் கோவில் இருக்கிறது.

    இது மிகவும் சிறிய மலை, மயிலைப் போல் காட்சி அளிக்கும் மலை.

    இதனால் இந்த மலைக்கு மயிலம் எனறு பெயர்.

    கந்தபுராணத்தில் இது பற்றிய தகவல் ஒன்று உள்ளது.

    முருகனோடு அசுரனான சூரபத்மன் போர் செய்து தோற்றான்.

    அப்படித் தோற்றவன் நல் அறிவு பெற முருகனுக்கு வாகனமாக இருக்க விரும்பினான்.

    அவன் தனது விருப்பத்தை முருகனிடம் தெரிவித்தான்.

    உடனே முருகன், "நீ மயில் போன்ற மலையாகி வராக நதியின் வடகரையில் நின்று தவம் செய்.

    உன் ஆசையைப் பூர்த்தி செய்கிறேன்" என்றார்.

    அவனும் அதன்படியே நின்று தவம் செய்தான்.

    அவன் மீது இரக்கப்பட்ட முருகன் இங்கே கோவில் கொள்ளக் காரணமாயிற்று என்கிறது தல புராணம்.

    மயிலம் மலையில் கோவிலை நிர்மாணித்தவர்கள் பொம்மையபுரம் மடாதிபதி ஆவார்.

    சூரபத்மன் வரலாறு தவிர மற்றொரு செய்தியும் இத்தலத்திற்கு உண்டு.

    சிவகணத் தலைவர்களில் சங்கு கன்னர் என்பவரும் ஒருவர்.

    இவர் செய்த ஒரு குற்றத்திற்காக சாபம் பெற்றார்.

    அதன்படி அவர் பூலோகத்தில் மனிதனாகப் பிறந்தார்.

    இவர் மயிலம் மலைக்கு கிழக்கேயுள்ள கடற்கரையில் பாலசித்தராக அவதாரம் எடுத்தார்.

    பால யோகியான இவர் தன் சாப விமோசனம் வேண்டி மயிலம் மலையில் தவம் இருந்தார்.

    முருகனோ, இவரை சிவ அபராதி என்று கூறி காட்சி தர மறுத்து விட்டார்.

    இதையடுத்து வள்ளி, தெய்வயானையின் உதவியை நாடிய பால யோகி தனக்கு வழிகாட்டுமாறு மன்றாடி வேண்டுகோள் விடுத்தார்.

    பாலயோகி மீது இரக்கப்பட்ட தேவியர் இருவரும் அவருக்கு கருணை காட்ட முடிவு செய்தனர்.

    அதன்படி அவர்கள் பாலசித்தருடைய ஆசிரமத்திற்கு எழுந்தருளினார்கள்.

    முருகனிடம் முதலில் தேவியர் பால சித்தருக்கு பரிந்துரை செய்து பார்த்தனர்.

    அவர்கள் வேண்டுகோளை ஏற்க முருகன் மறுத்தார்.

    இதன் காரணமாக வள்ளி, தெய்வானை இருவரும் பாலசித்தரின் ஆசிரமத்திலேயே தங்கி விட்டனர்.

    எத்தனை நாள்தான் முருகர் தன் தேவியரைப் பிரிந்து இருப்பார்?

    எனவே, முருகன் வேட ரூபத்தில் சித்தர் ஆசிரமத்திற்கு வந்தார்.

    அப்போது முருகனுக்கும், சித்தருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    முடிவில் வாதம் மல்யுத்தமாக மாறியது.

    இந்த நிலையில் சூரபதுமனுக்குக் காட்டிய தன் திருகோலக் காட்சியை சித்தருக்கும் முருகன் காட்டினார்.

    பின் பால சித்தருடைய விருப்பப்படி கல்யாண கோலத்தில் மலைமீது தம்பதி சமேதராய் கோவில் கொண்டார்.

    மயிலம் மலையில் முருகன் கோவில் கொண்டதற்கு இந்த நிகழ்வே காரணம் என்று கூறப்படுகிறது.

    Next Story
    ×