search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில்
    X

    அருள்மிகு திருவுடை நாயகி சமேத திருவுடைநாதர் கோயில்

    • பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
    • குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி சமயங்களில் சிறப்பு ஹோமங்களும் இங்கு நடக்கின்றன.

    பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.திரு என்றால் செல்வம் என்று பொருள். தங்களது பெயரிலேயே 'திரு'வைக் கொண்டுள்ள இறைவனும், இறைவியும்; தங்களை வழிபடும் பக்தர்களின் வாழ்வில் 'திரு'வுக்குக் குறைவராமல் பார்த்துக்கொள்ளும் தலம், சென்னை மணலியில் அமைந்துள்ளது.

    பழமைமிக்க இவ்வாலயம், விஜயநகரப் பேரரசு காலத்தில் உருவானது என்பதை, கல்வெட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    கோயிலுக்கு தெற்குப் பார்த்த பெரிய நுழைவு வாயில். வாழ்வில் வரும் தடைகளைத் தகர்த்து, வெற்றிகளைத் தரும் விநாயகன் அரச மரத்தடியில் உள்ளார். செல்வ கணபதி என்னும் திருநாமம் கொண்டுள்ள இவரின் இருபுறமும் நாகர்கள் அருள்கின்றனர். பின், மூலவர் சன்னதி வருகிறது. மகாமண்டபத்தில் பலிபீடம், நந்தியைக் கடந்தால் அர்த்த மண்டபம். அங்கே அதிகார நந்தி, பிரதோஷ நாயகர் மற்றும் வள்ளி, தேவசேனையுடன் முருகர் ஆகியோரின் உற்சவ விக்ரகங்கள் உள்ளன. மூலவரின் கோஷ்டத்தில் நர்த்தன கணபதி, தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை ஆகியோர் அருள்கின்றனர்.

    கருவறையில் மூலவர் திருவுடைநாதர் நாகாபரணத்துடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். ஆவணி மாதம் ஆதவன் தனது கிரணங்களினால் இவரை பூஜை செய்வாராம். தினமும் இரண்டு கால அபிஷேகம் நடைபெறும் ஈசனுக்கு, கார்த்திகை மாதம் நான்கு திங்கட்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. கடைசி திங்களன்று 108 சங்காபிஷேகமும் உண்டு.

    அது தவிர பிரதோஷம், மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி, சோமவாரம் தோறும் சிவசகஸ்ர நாம பாராயணம், ஐப்பசி மாதம் அன்னாபிஷேகம் என பல விசேஷ நாட்கள் இங்கு சிறப்பிக்கப்படுகின்றன.

    கடன் தொல்லையால் அவதிப்படுவோர் மூலவரை மனமுருக வேண்ட, படிப்படியாய் அத்தொல்லை தீருவதாக நம்பப்படுகிறது. தம்மை வணங்கும் பக்தர்கள் வாழ்வில் ஏற்படும் எல்லா தடைகளையும் தகர்த்தெறியும் வல்லமை மிக்கவராம் இவர்.

    பிராகார வலம் வருகையில், கருவறைக்குப் பின்புறம் வரசித்தி விநாயகரை தனி சன்னதியில் தரிசிக்கலாம். இவருக்கு முன்னால் பலிபீடமும், மூஞ்சுறு வாகனமும் உள்ளது. சங்கடகர சதுர்த்தியில் இவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன.

    மூலவருக்கு இடதுபுறம் தனி சன்னதியில் வள்ளியுடன் தேவசேனை சமேத சுப்ரமணியசுவாமி அருள்பாலிக்கிறார். அவருக்கு எதிரே மயில் வாகனம், பலிபீடம் உள்ளது. மாத கிருத்திகை, ஆடி, தை கிருத்திகைகளில் சிறப்பு அலங்காரம், விபூதி காப்பு, சந்தனக் காப்பும், கந்தர்சஷ்டியில் திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தன்று 108 பால்குட அபிஷேகமும் இவருக்கு விமரிசையாக நடக்கிறதாம்.

    முருகப் பெருமானுக்கு அருகில் கயிலாசநாதர் லிங்க வடிவில் அருள்கிறார். எல்லோராலும் கயிலைப் பயணம் சென்றிட முடியாது என்பதால், நான் உங்களுக்காக இங்கே இருக்கிறேன் என்று கூறும் பெரிய பாணலிங்கம்.

    மூலவருக்கு எதிரில், தெற்குப் பார்த்த சன்னதியில் திருவுடைநாயகி என்னும் திருநாமத்துடன் அம்பாள் அருள்கிறாள். ஸ்வர்ணபுரீஸ்வரி என்ற திருப்பெயரும் கொண்டுள்ள இவள், மிகுந்த வரப்பிரசாதி.

    அன்புததும்பும் அழகான கண்கள், கருணையே உருவான தீட்சண்யமான பார்வை, மெல்லிய உதடு, கொடிபோல் அழகான இடை, நலமருளும் நாற்கரங்கள் என அழகிய திருக்கோலத்துடன் ஆட்சிபுரியும் அம்மனை நாள் பூராவும் அலுக்காமல் பார்த்துக் கொண்டே இருக்கலாம்.

    இவளுக்கு பௌர்ணமி அன்று அபிஷேகம், சித்ரா பௌர்ணமியன்று திருவிளக்கு பூஜை, நவராத்திரி நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு அலங்காரம், ஆடிப்பூரத்தன்று வளையல்காப்பு, சாகம்பரி அலங்காரம், 108 பால்குட அபிஷேகம், ஆடி, தை வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் என வருடம் முழுதும் பல விழாக்கள் நடக்கின்றன.

    திருமணத்தடைகளை நீக்குவதில் இவளின் பங்கு மகத்தானது. நீண்ட நாட்களாக திருமணமாகாத பெண்கள், அவர்களின் நட்சத்திர நாளில் மஞ்சள் பூசிய தேங்காயைக் கொண்டு வந்து அம்மன் காலடியில் வைத்து, அவரவர் பெயருக்கு அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர். பூஜிக்கப்பட்ட அத்தேங்காயை வீட்டில் வைத்துக் கொண்டால், வெகு விரைவில் அப்பெண்களுக்கு திருமணம் நடந்துவிடுவதாகச் சொல்கிறார்கள்.

    இக்கோயிலில் அருள்புரியும் காலபைரவர் அழகே உருவானவர். இவருக்கு தேய்பிறை அஷ்டமியில் முந்திரி மாலை, ஏலக்காய் மாலை சாத்தப்படுகிறது. மனக்கவலை, வியாபாரத்தில் கஷ்டம் போன்றவற்றை நீக்கியருள்பவராம் இவர்.

    நவகிரகங்கள், தங்கள் வாகனங்களுடன் நின்ற கோலத்தில் அருள்கின்றனர். குருபெயர்ச்சி, சனி பெயர்ச்சி, ராகு-கேது பெயர்ச்சி சமயங்களில் சிறப்பு ஹோமங்களும் இங்கு நடக்கின்றன.

    மகாமண்டபத்தில், வடக்கு நோக்கி அனுமன் தரிசனம் தருகிறார். இவருக்கு மூல நட்சத்திரம் அன்றும், சனிக்கிழமைகளிலும் சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்படுகிறது. சனிக்கிழமைகளில் வெற்றிலை மாலை, துளசி மாலை சாத்தப்படுவதுடன், வெண்ணெய்க்காப்பு, சிந்தூர அலங்காரம் ஆகியவையும் உண்டு.

    நாடி பரிகாரத்தலமாகக் கருதப்படும் இவ்வாலயத்தில், பன்னிரண்டடி உயரத்தில் ஆகாசலிங்கம் ஒன்று பிரமாண்டமாகக் காணப்படுகிறது. பெயருக்கு ஏற்றாற்போல, மேல்கூரை இல்லாமல் காணப்படும் இச்சிவலிங்கம், கோயிலுக்கு எதிரேயுள்ள பாழடைந்த குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டதாம். இத்தலத்தின் தல விருட்சம், வன்னி.

    வடசென்னைப் பகுதியில், மணலி பேருந்து நிலையத்திலிருந்து சிறிது தொலைவில், பாரதி சாலையில் இக்கோயில் உள்ளது.

    Next Story
    ×