search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    நவராத்திரியில் காளி வேடம் போடும் ஆண்கள்
    X

    நவராத்திரியில் காளி வேடம் போடும் ஆண்கள்

    • அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதிஅற்புதமாகப் பிரதிபலிக்கும்.
    • நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள்.

    திருமீயச்சூர் லலிதாம்பிகையின் நெய்க்குள தரிசனம் மிகப் பிரபலமானது. விஜயதசமி அன்று அம்பாள் கருவறை முன் 15 அடி நீளத்திற்கு வாழை இலை போட்டு, அதில் 4 அடி அகலம், 1 1/2 அடி உயரத்திற்கு சர்க்கரைப் பொங்கலைப் பரப்புவர். அதன் நடுவே குளம்போல் அமைத்து அதனை நெய்யினால் நிரப்புவர். அதன் பின்னரே கருவறையின் திரையை விலக்குவர். அலங்கரிக்கப்பட்ட அன்னையின் திருவுருவம் நெய்க்குளத்தில் அதிஅற்புதமாகப் பிரதிபலிக்கும். இந்த நெய்க்குள தரிசனத்தினைக் காண்போருக்கு மறுபிறவியே இல்லை என்பது நம்பிக்கை. முத்தாரம்மன் சமேத ஞான மூர்த்தீஸ்வரர் ஆலய தசரா, கிராமியக் கலை விழாவாகப் புகழ்பெற்றது. குலசையில் தசரா விழா பன்னிரண்டு நாட்கள் கோலாகலமாக நடக்கும். பக்தர்கள் சுமார் ஒருமண்டலம் விரதமிருந்து ஏதேனும் ஒரு தெய்வம்போல் வேடம் அணிந்து சுவாமி ஊர்வலம் வரும்போது கூடவே வருவார்கள். காளி வேடத்தை ஆண்கள் மட்டுமே புனைவார்கள். ஊர்வலத்தில் கரகாட்டம், மயிலாட்டம், மேளம், தாளம், தாரை, தப்பட்டை, ஒயிலாட்டம் என கிராமியக் கலைகளும் இடம்பெறும். ஒவ்வொரு வருடமும் இவ்விழா கலை நயத்தோடும் மிகுந்த பக்தியுடனும் சிறப்பாக நடைபெறும்.

    இமயமலையில் அமைந்துள்ள குலுமணாலியில் இவ்விழா 10 நாட்கள் நடக்கும். இத்தலத்தில் அருள்புரியும் ரகுநாத் ஜீ தெய்வத்தை ஸ்ரீராமனே தன் கட்டை விரல் அளவில் செய்து கொடுத்திருப்பதாக தல வரலாறு சொல்கிறது. நவராத்திரி சமயத்தில், குலு பள்ளத்தாக்கிலுள்ள முந்நூறுக்கும் மேற்பட்ட மலை தெய்வங்கள் பக்தர்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து ரகுநாத் ஜீக்கு மரியாதை செய்வார்கள். விதவிதமான கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். பதினோராம் நாள் அனைவரும் வீடு திரும்புவார்கள். சட்டீஸ்கர் மாநிலத்தில் உள்ளது ஜகதல்பூர். இத்தல நாயகி தண்டேஸ்வரி. இங்கே ஒரு நாள் அல்ல இருநாள் அல்ல எழுபத்தைந்து நாட்கள் தசரா விழாவைக் கொண்டாடுவார்கள். இப்பகுதி பழங்குடியினர் அவரவர் பிரிவுக்கு உட்பட்ட ஆலய தெய்வச் சிலைகளை அலங்கரித்து தண்டேஸ்வரி ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வருவார்கள். பின் தண்டேஸ்வரி முன் வைத்து பூஜித்து, மரியாதை செய்வர். அதன்பின் தினமும் கலை நிகழ்ச்சிகள் நடத்துவார்கள். இந்த எழுபத்தைந்து நாட்களும் யாரும் வீட்டில் இருக்க மாட்டார்கள். தண்டேஸ்வரி ஆலய சுற்றுப்புறத்திலேயே தங்கி சமைத்து சாப்பிட்டு கலைநிகழ்ச்சி நடத்தி தூங்கி வெட்ட வெளியிலேயே இருப்பர். எழுபத்தாறாம் நாள்தான் அவரவர் தெய்வங்களுடன் இல்லம் திரும்புவர்.

    கோவை பொள்ளாச்சி சாலையில் உள்ள மகாலட்சுமி மந்திர் என்னும் அழகிய ஆலயத்தில் சரஸ்வதி, துர்கா, மகாலட்சுமி ஆகிய மூன்று தேவிகளும் கருவறையில் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்த ஆலயத்தில் நவராத்திரி விழா கொடியேற்றத்துடன் தொடங்கும். மிகப் பெரிய அளவில் இங்கு கொலு வைக்கப்படுவதுண்டு. தினசரி இந்த கொலுவைக் காண நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். விஜயதசமி அன்று புதிதாக பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் பெற்றோருடன் இங்கு கூடுகின்றனர். அன்று அவர்களுக்கு சரஸ்வதி தேவியின் முன்பாக எழுதத் தொடங்கி வைக்கின்றனர். அன்னையின் முன்புள்ள பளிங்கு மண்டபத்தில் நூற்றுக் கணக்கான குழந்தைகள் இப்படி அமர்ந்து எழுதத் தொடங்குவது நம்மை சிலிர்க்க வைக்கும் காட்சியாகும். பொதுவாக, விஜயதசமி பல நல்ல செயல்களைத் தொடங்கவும் வியாபாரங்களைத் தொடங்கவும் நல்ல நாள். எனவே அன்னையை இந்த நவராத்திரியின் போது பல உருவங்களில் நாம் வழிபடுவதுடன் விஜயதசமியன்றும் வழிபட்டு, பாவம் தொலைத்து நலனும் அருளும் பெறுவோமாக !

    வைணவ திருத்தலங்களுள் முதன்மையானதாகப் போற்றப்படும் திருவரங்கத்தில் அரங்க நாயகியாக அருள்பாலிக்கும் தாயார், நவராத்திரி நாட்களில் தினமும் மாலையில் புறப்பாடு கண்டருள்வார். புறப்பாடு ஆகும் முன் சங்கநாதம் ஒலிக்கும். பிராகாரங்களை ஒருமுறை வலம் வந்தபின் கொலு மண்டபத்தில் வீற்றிருந்து பின்னர் இரவு 8.30 மணிவாக்கில் மூலஸ்தானம் எழுந்தருள்வார். அதுவரை நாதஸ்வரக் கச்சேரிகள் நடக்கும். மூலஸ்தானத்துக்கு முன்மண்டபத்தில் அன்னை எழுந்தருளும்போது கோயில் யானை துதிக்கையை உயர்த்தி நமஸ்கரிக்கும். மௌத்ஆர்கனை வாயில் வைத்து ஒலி எழுப்பும். பின்னர் பேஷ்கார் எனப்படும் கோயில் அதிகாரிக்கு தாம்பூலம் கொடுக்கும். இதை வேடிக்கை பார்ப்பதற்காகவே குழந்தைகள், பெரியவர்கள் என்று கூட்டம் வரும். நவராத்திரி ஏழாம் நாள் தாயாரின் திருவடிகள் வெளியில் தெரியும்படி அலங்காரம் செய்யப்பட்டு புறப்பாடு ஆகும். இந்தத் திருவடி சேவையைக் காண பக்தர்கள் ஆலயத்தில் குவிந்துவிடுவார்கள். அந்த ஒரு நாள்தான் தாயாரின் திருவடிகள் தரிசனம் கிடைக்கும்.

    ஸ்ரீமுஷ்ணம் அருகே உள்ள திருக்கூடலையாற்றூரில் நர்தன வல்லபேஸ்வரர் கோயிலில் இரண்டு அம்மன் சன்னதிகள் உள்ளன. இவற்றுள் ஞானசக்தி அம்மன் சன்னதியில் குங்குமமும்; பராசக்தி அம்மன் சன்னதியில் விபூதியும் பிரசாதமாகத் தரப்படுவது வித்தியாசமானது.

    இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி, ஆதி சக்தி, பராசக்தி, குடிலா சக்தி என ஆறு அம்சங்களையும் ஒருங்கே கொண்டு தேவி அருள்பாலிக்கும் தலங்கள் ஒன்பது. அவை காஞ்சி காமாட்சி, ஸ்ரீசைலம் பிரமராம்பாள் தேவி, கோல்ஹாப்பூர் மகாலக்ஷ்மி, உஜ்ஜயினி காளிகாதேவி, கயா மங்களாதேவி, அலகாபாத் அலோபிதேவி, உத்தரப்பிரதேசம் விந்தியவாசினி, நேபாளம் குஹ்யகேஸ்வரி, வாரணாசி விசாலாட்சி.

    சக்கரப்பள்ளி, அரிமங்கை, சூலமங்கலம், நந்தி மங்கலம், பசுபதிமங்கலம், தாழை மங்கலம், புள்ளமங்கலம் ஆகிய ஏழு ஊர்களையும் சப்தமங்கலத் தலங்கள் என்று கூறுவர். இத்தலங்களில் முறையே பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, சாமுண்டியாக அம்பிகை பூஜை செய்ததாகக் கூறுகின்றனர்.

    விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூரில் இருந்து உளுந்தூர்பேட்டை செல்லும் சாலையில் சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது காட்டுச் செல்லூர் என்னும் கிராமம். இங்கே உள்ள வேம்பி அம்மன் கோயிலில் சுமார் 1200 ஆண்டுகள் பழைமைவாய்ந்த துர்க்கை அம்மனின் திருமேனி உள்ளது. நின்ற கோலத்தில் காட்சி அளிக்கும் இந்த துர்க்கை அம்மன் சிற்பம் நான்கு திருக்கரங்களுடன் காணப்படுகிறது. மேல் இருகரங்களில் பிரயோகச் சக்கரமும், சங்கும், கீழ் வலக்கரத்தில் ஞான முத்திரையும் திகழ, கீழ் இடக்கரத்தை இடுப்பில் வைத்து அற்புத தரிசனம் தருகிறாள். இக்கரத்தில் கிளி ஒன்று ஏறிச் செல்வது போல் அமைந்திருப்பது சிறப்பாகும். விஜயதசமி அன்று அம்பு போடும் திருவிழா இங்கு மிக விசேஷம்.

    Next Story
    ×