search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஏமன் நாட்டில் பஸ் மீது ஏவுகணை தாக்குதலில் 40 குழந்தைகள் உயிரிழந்துள்ளன - செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு
    X

    ஏமன் நாட்டில் பஸ் மீது ஏவுகணை தாக்குதலில் 40 குழந்தைகள் உயிரிழந்துள்ளன - செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு

    ஏமன் நாட்டில் பஸ் மீது கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஏவுகணை தாக்குதலில் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று தெரிவித்துள்ளது. #Yemenbusstrike #Yemenbusstrikekills40children
    சனா:

    ஏமன் தலைநகரான சனா உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளை கைப்பற்றி தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களை ஒடுக்க சவுதி அரேபியா அரசின் உதவியை அதிபர் அப்துர்ரப்போ மன்சூர் ஹாதி நாடினார்.

    இதையடுத்து, கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளின்மீது குண்டுமழை பொழிந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடியாக ஹவுத்தி போராளிகளும் சவுதி அரேபியா நாட்டு எல்லைப்பகுதியில் உள்ள நகரங்களின்மீது ஏவுகணைகளை வீசி அவ்வப்போது தாக்குதல் நடத்துகின்றனர்.

    இந்த தாக்குதல்களில் இதுவரை பொதுமக்கள் உள்பட சுமார் 10 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர். அரசுப் படைகளுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் நடைபெற்று வரும் உள்நாட்டு சண்டையால் அந்நாட்டில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் குடிநீர், உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் கிடைக்காமல் திண்டாடி வருகின்றனர்.

    இந்நிலையில், ஏமனில் உள்ள ஹவுத்தி போராளிகள் சவுதி நாட்டின் ஜிசான் நகரின் மீது கடந்த புதன்கிழமை ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த வியாழக்கிழமை சடா நகரின்மீது வான்வழி தாக்குதல்களில் ஈடுபட்டன.

    பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் மிக தாழ்வாக பறந்து சென்ற போர் விமானங்கள் நடத்திய தாக்குதலின்போது அவ்வழியாக சென்ற பஸ் மீது பல ஏவுகணைகள் வீசப்பட்டன. இந்த தாக்குதலில் 20-க்கும் அதிகமான குழந்தைகள் உள்பட சுமார் 30 பேர் உயிரிழந்ததாக முதல்கட்ட செய்திகள் வெளியாகின.

    குழந்தைகள் சென்ற பஸ் மீது நடத்தப்பட்ட இந்த மனிதாபிமனற்ற தாக்குதல் தொடர்பாக நியாயமான பன்னாட்டு குழுவினரின் விசாரணை நடத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபை கடந்த வெள்ளிக்கிழமை வலியுறுத்தி இருந்தது.



    இந்த தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டவை என பின்னர் தெரியவந்தது. ஏமன் போராளிகள் மற்றும் சவுதி அரேபியா ஆகிய இருதரப்பினருக்கும் அமெரிக்காவில் இருந்து போராயுதங்கள் அனுப்பப்பட்டு வரும் நிலையில், இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட ஏவுகணைகளை அமெரிக்க அரசு விற்கவில்ல்லை என அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்ட்டகன் நேற்று அறிவித்திருந்தது.

    இதற்கிடையில், பஸ் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் அனைவரின் உடல்களும் நேற்று (திங்கட்கிழமை) ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டன. பலியானவர்களின் குடும்பத்தினரும், உறவினர்களும் இந்த தாக்குதலுக்கு காரணமாக சவுதி அரேபியா அரசு மற்றும் அமெரிக்க அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.



    இந்நிலையில், சடா நகரின் மீது சவுதி தலைமையிலான கூட்டுப்படைகள் கடந்த வியாழக்கிழமை நடத்திய பல்வேறு தாக்குதல்களில் பஸ் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் மட்டும் 40 குழந்தைகள் உள்பட 51 பேர் உயிரிழந்ததாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று தெரிவித்துள்ளது.

    மேலும்சில பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 51 குழந்தைகள் உள்பட 79 பேர் படுகாயம் அடைந்ததாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் இன்று வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கடல் பகுதியில் அமைந்துள்ள மோக்கா நகரில் கடந்த 2015-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சவுதி தலைமையிலான படைகள் ஒரு திருமண மண்டபத்தின் மீது நடத்திய வான்னழி தாக்குதலில் 131 உயிரிழந்தனர். பலர் படுகாயமடைந்தனர்.

    இதேபோல், கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சனா நகரில் நடைபெற்ற ஒரு இறுதி ஊர்வலத்தின் மீது நடத்தப்பட்ட மேலும் ஒரு தாக்குதலில் 140 பேர் கொல்லப்பட்டனர். இவ்விரு தாக்குதல்களையும் குறிதவறி நடந்த அசம்பாவித சம்பவங்கள் என தெரிவித்து விட்டது. மேலும், அப்பாவி பொதுமக்களை ஹவுத்தி போராளிகள் மனித கேடயங்களாக பயன்படுத்துவதால் இதுபோன்ற உயிரிழப்புகள் தவிர்க்க முடியாதவை என்றும் கூட்டுப்படை தளபதிகள் சமாதானம் கூறி வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. #Yemenbusstrike  #Yemenbusstrikekills40children 
    Next Story
    ×