search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பார்படாஸ் டெஸ்ட் - வெஸ்ட் இண்டீசை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி
    X

    பார்படாஸ் டெஸ்ட் - வெஸ்ட் இண்டீசை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது இலங்கை அணி

    பார்படாஸ் நகரில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. #WIvSL #SLvWI #BarbadosTest

    பார்படாஸ்:

    வெஸ்ட்இண்டீஸ் சென்றுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிரா ஆனது. மூன்றாவது டெஸ்ட் போட்டி பார்படாஸ் நகரில் கடந்த 23-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 69.3 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, இலங்கை அணி தனது முதல் இன்னிங்சை தொடர்ந்தது. வெஸ்ட் இண்டீசின் சிறப்பான பந்து வீச்சால் இலங்கை அணி திணறியது. இதனால் அந்த அணி 154 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 

    இதன்மூலம் 50 ரன்கள் முன்னிலையுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. இலங்கை வீரர்களின் சிறப்பான பந்துவீச்சினால் வெஸ்ட் இண்டீஸ் அணி 31.2 ஓவர்கள் மட்டுமே தாக்குபிடித்து 93 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. கெமார் ரோச் அதிகபட்சமாக 23 ரன்கள் எடுத்தார். இலங்கை அணி பந்துவீச்சில் சுரங்கா லக்மல், கசுன் ரஜிதா அகியோர் தலா 3 விக்கெட்களும், லஹிரு குமாரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.



    இதையடுத்து 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக தனுஷ்கா குணதிலகா, மகிலா உடவட்டே ஆகியோர் களமிறங்கினர். மகிலா டக்-அவுட் ஆனார். அதன்பின் தனஞ்ஜெயா டி சில்வா களமிறங்கினார். குணதிலகா 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார். சிறிது நேரத்தில் டி சில்வாவும் 17 ரன்கள் எடுத்து வெளியேறினார்.



    அதன்பின் களமிறங்கிய ரோஷன் சில்வா 1 ரன்னிலும், நிரோஷன் டிக்வெல்லா 6 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். நிதனாமாக விளையாடிய குசால் மெண்டிஸ் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டை தவிற அடுத்த ஐந்து விக்கெட்களையும் வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ஹோல்டர் வீழ்த்தினார். இதனால் இலங்கை அணி 81 ரன்களுக்கு ஆறு விக்கெட்களை இழந்தது. 

    அதைத்தொடர்ந்து தில்ருவான் பெரேரா, குசால் பெரேரா ஆகியோர் ஜோடி சேர்ந்து நிதானமாக விளையாடினர். இறுதியில் இலங்கை அணி 40.2 ஓவரில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் எடுத்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தில்ருவான் பெரேரா 23(68), குசால் பெரேரா 28(43) ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிபெற செய்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஹோல்டர் 5 விக்கெட் வீழ்த்தினார். 



    இதனால் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜேசன் ஹோல்டர் ஆட்டநாயகன் விருதும், ஷேன் டவ்ரிச் தொடர்நாயகன் விருதும் வென்றனர். #WIvSL #SLvWI #BarbadosTest
    Next Story
    ×