search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி கிடக்கும் காட்சி
    X
    ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி கிடக்கும் காட்சி

    சேலம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் ஸ்டிரைக்

    சேலம் மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவு டாக்டர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டதால் சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். #DoctorsProtest
    சேலம்:

    அரசு டாக்டர்கள் காலமுறை ஊதியம் மற்றும் மத்திய அரசு டாக்டர்களுக்கு இணையாக சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏற்கனவே பல கட்ட போராட்டங்களை நடத்தினர். ஆனால் அரசு கண்டு கொள்ளவில்லை என்றும் புகார் கூறி வந்தனர்.

    இந்த நிலையில் 4-ந் தேதியான இன்று ஒரு நாள் தமிழகம் முழுவதும் அரசு ஆஸ்பத்திரிகளில் வெளி நோயாளிகள் பிரிவை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு அறிவித்திருந்தது. அதன்படி அரசு ஆஸ்பத்திரிகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இன்று வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது.

    இதையொட்டி சேலம் மாவட்ட அரசு தலைமை ஆஸ்பத்திரி, ஓமலூர், எடப்பாடி, மேட்டூர், சங்ககிரி, ஆத்தூர், வாழப்பாடி உள்பட பல பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகள், கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் புறநோயாளிகள் பிரிவை அரசு டாக்டர்கள் புறக்கணித்தனர்.

    ஓமலூர், மேட்டூர், ஆத்தூர், வாழப்பாடி, சங்ககிரி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் புறநோயாளிகள் பிரிவை டாக்டர்கள் முற்றிலும் புறக்கணித்ததால் காய்ச்சல், தலை வலிக்கு கூட சிகிச்சை பெற முடியாமல் நோயாளிகள் தவித்தனர். இதனால் சில அரசு ஆஸ்பத்திரி புறநோயாளிகள் பிரிவு வெறிச்சோடி காணப்பட்டது.

    சேலம் அரசு தலைமை மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களை வைத்து புற நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தனர். இதனால் காய்ச்சல், தலைவலி உள்பட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் அதிக நேரம் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. மேலும் பலர் சிகிச்சை பெறாமல் திரும்பி சென்றதுடன் தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு சென்றனர். இதனால் தனியார் ஆஸ்பத்திரிகளில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

    இது குறித்து அரசு டாக்டர்கள் சங்க கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், எங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி பல முறை போராட்டம் நடத்தியும் அரசு கண்டு கொள்ளவில்லை. இதனால் புறநோயாளிகள் பிரிவை புறக்கணித்து இன்று போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. கோரிக்கைகளை அரசு நிறைவேற்றாவிட்டால் அடுத்த கட்டமாக சங்க தலைமை நிர்வாகிகள் முடிவுபடி போராட்டம் தீவிரம் அடையும்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ஜனநாயக தமிழ்நாடு டாக்டர்கள் சங்கத்தினர் இந்த போராட்டத்தில் பங்கேற்கவில்லை. #DoctorsProtest
    Next Story
    ×