search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு
    X

    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் 18-ந்தேதி சொர்க்கவாசல் திறப்பு

    வைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி சென்னை, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் வரும் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
    108 வைணவத் திருத்தலங்களில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோவில். பேயாழ்வார், திருமழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோர் இந்த கோவில் களில் உள்ள பெருமாளை வழிப்பட்டு உள்ளனர்.

    இந்தகோவிலில் மூலவர் வேங்கடகிருஷ்ணன், தாயார் ருக்மணி, அண்ணன் பலராமன், தம்பி சாத்யகி, பிள்ளை அநிருத்தன், பேரன் பிருத்யும்னன் ஆகியோருடன் குடும்ப சகிதமாக அருள்பாலிக்கிறார்.

    இந்தக்கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 8-ந்தேதி பகல்பத்து முதல் திருநாள் வேங்கடகிருஷ்ணன் திருக்கோலத்துடன் தொடங்கியது. தொடர்ந்து வேணுகோபாலன், காளிங்கர்நர்த்தன, சக்கரவர்த்தித்திருமகன் திருக்கோலங்களில் விழா நடந்து வருகிறது. தொடர்ந்து இன்று (புதன்கிழமை) ஏணிக்கண்ணன் திருக் கோலம் நிகழ்ச்சி நடக்கிறது.

    தொடர்ந்து ராப்பத்து திருவிழாவின் முதல் நாள் திருவிழா வரும் 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. அன்றைய தினம் அதிகாலை 4 மணிக்கு சாமி உள்பிரகார புறப்பாடும், காலை 4.30 மணிக்கு சொர்க்கவாசல் (பரமபத வாசல்) திறப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.

    தொடர்ந்து வேதம் தமிழ்செய்த மாறன் சடகோபனுக்கு மரியாதை செய்யப்படுகிறது. தொடர்ந்து அன்று காலை 6 மணி முதல் நள்ளிரவு 11 மணி வரை மூலவர் தரிசனம் நடக்கிறது. அன்று இரவு 10 மணிக்கு உற்சவர் திருமஞ்சனம் நிகழ்ச்சியும் நடக்கிறது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு ஸ்ரீ பார்த்தசாரதி சாமி உற்சவர் நம்மாழ்வாருடன் பெரியவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. வரும் 19-ந்தேதி ராப்பத்து 2-ம் நாள் திருவிழா தொடங்கி வரும் 28-ந்தேதி 11-ம் நாள் திருவிழாவுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவு பெறுகிறது.

    குறிப்பாக 24-ந்தேதி முத்தங்கி சேவை நடக்கிறது. ராப்பத்து திருவிழா நாட்களில் தினசரி மாலை 5.30 மணிக்கும், 27-ந்தேதி காலை 9 மணிக்கும் சொர்க்கவாசல் தரிசனம் நடக்கிறது. அன்று ‘ஈக்காட்டுத்தாங்கல் திருவூறல் உற்சவம்’ நிகழ்ச்சியும் நடக்கிறது.
    Next Story
    ×