search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    நாளை பிறவிப் பயன் தரும் சிவராத்திரி விரதம்
    X

    நாளை பிறவிப் பயன் தரும் சிவராத்திரி விரதம்

    வாழ்வில் இருளை அகற்றி ஒளியை மேற்கொள்ள சிவராத்திரியில் நாம் விழித்திருந்து, விரதமிருந்து சிவனை வழிபட்டால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.
    வருடத்தில் இரண்டு ராத்திரிகள் சிறப்பு வாய்ந்தவையாக சொல்லப்படுகிறது. அவற்றைக் கொண்டாடுவதன் மூலம், நமக்கு நல்ல பலன் கிடைக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதில் ஒன்று நவராத்திரி. மற்றொன்று சிவராத்திரி.

    பெண்களுக்கு ஒன்பது நாள் ‘நவராத்திரி’. ஆண்களுக்கு ஒருநாள் ‘சிவராத்திரி’ என்று சொல்லி வைத்திருக்கிறார்கள். முன்பெல்லாம் பெண்கள் வீட்டிலேயே அதிகம் இருந்ததால் விரதங்களையும், வழிபாடுகளையும் தொடர்ந்து தினம்தோறும் செய்து வருவார்கள். எனவே நவராத்திரி விழாவை ஒன்பது நாட்களும் பெண்கள் தெய்வ வழிபாடாக வைத்து, முத்தாய்ப்பாக அம்பிகை பேரில் வெற்றி பெற்ற நாளை “விஜயதசமி” என்று கொண்டாடினர்.

    ஆண்கள் பொருள்தேடும் பொருட்டும், தொழில் துறையில் ஈடுபடுவதாலும் தெய்வ வழிபாட்டிற்கென்று சிறிது நேரம்தான் ஒதுக்க இயலும். அதையும் வருடத்தில் ஒருநாள் முழுவதும் ஆறுகால பூஜையிலும் சிவனை நினைத்து வழிபட்டு சிவாலயங்களில் சிவன் சன்னிதியில் அமர்ந்து சிவன் பெயரை உச்சரித்தால் ஒரே நாளில் ஓர் ஆண்டிற்கான முழுப்பலனும் நமக்குக் கிடைக்கும். அதனால் தான் ஆண்களுக்கு “சிவராத்திரி” விரதம் சிறப்பான பலனைக் கொடுக்கின்றது.

    மாலை 6 மணி முதல் அதிகாலை 6 மணி வரை ஒவ்வொரு காலங்களிலும், சகல சிவாலயங்களிலும் பூஜைகள் நடைபெறும். அதில் பன்னிரெண்டு மணிக்காலம் எனப்படும் நேரத்தில் காவல் தெய்வமாக விளங்கும் பைரவருக்குரிய ஆலயத்தில் இருந்து அருள்வழங்கும் சிவபெருமானையும், உமையவளையும் வழிபட்டால் சீரும், சிறப்பும், செல்வாக்கும் நமக்கு வந்து வரும். இதுபோன்ற ஆலயத்தை வழிபடுவதற்கு முன்னால், விநாயகப் பெருமான் இருக்கும் ஆலயத்தில் விநாயகர், சிவன், உமையவளை வழிபட்டு வருவது நல்லது. இதுபோன்ற அமைப்புள்ள இரண்டு ஆலயங்களும் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள பிள்ளையார்பட்டி, வைரவன்பட்டி ஆகிய ஊர்களில் இருக்கின்றன.

    சிவராத்திரி முழுவதும் தூங்காமல் விழித்திருந்து சிவனின் நான்கு கால பூஜைகளிலும் சிறப்பாக வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும். இன்னல்கள் தீரும். மதிப்பும், மரியாதையும் உயரும். மகத்தான வாழ்வும் அமையும்.

    ‘சிவாய நம என்று சிந்தித்து இருப்பவர்களுக்கு அபாயம் ஒருநாளும் இல்லை’ என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட சிவனை, சிந்தையில் நிறுத்திக் கொண்டாட வேண்டிய நாளான ‘மகாசிவராத்திரி’ மாசி மாத தொடக்கமான முதல் தேதியில் (செவ்வாய்க்கிழமை) வருகிறது. கிருஷ்ணபட்சம் சதுர்த்தி திதியன்று, அமாவாசைக்கு முதல்நாள் இந்த விழா கொண்டாடப்படுகிறது.

    உமாதேவி விளையாட்டாக சிவபெருமான் கண்களைத் தன்னுடைய திருக்கரங்களால் மூடியதால், உலகமே இருளால் சூழப்பட்டது. அந்த நாள்தான் சிவராத்திரி என்று புராணங்கள் சொல்கின்றன. அந்த இரவில் ஒளி வேண்டித் தவித்த தேவர்களுக்கு எல்லாம் ஒளிகொடுக்க, சிவன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்ததாகவும் கருதப்படுகின்றது. எனவே இருள்மயமான வாழ்க்கை ஒளிமயமாக மாற எல்லோருமே இந்த விரதத்தை மேற்கொள்ள வேண்டும்.

    சிவராத்திரி அன்று நள்ளிரவு 11.30 மணி முதல் ஒரு மணி வரை லிங்கோத்பவர் காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்குக் கிடைக்கும். வலம்புரிச் சங்கால் அபிஷேகம் செய்து வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்த அன்னத்தை ஈசனுக்கு நைவேத்தியமாக படைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி பஞ்சாட்சரத்தை பலமுறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும்.

    ‘நமசிவாய நமசிவாய நல்லமந்திரம்

    நாளும் சொன்னால் நல்ல நேரம் நமக்கு வந்திடும்!

    பொற்கிழியைத் தருமி வாங்க உதவி செய்தவன்!

    புகழ்கொடியை நாட்டிவைக்க அருள்கொடுப்பவன்!

    நற்பதவி நமக்கு வர சிவனை வணங்குவோம்!

    நமசிவாய மந்திரத்தை நாளும் சொல்லுவோம்’

    என்று சிவன் பதிகம் எடுத்துரைக்கின்றது. எனவே சிவராத்திரியன்று சிவனை வணங்குவோம். செல்வ வளம் நாம்பெறுவோம்.

    சிவராத்திரி விரத பலன்

    ‘கோவில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்’ என்று அவ்வையார் பாடி வைத்தார். ஆலயம் இல்லாத ஊரில் அடியெடுத்து வைக்கக் கூட ஆன்றோர்கள் யோசித்திருக்கிறார்கள். அந்த ஆலயம் இரவு முழுவதும் திறந்திருக்கின்ற திருநாள்தான் சிவராத்திரி.

    வருடம் 365 நாட்களிலும் முறையாகச் சிவபெருமானை வழிபட முடியாதவர்கள் கூட, ஒரு நாளாகவும், திருநாளாகவும் கொண்டாப்படும் சிவராத்திரி இரவில் விடிய விடிய விழித்திருந்து சிவனை வழிபட்டால் நல்ல பலன் யாவும் வீடு வந்து சேரும்.

    இந்த விழிப்பு விரதமானது ‘மங்கலம் தரும் மகா சிவராத்திரி’ என்றும், ‘செல்வ வளம் தரும் சிவராத்திரி’ என்றும், ‘சொர்க்கத்தை வழங்கும் தூய சிவராத்திரி’ என்றும், ‘எதிர்ப்புகளை அகற்றும் இனிய சிவராத்திரி’ என்றும், ‘காரிய வெற்றி வழங்கும் கனிவான சிவராத்திரி’ என்றும் மக்களால் வர்ணிக்கப்படுகின்றது.

    சிவன் பெயரை உச்சரித்து உச்சரித்து சிறப்புகளை பெற்ற அறுபத்து மூவரைப் போல நீங்களும் மாற வேண்டுமானால் தேர்ந்தெடுக்கவேண்டிய நாள் சிவராத்திரி. வாழ்வில் இருளை அகற்றி ஒளியை மேற்கொள்ள நாம் விழித்திருந்து, விரதமிருந்து சிவனை வழிபட்டால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

    -“ஜோதிடக்கலைமணி” சிவல்புரிசிங்காரம்.
    Next Story
    ×