search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ராமதாஸ்"

    • கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறினாலும் நடைமுறைபடுத்தவில்லை.
    • முதல்வரின் காலை உணவு திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை.

    திண்டிவனம்:

    திண்டிவனம் அருகே உள்ள தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க.நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழ்நாட்டில் மின்கட்டணத்தை மீண்டும் உயர்த்தக்கூடாது. ஒருவர் பெயரில் தனித்தனி மின் இணைப்புகள் இருந்தால் அதனை ஒன்றாக்கும் முயற்சியில் மின்வாரியம் ஈடுபட்டுள்ளது. இந்நடவடிக்கை கண்டிக்கதக்கது. இது அனைத்து மக்களையும் கடுமையாக பாதிக்கும். மின் இணைப்புடன் ஆதார்கார்டை இணைக்கும்போதே இந்த அச்சம் ஏற்பட்டது. பல மின் இணைப்புகளை ஒன்றாக இணைக்கும் முயற்சியை கைவிட வேண்டும்.

    தி.மு.க.தேர்தல் அறிக்கை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். தேர்தல் அறிக்கையில் 10 சதவீதம் கூட நிறைவேற்றவில்லை. இது மக்களை ஏமாற்றும் செயல் என சொல்லலாம். 510 வாக்குறுதிகளில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என முதலமைச்சர் தெரிவிக்கவேண்டும்.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 3 ஆண்டுகளில் எவ்வித சாதனையும் செய்யவில்லை. மீதமுள்ள ஆண்டுகளில் சாதனை படைத்து முத்திரை பதிக்கவேண்டும்.

    கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களை விற்பனை செய்பவர்கள் ஒடுக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் கூறினாலும் நடைமுறைபடுத்தவில்லை. பா.ம.க.விற்கு தமிழ்நாடு குறித்த பெருங்கனவு உள்ளது. எங்களுக்கு 6 மாதங்கள் ஆட்சியை கொடுத்தால் நாங்கள் நிறைவேற்றுவோம். அல்லது நேர்மையான 10 அதிகாரிகளை ஒப்படைத்தால்கூட இதனை சாத்தியமாக்கி காட்டுவோம்.

    பாசனதிட்டங்களை நிறைவேற்றாத ஆட்சியாக தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சி உள்ளது.காமராஜர் காலத்தில் அணைகள் கட்டப்பட்டது. 57 ஆண்டுகளில் இக்கட்சிகளின் ஆட்சியில் அணைகள் கட்டப்படவில்லை. தி.மு.க. ஆட்சியில் 41 அணைகள் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இவைகள் அணைகள் என சொல்ல முடியாது. இந்த அணைகள் ஒரு டி. எம். சி. கொள்ளளவுகூட இல்லை.

    நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ 700 ஊக்கத்தொகை கொடுக்கவேண்டும். தெலுங்கானாவில் சன்ன ரக நெல்லுக்கு ரூ.500 வழங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடப்பாண்டில் 10 லட்சம் டன் நெல் கொள்முதல் குறைந்துள்ளது. 24-25 -ம் ஆண்டில் 40 லட்சம் டன் கொள்முதல் செய்யப்பட்டால் ரூ 2500 கோடி செலவாகும். இது சாத்தியமானதுதான். முல்லை பெரியாறு புதிய அணைக்கு அனுமதி தரக்கூடாது. வருகிற 28-ந் தேதி சுற்றுசூழல் குழு விவாதிக்க உள்ளது கண்டிக்கதக்கது. உச்சநீதி மன்றம் தன் தீர்ப்பை உறுதி செய்துள்ள நிலையில் கேரள அரசின் அணைகட்டும் முயற்சியை கைவிட மத்திய அரசு ஆணை பிறப்பிக்கவேண்டும்.

    முல்லை பெரியாறு அணை குறித்து தேர்தல் முடிவுக்கு பின் பிரதமரை சந்தித்து வலியிறுத்துவேன். முதல்வரின் காலை உணவு திட்டத்தை தவிர வேறு எந்த சாதனையும் செய்யவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காலியான இடங்களுக்கும் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை.
    • அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஏழைக் குடும்பங்களில் இருந்து வருபவர்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 2207 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். கடந்த 3 ஆண்டுகளில் 15 ஆயிரத்திற்கும் கூடுதலான ஆசிரியர்கள் பணி ஓய்வு பெற்றுள்ள நிலையில், அவர்களால் காலியான இடங்களுக்கும் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை. இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் ஆகியோரை தேர்ந்தெடுக்க அறிவிக்கைகள் வெளியிடப்பட்டிருக்கும் போதிலும், தேர்ந்தெடுக்கப்படவுள்ள ஆசிரியர்களின் எண்ணிக்கை காலியிடங்களின் எண்ணிக்கையை விட மிகக்குறைவாகவே இருக்கிறது என்பது தான் உண்மை.

    தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தால் தற்காலிக ஆசிரியர்களுக்கும், தற்காலிக பணியாளர்களுக்கும் பணி நிலைப்பு வழங்குவோம் என்று வாக்குறுதி அளித்திருந்த திமுக, இப்போது அதை செய்யவில்லை என்பது மட்டுமின்றி, காலியிடங்களையும் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவது நியாயமல்ல. தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது மிகவும் ஆபத்தானது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்துக் கூறியுள்ள நிலையில், அதை மனதில் கொண்டு நிரந்தர ஆசிரியர்களை அரசு நியமிக்க வேண்டும்.

    அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர் ஏழைக் குடும்பங்களில் இருந்து வருபவர்கள். அரசு பள்ளிகளில் போதிய எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இருந்தால் தான் அவர்களுக்கு தரமான கல்வி கிடைக்கும். இதை கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரந்தர ஆசிரியர்களைக் கொண்டு நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உழவர்கள் நெல்லை விற்க கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது.
    • நெல் சாகுபடிக்கான செலவுடன் ஒப்பிடும் போது இது போதுமானதல்ல.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் உழவர்கள் விளைவிக்கும் நெல்லுக்கு உரிய விலை கிடைக்க குவிண்டாலுக்கு ரூ.500 ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்று கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

    மத்திய அரசு நிர்ணயித்த கொள்முதல் விலையுடன் தமிழக அரசின் ஊக்கத்தொகையையும் சேர்த்து சன்னரக நெல்லுக்கு ரூ.2310, சாதாரண ரக நெல்லுக்கு ரூ.2265 வீதம் மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கப்படுகிறது. இந்த விலைக்கு உழவர்கள் நெல்லை விற்க கொள்முதல் நிலையங்களில் பல நாட்கள் காத்துக்கிடக்க வேண்டியுள்ளது. அதே நேரத்தில் நடப்பாண்டில் தனியார் நெல் வணிகர்கள் குவிண்டாலுக்கு ரூ.2500 முதல் ரூ.2700 வரை கொள்முதல் விலை வழங்கியதுடன், உழவர்களின் களத்துக்கே சென்று நெல்லை கொள்முதல் செய்தனர். அதனால், உழவர்களுக்கு கை மீது அதிக தொகை கிடைத்ததால் பெரும்பான்மையான உழவர்கள் தனியாரிடம் நெல்லை விற்பனை செய்தனர். அரசின் நெல் கொள்முதல் அளவு குறைந்ததற்கு இதுதான் முக்கியக் காரணம் ஆகும்.

    தமிழ்நாட்டில் வரும் செப்டம்பர் ஒன்றாம் தேதி தொடங்கவுள்ள 2024-25-ம் கொள்முதல் ஆண்டில் சன்னரக நெல்லுக்கான கொள்முதல் விலை ரூ.2300-ரூ2350 என்ற அளவில் மத்திய அரசால் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நெல் சாகுபடிக்கான செலவுடன் ஒப்பிடும் போது இது போதுமானதல்ல. நடப்பாண்டிலாவது நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3000 கொள்முதல் விலை என்ற இலக்கை எட்ட வேண்டுமானால் ஒரு குவிண்டாலுக்கு குறைந்தது ரூ.700 ஊக்கத் தொகையாக தமிழக அரசு வழங்க வேண்டும். இதன் மூலம் தான் உழவர்களின் கண்ணீரைத் துடைக்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.
    • நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள குறைகளைக் களைய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள் மற்றும் இளம் தாய்மார்களுக்கான மகப்பேறு நிதியுதவி திட்டத்தின் கீழ் 2 லட்சத்திற்கும் கூடுதலான பெண்களுக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.14,000 நிதி மற்றும் ரூ.4000 மதிப்புள்ள ஊட்டச்சத்துப் பெட்டகம் பல மாதங்களாக வழங்கப்படவில்லை என்று வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன. மகப்பேறு நிதியுதவி வழங்கப்படுவதில் செய்யப்படும் தாமதம் கண்டிக்கத்தக்கது.

    மகப்பேறு நிதியுதவி திட்டத்தைச் செயல்படுத்துவதில் உள்ள குறைகளைக் களைந்து 2 லட்சம் தாய்மார்களுக்கும் நீண்ட காலமாக வழங்கப்படாமல் உள்ள மகப்பேறு நிதியுதவியை உடனடியாக வழங்கவும், இனி பதிவு செய்யும் கருவுற்ற பெண்களுக்கு குறித்த காலத்தில் மகப்பேறு நிதி வழங்கவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
    • இது தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் மறுநாளே விடுதலை ஆகின்றனர்.

    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது;-

    ஆந்திரா, ஒடிசா போன்ற 96 தொகுதிகளுக்கு பாராளுமன்ற தேர்தல் இன்று நடைபெறுகிறது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று 3-வது முறையாக மோடி மீண்டும் ஆட்சி அமைப்பார். ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென்பதை பா.ம.க. வலியுறுத்தி வருகிற நிலையில், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாமல் தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஜாதிவாரி கணக்கெடுப்பு பீகார், ஆந்திரா, கந்நாடகாவில் நடத்தப்பட்டு வருகிறது. தெலுங்கானாவில் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இனியும் மத்திய அரசு தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டுமென காலம் கடத்தாமல், தமிழ்நாடு அரசு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும்

    சமூகநீதி பற்றி சில கட்சிகள் பேசினாலும், விடாமல் பேசி வருவது பா.ம.க. தான். சமூக நீதி விவகாரத்தில் செய்த தவறுகளை தி.மு.க. அரசு திருத்திக்கொள்ள வேண்டும். தமிழக அரசு நினைத்திருந்தால் ஒரு மாதத்தில் இடஒதுக்கீடு வழங்கி இருக்கலாம். ஆனால் 2 ஆண்டுகளாகியும் இடஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கவில்லை.

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் பா.ம.க. போட்டியிடுவது குறித்து கூட்டணி கட்சியினருடன் பேச்சுவார்த்தை நடத்தி போட்டியிட முடிவு செய்யப்படும். மேகதாதுவில் அணைகட்டுவோம் என அம்மாநில அரசு கூறுவது கண்டிக்கதக்கது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் குரல் கொடுக்க வேண்டும். ஆனால் அவர் அமைதி காத்து வருகிறார்.

    தமிழகத்தில் தெருவுக்கு தெரு கஞ்சா போதை பொருட்கள் தாராளமாக கிடைப்பதால், பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனை தமிழக அரசும், போலீசாரும் நினைத்தால் ஒருவாரத்தில் கஞ்சா நடமாட்டத்தை கட்டுபடுத்தலாம். போலீசாருக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. இது தொடர்பாக கைது செய்யப்படுபவர்கள் மறுநாளே விடுதலை ஆகின்றனர். ஆந்திராவிலிருந்து கஞ்சா வருவதாக கூறும் போலீசார், ஆந்திராவிற்கே சென்று கஞ்சா தோட்டங்களை அழிக்கலாம். அதனை ஏன் செய்யவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

    • தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி.
    • நம் ஒவ்வொருவரையும் தீராக்கடனாளியாக்கிய அன்னையரை உலக அன்னையர் நாளில் வணங்குவோம்.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    உலகின் ஈடு இணையற்ற உறவு, ஒப்பீடற்ற தியாகத்தின் திருவுருவம், மனிதர்களுக்கு மாதா, பிதா, குருவாக இருந்து வளர்த்தெடுக்கும் தெய்வம், தந்தை தொடங்கி, கணவன், மகன் என பலரின் வெற்றிக்கு பின்னிருக்கும் சக்தி.

    மனிதவாழ்வின் அனைத்துக்கும் ஆதாரமாக திகழ்பவர்கள் அன்னையர்களே. நீங்கள் இன்றி நாங்கள் இல்லை என்ற உண்மை அவர்களுக்கு மட்டுமே பொருந்தும். நம் ஒவ்வொருவரையும் தீராக்கடனாளியாக்கிய அன்னையரை உலக அன்னையர் நாளில் வணங்குவோம்; அவர்களின் தியாகத்தைப் போற்றுவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மனித தேவதைகளாக மாறி மருத்துவப் பணி செய்யும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • உலகில் தாய்க்கு இணை யாருமில்லை. அத்தகைய தாய் பட்டத்தைப் பெற்றவர்கள் செவிலித்தாய்கள் தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள செவிலியர் நாள் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

    போர்க்களத்தில் காயமடைந்து உயிருக்கு போராடிய வீரர்களுக்கு கைவிளக்கேந்திச் சென்று மருத்துவம் அளித்த கைவிளக்கேந்திய காரிகை பிளோரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையாரின் பிறந்தநாளான இன்று உலக செவிலியர் நாளாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் மனித தேவதைகளாக மாறி மருத்துவப் பணி செய்யும் செவிலியர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    உலகில் தாய்க்கு இணை யாருமில்லை. அத்தகைய தாய் பட்டத்தைப் பெற்றவர்கள் செவிலித்தாய்கள் தான். எந்தவித வெறுப்பும், சலிப்பும் இல்லாமல் மனிதர்களுக்கு சேவை செய்யும் உன்னத பிறவிகள் அவர்கள். அவர்களின் உழைப்பும், தியாகமும் போற்றப்பட வேண்டும். அவர்களை இந்த நாளில் வணங்குவோம்; நன்றி செலுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம்.
    • சமூக நீதிப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசு அதை செய்யவில்லை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு மற்றும் புதுவையில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 91.55 சதவீத மாணவ, மாணவியர் தேர்ச்சி பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. தேர்வில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் பொதுத்தேர்வில் தோற்ற மாணவர்கள் அதை நினைத்து கவலையடையக்கூடாது. அடுத்த மாதமே துணைத்தேர்வுகள் நடத்தப்படவுள்ள நிலையில், அதில் பங்கேற்று தேர்ச்சியடைந்து மேல்நிலை வகுப்பில் சேர வாழ்த்துகிறேன்.

    தேர்ச்சி விகிதங்களைப் பொறுத்தவரை இந்த ஆண்டும் வடக்கு மாவட்டங்கள் தான் கடைசி இடங்களைப் பிடித்துள்ளன என்பது கவலையும், வருத்தமும் அளிக்கிறது.

    வட மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையும், கட்டமைப்பு வசதிகள் இல்லாததும் தான் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு முதன்மைக் காரணம். வட மாவட்டங்களின் தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இரண்டாவது காரணம் அங்குள்ள மக்களின் சமூக, பொருளாதாரக் காரணிகள் தான். இந்த இருகாரணங்களையும் மாற்ற வேண்டும் என்று தான் பா.ம.க. பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், சமூக நீதிப் பார்வையும், தொலைநோக்குப் பார்வையும் இல்லாத அரசு அதை செய்யவில்லை.

    இனியாவது வட மாவட்டங்கள் மீதான பாராமுகத்தையும், பாகுபாட்டையும் கைவிட்டு, வடமாவட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தவும், அப்பகுதிகளின் கல்வி வளர்ச்சிக்காகவும் சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பணியிடம் காலியாகி விடும்.
    • பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    ஆசிரியர்கள் பணியிட மாறுதலில் கடைபிடிக்கப்படும் அடிப்படை நடைமுறை, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கிவிட்டு, அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பது தான். இது தான் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வரும் வழக்கம் ஆகும்.

    ஆனால், 2021-ந்ஆண்டில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இந்த நடைமுறையை காற்றில் பறக்கவிட்டு, பதவி உயர்வு வழங்குவதற்கு முன்பாகவே பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தும் புதிய நடை முறையை புகுத்தி இருக்கிறது.

    கல்வியாண்டு தொடங்குவதற்கு முன்பாகவே ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். பதவி உயர்வு பெறுபவர்களுக்கு, அந்த நேரத்தில் காலியாக உள்ள இடங்களில் அவர்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பது தான் விதி ஆகும். அது அவர்களின் உரிமை. அப்படி செய்வது தான் பணியிட மாறுதலில் குழப்பங்களைத் தடுக்கும்.

    ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் நேரடியாக பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டால், அதற்கு முன் காலியாக உள்ள அனைத்து இடங்களும் நிரப்பப்பட்டு விடும். அத்தகைய சூழலில் பதவி உயர்வு பெறும் ஆசிரியர்களுக்கு ஒதுக்கீடு செய்ய போதிய இடங்கள் இருக்காது.

    அதனால், விருப்பம் இல்லாமல், அதிகாரிகளால் ஒதுக்கப்படும் இடங்களில் சேர வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதுமட்டுமின்றி, ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் போது அவர்கள் ஏற்கனவே வகித்து வந்த பணியிடம் காலியாகி விடும். அதனால், அந்த பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் பாதிக்கப்படுவார்கள்.

    ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல், பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்தப்படுவதன் நோக்கமே, பணியிட மாறுதல் முடிவடைந்த பிறகு பதவி உயர்வு வழங்குவதன் மூலம் ஏற்படும் காலியிடங்களில் தங்களுக்கு வேண்டியவர்களை பணம் வாங்கிக் கொண்டு இடமாறுதலில் அமர்த்தலாம் என்பது தான் என்று குற்றச்சாட்டுகள் எழுப்பப்படுகின்றன. அந்தக் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளி விட முடியாது.

    எனவே புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள நடைமுறையை ரத்து செய்து விட்டு, பதவி உயர்வு வழங்க வேண்டிய ஆசிரியர்களுக்கு முதலில் பதவி உயர்வு வழங்கி விட்டு, அதனால் ஏற்படும் காலியிடங்களையும் சேர்த்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மக்களும், சமூக அமைப்புகளும் போட்டிப்போட்டுக் கொண்டு மரங்களை வளர்க்கத் தொடங்குவோம்.
    • மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்றுவோம்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்தின் தீய விளைவுகளைத் தடுக்க மரங்களை அதிக எண்ணிக்கையில் நட வேண்டும் என்ற குரல்கள் ஓங்கி ஒலிக்கத் தொடங்கி உள்ள நிலையில், தமிழகத்தின் வனப்பரப்பு வேகமாக குறைந்து வருவதாகவும், அடுத்த 25 ஆண்டுகளில் தமிழகத்தின் வனப்பரப்பு நிலைமை தலைகீழாக மாறிவிடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

    தமிழ்நாட்டில் வேலூர், சேலம், திருத்தணி, திருவண்ணாமலை , திருச்சி, அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களை சுற்றியுள்ள மலைப் பகுதிகளையும், சமுதாயக் காடுகளையும் பசுமைப் பகுதிகளாக மாற்றி, அவற்றில் அதிக மரங்களை வளர்க்க வேண்டும்.

    அதன் மூலம், மலையோர நகரங்களின் வெப்பத்தை குறைக்க முடியும். சென்னை போன்ற மக்கள் அடர்த்தி மிக்க நகரங்களில் காடுகளை வளர்க்க முடியாது என்றாலும் கூட, அடுக்கு மாடி கட்டிடங்கள் கட்டப்படும் போது ஒதுக்கப்படும் திறந்தவெளி பரப்புக்கான நிலங்களில் மியாவாக்கி முறையில் நகர்ப்புற அடர்வனங்களை உருவாக்கலாம்.

    தமிழ்நாட்டில் வெப்பம் அதிகம் நிலவும் பகுதிகளில் உள்ள மலைகளில் மரங்களை அதிக அளவில் வளர்ப்பதற்காக ஹெலிகாப்டர்கள் மூலம் விதைப்பந்துகளை வீச வேண்டும். மரங்களை அதிக அளவில் நட்டு வளர்ப்பதன் மூலம் கோடைக்கால வெப்ப நிலையில் 2 முதல் 8 டிகிரி செல்சியஸ் வரை குறைக்க முடியும்.

    இந்த உன்னத நிலையை அடைவதற்காக அரசும், மக்களும், சமூக அமைப்புகளும் போட்டிப்போட்டுக் கொண்டு மரங்களை வளர்க்கத் தொடங்குவோம்.

    மரம் நடுவதை மாபெரும் இயக்கமாக மாற்றுவோம். அதன் மூலம், நடப்பு பத்தாண்டில் இல்லா விட்டாலும், அடுத்த பத்தாண்டிலாவது வெப்பத்தின் கடுமையின்றி இதமான வெப்பநிலையில் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்த உறுதியேற்போம்.

    இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • தமிழ்நாட்டில் 17,970 மெகாவாட் அனல் மின் திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது.
    • மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசும், மின்சார வாரியமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களைத் தவிர்த்து, மீதமுள்ள மாவட்டங்களில் தொடர்ந்து அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

    ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, மதுரை, தேனி, திண்டுக்கல், தஞ்சாவூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், மயிலாடுதுறை, சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் தினமும் ஒரு மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

    தமிழ்நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து 21 ஆயிரம் மெகாவாட் என்ற அளவைத் தொட்டுள்ளது. மத்திய மின் தொகுப்புகள், தனியார் மின்னுற்பத்தி நிறுவனங்கள் ஆகியவற்றிடம் இருந்து மின்சாரம் வாங்கினாலும் தினமும் 300 முதல் 400 மெகாவாட் வரை மின்சாரம் பற்றாக்குறை ஏற்படுவதாகவும், அதை சமாளிக்கவே மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படுவதாகவும் மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது மக்களுக்கு மின்சாரம் வழங்குவதில் தமிழக அரசும், மின்சார வாரியமும் தோல்வியடைந்து விட்டதையே காட்டுகிறது.

    தமிழ்நாட்டில் 17,970 மெகாவாட் அனல் மின் திட்டங்களை அடுத்த 10 ஆண்டுகளில் செயல்படுத்தப் போவதாக தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், அதிலும் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை. நிலுவையில் உள்ள மின்திட்டங்கள் அனைத்தும் விரைவாக செயல்படுத்தப்பட்டு, தமிழ்நாட்டுக்கான மின் தொகுப்பில் சேர்க்கப்பட வேண்டும். அதன் மூலம் தமிழ்நாட்டில் மின்வெட்டைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    • வணிகர்கள் இன்றைய சூழலில் வணிகம் சார்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
    • உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்களும் அவர்கள் தான்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே திரைகடலோடியவர்கள் வணிகர்கள் தான். வணிகர்கள் வருவாய் ஈட்டுவதைக் கடந்து சமூகத்திற்கு ஆற்றிய தொண்டுகள் அதிகம். உலகப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழ்பவர்களும் அவர்கள் தான். நாட்டின் வளர்ச்சிக்கு துணையாக இருக்கும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதன் மூலம் அவர்களையும் வளர்த்து, நாட்டின் பொருளாதாரத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வணிகர்கள் இன்றைய சூழலில் வணிகம் சார்ந்து பல்வேறு நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகின்றனர். வணிகர்கள் அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்பதன் மூலம் அனைத்து சிக்கல்களையும் களைந்து வணிகத்தில் வளர்ச்சியடைய இந்த நாளில் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×