search icon
என் மலர்tooltip icon

    டென்னிஸ்

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
    X

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ்: ஜோகோவிச், சபலென்கா இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்

    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
    • நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, தரவரிசையில் 34-வது இடத்தில் உள்ள இரினா கெமிலியா பெகுவை (ருமேனியா) எதிர்கொண்டார்.

    1 மணி 18 நிமிடம் நடந்த இந்த ஆட்டத்தில் சபலென்கா 6-3, 6-2 என்ற நேர்செட்டில் இரினா கெமிலியா பெகுவை தோற்கடித்து டபிள்யூ.டி.ஏ.சர்வதேச போட்டியில் 19-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். மற்றொரு அரைஇறுதியில் தகுதி சுற்று மூலம் ஏற்றம் கண்ட 18 வயது செக்குடியரசு வீராங்கனை லின்டா நோஸ்கோவா 6-3, 1-6, 6-3 என்ற செட் கணக்கில் உலக தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ள ஆன்ஸ் ஜாபியருக்கு (துனிசியா) அதிர்ச்சி அளித்து இறுதிப்போட்டியை எட்டினார்.

    இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் சபலென்கா-லின்டா நோஸ்கோவா பலப்பரீட்சை நடத்துகின்றனர். இதன் இரட்டையர் பிரிவு இறுதிபோட்டியில் அமெரிக்காவின் ஆசியா முகமத்-டெய்லர் டவுன்சென்ட் ஜோடி 6-2, 7-6 (7-2) என்ற நேர்செட்டில் ஸ்டாம் ஹன்டெர் (ஆஸ்திரேலியா)-கேத்ரினா சினியகோவா (செக்குடியரசு) இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

    ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் தரவரிசையில் 33-வது இடத்தில் உள்ள அமெரிக்க வீரர் செபாஸ்டியன் கோர்டா, தரநிலையில் 37-வது இடத்தில் இருக்கும் யோஷிஹிடோ நிஷிகாவை (ஜப்பான்) சந்தித்தார். விறுவிறுப்பான இந்த மோதலில் செபாஸ்டியன் கோர்டா 7-6 (7-5), 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த போது யோஷிஹிடோ காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். இதனால் செபாஸ்டியன் கோர்டா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.

    இன்னொரு ஆட்டத்தில் 21 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், தற்போது தரவரிசையில் 5-வது இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர்செட்டில் முன்னாள் நம்பர் ஒன் வீரரும், தரநிலையில் 7-வது இடத்தில் உள்ளவருமான டேனில் மெட்விடேவ்வை (ரஷியா) தோற்கடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    இந்த ஆட்டம் 1 மணி 30 நிமிடம் நடந்தது. இறுதிப்போட்டியில் ஜோகோவிச், செபாஸ்டியன் கோர்டாவை சந்திக்கிறார்.

    Next Story
    ×