search icon
என் மலர்tooltip icon

    தொழில்நுட்பம்

    மங்களா மணி
    X
    மங்களா மணி

    டெக் துறையில் மாஸ் காட்டும் இந்திய பெண் ஆளுமைகள்

    அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் இந்தியாவை சேர்ந்த ஆளுமை மிக்க பெண் தலைவர்களாக விளங்குவோர் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    உலகின் மற்ற நாடுகளை போன்றே இந்தியாவிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையில் ஆண்களின் ஆதிக்கம் ஓங்கி ஒலிக்கிறது. கடந்த காலங்களில், பல்வேறு துறைகளில் பெண்கள் கால்பதிக்க துவங்கிவிட்டனர். சமீபத்தில் பலதுறைகளில் சாதனை புரிவதை பெண்கள் வாடிக்கையான நிகழ்வாக மாற்றி வருகின்றனர்.

    இதுபோன்ற சூழலுக்கு பலர் வித்திட்டுள்ளனர். அவ்வாறு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் சிறந்து விளங்கும் இந்திய பெண்கள் ஆளுமைகளாக மாறி இஸ்ரோ மற்றும் இதர முன்னணி நிறுவனங்களில் பெரும் பதவிகளில் இருந்தபடி சத்தமின்றி பெரும் சாதனைகளை புரிந்து இருக்கின்றனர். 

    டெஸ்ஸி தாமஸ்:

    இந்தியாவின் முதல் ஏவுகணைப் பெண் எனும் பெருமைக்குரியவர் டெஸ்ஸி தாமஸ். இவர் இந்தியாவில் ஏவுகணை திட்டம் ஒன்றின் தலைவராக பொறுப்பேற்ற முதல் பெண்மணி ஆவார். இந்தியாவின் பாதுகாப்பு மேம்பாடு மற்றும் ஆராய்ச்சி அமைப்பில் அக்னி 4 ஏவுகணையின் திட்ட இயக்குனராக இருந்தார். இதுதவிர அக்னி ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் முக்கிய தொழில்நுட்பங்களை இவர் வடிவமைத்து இருக்கிறார்.

     முத்தையா வனிதா மற்றும் டெஸ்ஸி தாமஸ்

    முத்தையா வனிதா:

    இஸ்ரோவில் விண் கோள்களுக்கிடையிலான திட்டத்தை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்ற முதல் பெண் முத்தையா வனிதா. சென்னையை சேர்ந்த இவர் சந்திராயன் 2 திட்டத்தின் இயக்குனர் ஆவார். மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இவர் இஸ்ரோவில் பணியாற்றி இருக்கிறார். 2006 ஆம் ஆண்டு இவர் சிறந்த பெண் ஆராய்ச்சியாளர் விருதை வென்றார்.

    ரித்து கரிதால்:

    சந்திராயன் 2 திட்டத்தில் பணியாற்றிய ரித்து கரிதால் விண்வெளியில் செயற்கைக்கோள் சீராக இயங்க செய்யம் பணிகளில் ஈடுபட்டார். 2007 ஆம் ஆண்டு இஸ்ரோவில் சேர்ந்த ரித்து கரிதால் இந்தியாவின் ராக்கெட் பெண்மணி என்றும் அழைக்கப்படுகிறார். இதுமட்டுமின்றி இஸ்ரோவின் மங்கல்யான் திட்டத்திலும் பணியாற்றினார். 2007 ஆம் ஆண்டு இஸ்ரோவின் இளம் ஆராய்ச்சியாளர் விருதை முன்னாள் குடியரசு தலைவர் அப்துல் கலாமிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.

     ரித்து கரிதால் மற்றும் ககன்தீப் காங்

    ககன்தீப் காங்:

    இந்திய தொற்றுநோய் மருத்துவத்துறையின் மூத்த விஞ்ஞானியாக விளங்கியவர் தான் ககன்தீப் காங். பெலோ ஆப் ராயல் சொசைட்டி உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட முதல் இந்திய பெண்மணி ககன்தீப் காங். இந்திய மருத்துவத்துறையில் சிறந்து விளங்கும் விஞ்ஞானிகளில் இவர் ஒருவர் ஆவார். இவர் மத்திய அறிவில் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயிரிதொழில்நுட்பத்துறையின் கீழ் இயங்கும் Translational Health Sciences and Technology Institute (THSTI) அமைப்பின் நிர்வாக இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். 

    மங்களா மணி:

    அண்டார்ட்டிக்காவில் 403 நாட்கள் செலவழித்த முதல் இந்திய பெண் ஆராய்ச்சியாளர் மங்களா மணி. இந்த பணிக்கு தேர்வாகும் முன் இதுபோன்ற பனிச்சூழலுக்கு இவர் பரிச்சயமற்றவர் ஆவார். அண்டார்டிகாவில் உள்ள பாரதி ஆராய்ச்சி மையத்திற்கு பயணம் மேற்கொள்ள 2016-ம் ஆண்டு தேர்வான 23 பேர் அடங்கிய குழுவில் இவரும் இடம்பெற்றிருந்தார்.  
    Next Story
    ×