என் மலர்
தொழில்நுட்பம்

நோக்கியா ஆலை
ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா ஆலையை கையகப்படுத்திய பின்லாந்து நிறுவனம் - 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
பின்லாந்தை சேர்ந்த சால்காம்ப் நிறுவனம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள நோக்கியா ஆலையை கையகப்படுத்தியது. இதனால் அங்கு 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க இருக்கிறது.
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ஜப்பானின் முன்னணி செல்போன் நிறுவனமான நோக்கியா தொழிற்சாலை செயல்பட்டு வந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் பணியாற்றி வந்தனர். ஆனால், மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய பல கோடி ரூபாயை பாக்கி வைத்திருந்தது. அந்த பணத்தை வசூலிக்க அரசு தீவரமாக நடவடிக்கை மேற்கொண்டது.
இதனால் 2014-ம் ஆண்டு நோக்கியா ஆலையை மூடி விட்டு வெளியேறினார்கள். அந்த ஆலையை மீண்டும் செயல்படுத்த மத்திய- மாநில அரசுகள் தொடர்ந்து முயற்சித்து வந்தன. இந்த நிலையில் பின்லாந்து நாட்டை சேர்ந்த சால்காம்ப் என்ற நிறுவனம் நோக்கியா வளாகத்தை கையகப்படுத்தி உள்ளது.
சால்காம்ப் நிறுவனம் செல்போன் உதிரிப்பாகங்களை தயாரிப்பதில் உலக அளவில் முன்னணி நிறுவனமாக செயல்படுகிறது. குறிப்பாக செல்போன் சார்ஜர்கள், அடாப்டர்கள் மற்றும் பல்வேறு போன் உதிரிப்பாகங்கள் ஆகியவற்றை இந்த நிறுவனம் தயாரிக்கிறது. ஆப்பிள் போன் நிறுவனத்துக்கு தேவையான பெரும்பாலான உதிரிப்பாகங்களை சால்காம்ப் நிறுவனம்தான் தயாரித்து வழங்குகிறது.
ஏற்கனவே இந்த நிறுவனம் சென்னையில் இரண்டு இடங்களிலும், டெல்லி அருகே உள்ள நொய்டாவில் ஒரு இடத்திலும் தொழிற்சாலைகளை நடத்தி வருகிறது. இப்போது நோக்கியா ஆலையை வாங்கி உள்ள சால்காம்ப் செல்போன் உதிரிப்பாகங்கள் தயாரிக்கும் தொழிலை அங்கு தொடங்க உள்ளது.
நோக்கியா ஆலை மற்றும் அதன் அருகே உள்ள லைட் ஆன் மொபைல் ஆகிய நிறுவனங்களையும் சால்காம்ப் வாங்கி இருக்கிறது. ரூ.350 கோடியில் இவை வாங்கப்பட்டு உள்ளன. அதாவது நோக்கியா ஆலையில் 55 சதவீத இடத்தை சால்காம்ப் நிறுவனம் வாங்கி இருப்பதாக அந்த நிறுவனத்தின் இந்திய மேலாண்மை இயக்குனர் சசிகுமார் தெரிவித்தார்.
நோக்கியா ஆலை மொத்தம் 10 லட்சம் சதுரடி பரப்பளவு கொண்டது. அதில் உள்ள கட்டிடங்களை தனது உதிரிப்பாக உற்பத்திக்காக சால்காம்ப் பயன்படுத்துகிறது. அடுத்த ஆண்டு இதன் உற்பத்தியை தொடங்க இருக்கிறது. அப்போது ரூ.2000 கோடி அளவுக்கு முதலீடு செய்ய உள்ளது.

ஆலை தொடங்கியதும் சால்காம்ப் நிறுவனம் 7000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும். பின்னர் மேலும் விரிவுபடுத்தப்பட்டு 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். இது சம்பந்தமாக மத்திய தகவல் தொழில்நுட்ப மந்திரி ரவிசங்கர் பிரசாத் கூறியதாவது:-
சால்காம்ப் நிறுவனம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து செயல்பட தொடங்கும். அதன்பிறகு படிப்படியாக 5 ஆண்டுகளில் ரூ.2000 கோடி முதலீடு செய்ய உள்ளனர். இதன் மூலம் 10,000 பேருக்கு நேரடியாகவும், 50,000 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு கிடைக்கும்.
ஆப்பிள் போன் நிறுவனம் தனது ஐபோன் எக்ஸ்.ஆர். போனை இந்தியாவில் தயாரித்து ஏற்றுமதி செய்ய உள்ளது. செல்போன் உற்பத்தியில் முக்கிய மையமாக இந்தியா உருவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் சென்னையில் உள்ள ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில உற்பத்தியை தொடங்குகிறது. அங்கு இரண்டு வகையான ஐபோன்கள் உற்பத்தி செய்யப்பட இருக்கின்றன. அந்த பகுதியில் மேலும் பல செல்போன் உதிரிப்பாகங்கள் தொழிற்சாலைகள் வர இருப்பதாக தமிழக அதிகாரி ஒருவர் கூறினார்.
2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் சால்காம்ப் நிறுவனம் தமிழகத்தில் ரூ.500 கோடி அளவுக்கு முதலீடு செய்ய ஒப்பந்தம் ஏற்படுத்தியது. அதன் அடிப்படையில் தான் தனது உற்பத்தி நிறுவனங்களை சென்னையில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story






