search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் பட்டதாரி"

    • 68 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
    • தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம்.

    திருப்பூர் :

    வேளாண் பட்டதாரிகள் சுயதொழில் தொடங்க வருகிற 25-ந் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    திருப்பூர் மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நடபாண்டில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 68 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட 68 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு படித்த இளைஞர்களை தொழில் முனைவோர் ஆக்கும் நோக்கத்தில் ஒரு பயனாளிக்கு 25 சதவீதம் மானியமாக அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதனம் மானியம் வழங்கப்படும்.

    தேர்வு செய்யப்பட்ட பயனாளிகள் அரசு வங்கி மற்றும் தனியார் நிறுவனங்களிடம் இருந்து கடன் பெறலாம். இந்த திட்டத்தின் கீழ் பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம், வேளாண்மை உள்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்க கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுயதொழில்கள் அமைக்க வேண்டும். பயன் அடைவதற்கு 21 வயது முதல் 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

    வேளாண்மை, தோட்டக்கலை மற்றும் வேளாண்மை பொறியியல் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு தனியார் நிறுவனங்களில் பணிகளில் இருக்கக்கூடாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே பயன் பெற முடியும். வங்கி மூலம் கடன் பெற்ற தொழில் புரிவோரின் நிறுவனத்தின் உரிமையானது தனியுரிமையாக இருக்க வேண்டும்.

    தொழில் தொடங்க விரும்பும் வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் விரிவான திட்ட அறிக்கையை கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம், வங்கியில் இருந்து பெறப்பட்ட கடன் ஒப்புதல் ஆவணம் உள்ளிட்ட ஆவணங்களை இணைத்து வருகிற 25-ந் தேதிக்குள் திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களுக்கு சம்பந்தப்பட்ட வட்டார வேளாண்மை உதவி இயக்குனர்களையும் அல்லது வேளாண் துணை இயக்குனரை 94875 61146 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

    இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    ×