search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வி‌ஷவாயு"

    விழுப்புரம் அருகே கிணற்றில் இறங்கிய போது வி‌ஷவாயு தாக்கியதில் விவசாயி உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    விழுப்புரம்:

    விழுப்புரம் அருகே உள்ள ஆலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜாராமன் (வயது 55). விவசாயி. இவருக்கு அதே பகுதியில் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. அங்கு 30 அடி ஆழத்தில் பழைய கிணறு ஒன்று உள்ளது. அந்த கிணற்றில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. கிணற்றுக்குள் இருந்த மோட்டார் பழுதாகி இருந்தது.

    அதனை சரி செய்ய ராஜாராமன் எண்ணினார். அதன்படி இன்று மதியம் ஆலத்தூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பன்னீர் (35) என்பவருடன் சேர்ந்து ராஜாராமன் தனது நிலத்துக்கு சென்றார்.

    பின்னர் அவர்கள் 2 பேரும் கயிறு மூலம் கிணற்றுக்குள் இறங்கினர். பின்னர் மோட்டாரை சரி செய்ய முயன்றனர். பழைய கிணறு என்பதால் கிணற்றில் வி‌ஷவாயு பரவி இருந்தது. அப்போது அவர்களை வி‌ஷவாயு தாக்கியது.

    இதனால் அவர்கள் 2 பேருக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டு கிணற்றுக்குள் ளேயே மயங்கி விழுந்தனர். இதைப்பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் குடத்தில் தண்ணீர் எடுத்து வந்தனர். பின்னர் அந்த தண்ணீரை மேலே இருந்து கிணற்றுக்குள் மயங்கி கிடந்த ராஜாராமன், பன்னீர் ஆகியோர் மீது ஊற்றினர்.

    ஆனால், அவர்களுக்கு மயக்கம் தெளியவில்லை. இதையடுத்து அங்கு கூடிய பொதுமக்கள் கிணற்றுக்குள் இறங்கினர். 2 பேரையும் மீட்டு கிணற்றை விட்டு மேலே கொண்டு வந்தனர்.

    பின்னர் சிகிச்சைக்காக விழுப்புரத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே ராஜாராமன், பன்னீர் ஆகிய 2 பேரும் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இது பற்றி தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் மற்றும் போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் 2 பேரின் உடலும் அதே ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ×