search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாய கடன் தள்ளுபடி"

    • மின் திருட்டு தொடர்பாக விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் வழக்குகளை திரும்பப் பெறுவோம்
    • குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக, வேளாண் விளைபொருட்களை வாங்குவதை தடை செய்ய சட்டம்

    அகமதாபாத்:

    குஜராத் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இப்போதே அரசியல் கட்சிகள் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. வாக்குறுதிகளையும் வாரி வழங்கி வருகின்றன.

    டெல்லி, பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றிய ஆம் ஆத்மி கட்சி, குஜராத்திலும் வலுவாக காலூன்றும் முயற்சியில் இறங்கி உள்ளது. இதற்காக பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி வருகிறது. ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைத்தால் ஒவ்வொரு வீட்டிற்கும் மாதம் 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும், வேலைவாய்ப்பில்லாமல் கஷ்டப்படும் இளைஞர்களுக்கு உதவித்தொகை, பெண்களுக்கான உதவித் தொகை உள்ளிட்ட வாக்குறுதிகளை அளித்துள்ளது.

    இந்நிலையில், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியும் குஜராத் மக்களை கவர இன்று பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியது. அகமதாபாத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில காங்கிரஸ் தலைவர் ஜெகதிஷ் தாக்கூர் கூறியதாவது:-

    குஜராத்தில் காங்கிரஸ் ஆட்சியமைத்தால் 3 லட்சம் ரூபாய் வரையிலான விவசாயக் கடன் தள்ளுபடி செய்யப்படும். குஜராத் மின் மிகை மாநிலம் என்று இப்போது ஆளும் பாஜக கூறினாலும், விவசாயிகளுக்கு விவசாயத்திற்கு போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளுக்கு 10 மணி நேரம் இலவச மின்சாரம், அதுவும் பகலில் வழங்கப்படும். மின் திருட்டு தொடர்பாக விவசாயிகளுக்கு விதிக்கப்பட்ட அபராதம் மற்றும் மின் திருட்டு வழக்குகளையும் திரும்பப் பெறுவோம்

    குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு குறைவாக, வேளாண் விளைபொருட்களை வாங்குவதை தடை செய்யும் சட்டத்தை கொண்டு வருவோம். விவசாயிகளிடமிருந்து 20 கிலோ வேளாண் விளைபொருட்களை வாங்குவதற்கு காங்கிரஸ் அரசாங்கம் கூடுதலாக 20 ரூபாய் போனஸ் கொடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×