search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழ்த்"

    நாடு முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தலைவர்கள் கிறிஸ்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Christmas
    சென்னை:

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி:-


    இறைமகன் இயேசு மனிதராய் அவதரித்த புனித நாளை கிறிஸ்துமஸ் பெருவிழாவாகக் கொண்டாடி மகிழும் அன்புச் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எங்கள் இதயங்கனிந்த கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம்.

    ஏழைகளையும், எளிய மனத்தோரையும், கைவிடப்பட்டோரையும் ‘‘இறைவனின் பிள்ளைகள் நீங்கள்’’ என்று வாஞ்சையோடு அரவணைத்து மானிட இனம் நல்வழியில் வாழ, புதிய ஏற்பாடுகளை போதித்த இயேசு பெருமான், தன் போதனைகளாலும், வாழ்ந்து காட்டிய நெறிகளாலும், நம் அனைவரின் வணக்கத்திற்குரியவராகத் திகழ்கிறார்.

    இயேசுபிரான் போதித்த அன்பு, மன்னிப்பு, சகோதரத்துவம், பகிர்ந்து வாழ்தல் என்னும் உயரிய நெறிகளை வாழ்வில் நாமும் கடைபிடிக்க உறுதி ஏற்போம். அதுவே உண்மையான கிறிஸ்துமஸ் வழிபாடு.

    கிறிஸ்துமஸ் விழாவை சிறப்பாகக் கொண்டாடி மகிழும் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்வதோடு புதிதாகப் பிறக்க உள்ள ஆண்டில் மகிழ்ச்சியும், அமைதியும் பொங்கிட எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்தித்து மகிழ்கிறோம்.

    தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்:-


    சிறுபான்மை மக்களுக்கு உரிய மரியாதையும், கவுரவமும் தந்து அனைவரையும் ஒன்றாக மதித்து நடந்திடும் நல்லரசுகள் மத்தியிலும், மாநிலத்திலும் ஏற்பட இயேசு கிறிஸ்து அருள் பாலிக்கட்டும்.

    உயர்ந்த நற்பண்புகளை உலகில் விதைத்த இயேசு கிறிஸ்து பிறந்த இப்புனித நாளில் கிறிஸ்தவ பெருமக்கள் அனைவரின் வாழ்வில் வளமும், நலமும் பெருகிட உளமாற வாழ்த்துகிறேன். அனைத்து கிறிஸ்துவ சகோதர, சகோதரிகளுக்கு கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    மனிதர்களுக்கு அன்பு, கருணை மற்றும் மன்னிப்பை போதித்த இயேசு கிறிஸ்துவின் பிறந்த நாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    நாட்டில் அமைதி நிலவ வேண்டும், பொறாமைகள் அகல வேண்டும், ஏழைகளின் துயரங்கள் நீங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் ஆகும். அதை நனவாக்க உழைப்போம் என இயேசுபிரான் அவதரித்த இந்த நன்நாளில் அனைவரும் உறுதி ஏற்போம்.

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ:-

    பகையும் வெறுப்பும் வளர்ந்து படுகொலைகளும் பஞ்சமா பாதகங்களும் அனைத்து மக்களையும் அச்சுறுத்திக்கொண்டு இருக்கக்கூடிய அபாயகரமான சூழல் வளர்ந்து வரும் இன்றைய நிலையில் சிலுவையைச் சுமந்து சித்திரவதைகளைத் தாங்கி, கல்வாரியில் ரத்தம் சிந்திய இயேசு பெருமானின் மனித நேய அமுத மொழிகள், தமிழ் நாட்டுக்கு இன்றியமையாத தேவை ஆகும்.

    த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன்:-

    த.மா.கா என்றும் கிறிஸ்தவ மக்களின் தோழனாக, அரணாக, பாதுகாவலராக இருக்கும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறேன். இயேசு கிறிஸ்துவின் எளிய நடையையும், நற்பண்புகளையும் பின்பற்றி வருகின்ற கிறிஸ்தவ சமுதாய மக்கள் எல்லோரும் அவரின் நெறிமுறைகளை தொடர்ந்து கடைபிடித்து நல்வாழ்க்கை வாழவும், வாழ்வில் முன்னேற்றம் காணவும், நல்லது ஓங்கவும், அல்லது அழியவும் இறைவன் துணை நிற்க வேண்டி, கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்ஆர். தனபாலன்:-

    இயேசுவின் கட்டளைகளையும், போதனைகளையும் ஏற்றுக்கொண்டு அமைதியான வழியில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து வாழ்வில் எல்லோருடைய அன்பையும், ஆதரவையும் பெற்று சமாதானத்தோடு வாழ்ந்திட வேண்டும் என்று பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வாழ்த்துகிறேன்.

    ஏழை, எளியோர் ஆதரவற்ற முதியோர் இல்லங்களுக்கு பார்வையற்றோர், வாய்பேச முடியாத கேட்கும் திறனற்றவர்கள், தொழுநோயாளிகள் என்று சமூகத்தால் நிராகரிக்கப்பட்ட அப்பாவிகளுக்காக தேவகுமாரன் பிறந்த இந்நாளில் பிரார்த்தனைகள் செய்யப்படுவதோடு அவர்களுக்கு அன்னதானமும், பல்வேறு கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் சார்பில் வழங்கப்படுகின்றன. இந்நாளில் நம் நாட்டில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பெருமக்களுக்கும் இனிய ‘‘கிறிஸ்துமஸ்’’ நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. இளைஞர் அணித்தலைவர் அன்புமணி ராமதாஸ், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர், தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் ஆகியோரும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #Christmas
    ×