search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாழைத்தார் விலை வீழ்ச்சி"

    குமரி மாவட்டத்தில் காற்றில் மரங்கள் முறிந்து விழுந்ததால் வாழைத்தார் விலை கடும் வீழ்ச்சி அடைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் தென்னை விவசாயத்திற்கு அடுத்த படியாக விவசாயிகள் அதிகம் பயிரிடும் பண பயிர் வாழை. தாமரைகுளம், மயிலாடி, சாமிதோப்பு தொடங்கி கடுக்கரை, தெரிசனங்கோப்பு, தக்கலை, கருங்கல், குலசேகரம், திருவட்டார் என மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் வாழை பயிர்கள் ஏராளமாக பயிரிடப்பட்டுள்ளன.

    தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் வாழை மரங்கள் நல்ல பலன் கொடுக்கும் என்று விவசாயிகள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழையுடன் சூறைக்காற்றும் வீசியது. இதனால் தோட்டங்களில் வளர்ந்து நின்ற வாழை மரங்கள் காற்றின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் முறிந்து விழுந்தன.

    வாழைத்தார்கள் குலை தள்ளி நின்ற நிலையில் மரங்கள் முறிந்து விழுந்ததால் விவசாயிகள் கவலைக்கு ஆளானார்கள்.

    முறிந்த மரங்களின் வாழைத்தார்கள் மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது. ஏராளமான வாழைத்தார்கள் விற்பனைக்கு வந்ததால் வாழை பழங்களின் விலை வீழ்ச்சி அடைந்தது. குமரி மாவட்ட விவசாயிகள் கொண்டு வந்த வாழைத்தார்களை விட அதிகமாக நெல்லை, தூத்துக்குடி, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் வாழைத்தார்கள் நாகர்கோவில் மார்க்கெட்டுகளுக்கு வந்தன. அதிகப்படியான தார்கள் விற்பனைக்கு வந்ததாலும் இவற்றின் விலை வழக்கத்திற்கு மாறாக குறைந்தது.

    அதன்படி மட்டிப்பழம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.120-க்கு விற்பனையானது. இன்று இதன் விலை கிலோ ரூ. 80 ஆக குறைந்தது. இது போல ரசகதளி பழம் கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.45 ஆகவும், பச்சை பழம் கிலோ ரூ. 30-க்கும் விற்கப்பட்டது. சிவப்பு பழம் கிலோ ரூ.90-க்கு விற்பனையானது, இன்று கிலோ ரூ.60-க்கு விற்கப்பட்டது. நாட்டுப்பழம் ரூ.50-ல் இருந்து ரூ.45 ஆக குறைந்தது. நேந்திரம் பழம் மட்டும் வழக்கத்தை விட சற்று அதிகமாக கிலோ ரூ. 56-க்கு விற்கப்பட்டது.
    ×