search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "யானை மரணம்"

    • சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் படுத்திருந்தது.
    • யானை குறித்து மாவட்ட வன அலுவலர் முருகன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சிவகிரி:

    தென்காசி மாவட்டம் புளியங்குடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வாசுதேவநல்லூர் பீட் மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் நேற்று முன்தினம் புளியங்குடி வனத்துறை ஊழியர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

    அப்போது சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் யானை ஒன்று உடல் நலக்குறைவால் படுத்திருந்தது. இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் முருகன் மற்றும் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    உடனடியாக அவருடன் புளியங்குடி வனச்சரகர் கார்த்திகேயன், வனவர்கள் மகேந்திரன், குமார் மற்றும் களக்காடு முண்டந்துறை வன காப்பக கால்நடை மருத்துவர் மனோகரன், நெல்லை கால்நடை மருத்துவக்கல்லூரி பேராசிரியர் டாக்டர் முத்துகிருஷ்ணன், வன கால்நடை ஆய்வாளர் அர்னால்டு, மற்றும் டாக்டர்கள் அருண்குமார், கருப்பையா, நெல்லை உதவி வன பாதுகாவலர் ஷா நவாஸ்கான் ஆகியோர் விரைந்து சென்றனர்.

    ஆனால் மாலை நேரம் ஆகிவிட்டதால் அங்கு யானை கூட்டங்கள் திரண்டது. இதனால் யானைக்கு முதலுதவி சிகிச்சை மற்றும் சோர்வடையாமல் இருக்க மருந்துகள் வழங்கிய வனத்துறை ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.

    மீண்டும் இன்று காலை அங்கு சென்றபோது யானைகள் கூட்டமாக அங்கு நின்றதால் பட்டாசு வெடித்து மற்ற யானைகளை கலைந்து போக செய்தனர். பின்னர் படுத்திருந்த யானையை பரிசோதித்தபோது அந்த யானை இறந்துவிட்டது தெரியவந்தது.

    இதையடுத்து யானையின் இறப்புக்கு காரணம் என்ன என்பதை அறிய அதன் உடலை இன்று அந்த பகுதியிலேயே வைத்து பிரேத பரிசோதனை செய்கின்றனர். அதன்பின்னர் யானையை அந்த காப்புக்காட்டிலேயே தகனம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து வனத்துறை டாக்டர்கள் கூறுகையில், யானைக்கு 40 வயதாகிவிட்டது. அதன் கால், உடல், வயிறு உள்ளிட்ட எந்த பாகங்களிலும் எவ்வித காயங்களும் இல்லை. ஒருவேளை அதன் பற்களில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டு சாப்பிட முடியாமல் யானை இறந்திருக்கலாம்.

    அவ்வாறு இல்லையெனில் கடைசி கால கர்ப்பம் நடந்திருக்க கூடும். அதாவது யானையின் வயிற்றில் குட்டி இருந்து, அதனை பெற்றெடுக்க முடியாமல் வலியில் யானை உயிரிழந்திருக்கலாம்.

    அல்லது அதன் ரத்தத்தில் ஏதேனும் விஷம் கலந்து இறந்ததா என்பதும் தெரியவில்லை. பிரேத பரிசோதனை செய்த பின்னரே யானையின் இறப்புக்கு இறுதியான காரணம் தெரியவரும் என்றனர்.

    ×