search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கூரை ஒழுகுதல்"

    சர்வதேச தரம் கொண்ட சென்னை விமான நிலைய மேற்கூரை 2 நாள் மழையை கூட தாக்குப்பிடிக்க முடியாமல் ஒழுகுவது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. #ChennaiAirport
    ஆலந்தூர்:

    சென்னை விமான நிலையத்தில் இருந்து உலகின் அனைத்து பகுதிகளுக்கும் பயணிகள் சென்று வருகிறார்கள்.

    பயணிகளின் நலன் கருதி இந்த விமான நிலையம் 2013-ம் ஆண்டு உலக தரத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி பணிகள் நடந்தன.

    சென்னை விமான நிலையம் தற்போது பிரமாண்டமாக காட்சி அளிக்கிறது. என்றாலும், இங்கு பயணிகள் சென்று வரும் பகுதியில் கூரையில் பொருத்தப்பட்ட கண்ணாடிகள் அடிக்கடி உடைந்து விழும் விபத்துக்கள் வாடிக்கையாக உள்ளது.

    தற்போது, சென்னை விமான நிலைய மேற்கூரை மழைக்கு தாக்கு பிடிக்காத நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாள் பெய்த மழையில் விமான நிலையத்துக்கு பயணிகள் வந்து போகும் இடங்களில் கூரையில் இருந்து தண்ணீர் ஒழுகியது.

    கோப்புப்படம்

    பயணிகள் வெளியூர், வெளி மாநிலங்களுக்கு செல்லும் விமானத்தில் ஏறுவதற்காக செல்லும் 2-வது மாடியில் மேற்கூரை ஒழுகியது. முதல் தளத்தில் காலியாக உள்ள இடத்திலும் மழைநீர் கொட்டியது. பயணிகளை பரிசோதனை செய்யும் இடத்தில் பக்கவாட்டு சுவர் வழியாக மழைநீர் பயணிகள் நிற்கும் பகுதிக்குள் புகுந்தது.

    இது பற்றிய தகவல் உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. கூரையில் இருந்து மழைநீர் கொட்டிய 3 இடங்களையும் சரி செய்ய முயற்சி நடந்தது. என்றாலும் கூரையில் இருந்து மழைநீர் ஒழுகுவதை நிறுத்த முடியவில்லை.

    இதையடுத்து தண்ணீர் ஒழுகிய இடங்களில் விமான நிலைய ஊழியர்கள் பிளாஸ்டிக் பாத்திரங்களை வைத்து மழைநீரை பிடித்து வெளியே ஊற்றினார்கள். சர்வதேச தரம் கொண்ட சென்னை விமான நிலைய மேற்கூரை 2 நாள் மழையை தாக்குப்பிடிக்க முடியாமல் ஒழுகுவது பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  #ChennaiAirport
    ×