search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் அமைச்சர் பழனியப்பன்"

    செந்தில்பாலாஜி என்ற ஒருவர் அ.ம.மு.க. கட்சியில் இருந்து சென்று விட்டால் இக்கட்சி செயலற்றுப் போய்விட்டது என அர்த்தம் இல்லை என முன்னாள் அமைச்சர் பழனியப்பன் கூறியுள்ளார். #Senthilbalaji #palaniappan
    அரவக்குறிச்சி:

    கரூர் மாவட்ட அ.ம.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி அக்கட்சியில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்தார். இந்த நிலையில் கரூர் மாவட்டம் பள்ளப்பட்டியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது. மாவட்ட அவை தலைவர் எஸ்.பி. லோகநாதன் தலைமை தாங்கினார்.

    இதில் தலைமை நிலைய செயலாளரும், முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சருமான பழனியப்பன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    செந்தில்பாலாஜி என்ற ஒருவர் அ.ம.மு.க. கட்சியில் இருந்து சென்று விட்டால் இக்கட்சி செயலற்றுப் போய்விட்டது என அர்த்தம் இல்லை. ஒன்றுபட்ட திமுக.,விலிருந்து அ.தி.மு.க., பிரிந்தபோது எம்.ஜி.ஆருடன் மாநில, மாவட்ட நிர்வாகிகளோ, மந்திரிகளோ உடன் இல்லை. தொண்டர்களை மட்டுமே நம்பி அவர் கட்சியைத் தொடங்கி விஸ்வரூப வளர்ச்சி பெற்றார். ஜெயலலிதா, ஜானகி என இரு அணிகளாய் இருந்தபோதும் ஜெயலலிதாவுடன் பெரிய நிர்வாகிகளோ, மந்திரிகளோ உடனில்லை. தொண்டர்களை மட்டுமே நம்பி சாதித்துக் காட்டினார்.

    அதேபோல அமமுக.,வை தொண்டர்களுடன் தினகரன் இணைந்து பணியாற்றி வெற்றி பெறுவார். ஜெயலலிதா மீது வழக்குப்போட்ட தி.மு.க.,வுடன் கைகோர்த்துள்ள செந்தில்பாலாஜி அங்கிருக்கும் சில கொலு பொம்மைகள் போல இருப்பார்.

    கரூர் மாவட்டம் ஜெயலலிதாவிற்கு எக்கு கோட்டையாக இருந்தது போல இனி தினகரனின் கோட்டையாய் மாறும். செந்தில்பாலாஜியை திமுக., சேர்த்துக்கொண்டது தி.மு.க.வின் பலவீனத்தைக் காட்டுகிறது. துரோகத்தினை வீழ்த்தவேண்டும் என தினகரன் பக்கம் வந்த அவர் அதே துரோகத்தைச் செய்துவிட்டார். தி.மு.க.,வில் பல சாமிகள் உள்ளனர். அவர்களை மீறி இவரால் எதுவும் செய்துவிட முடியாது. தினகரனைத் தவிர யார் வந்தாலும் சேர்த்துக் கொள்வோம் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார், ஆனால் தினகரன் நம்பர் ஒன், மற்றவர்கள் எல்லாம் பூஜ்ஜியம். வரும் பொதுத்தேர்தல் அல்லது 20 தொகுதி இடைத்தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க., அ.ம.மு.க.வைத் தேடி வரும்

    இவ்வாறு அவர் கூறினார்.

    கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் ஆரியூர் சுப்பிரமணி, தங்கவேல், அன்பழகன், முன்னாள் எம்எல்ஏ., உமா மகேஸ்வரி மற்றும் பலர் கலந்து கொண்டனர். #Senthilbalaji #palaniappan
    ×