search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முட்டைகள் ஏற்றுமதி"

    • நாமக்கல் மண்டல அளவிலான முட்டைகள் தரமாகவும், விலை சற்று குறைவாகவும் இருப்பதால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது.
    • ஓமன் நாட்டில் இந்திய முட்டைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு ஏற்றுமதியானது சற்று தடைபட்டுள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1,100 கோழிப்பண்ணைகள் மூலம் நாள்தோறும் 5.50 கோடி முட்டைகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களுக்கும், சத்துணவுக்கும் 4.50 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்படுகின்றன. மீதமுள்ள ஒரு கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன.

    தற்போதைய நிலையில் ஓமன், கத்தார், துபாய், சவுதி அரேபியா உள்பட 9 வளைகுடா நாடுகளுக்கு மாதந்தோறும் 5 கோடி முட்டைகள் வீதம் அனுப்பப்படுகின்றன.

    மலேசியா, சிங்கப்பூருக்கு 50 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் பல்வேறு நிர்வாக காரணங்களால் அங்கு ஏற்றுமதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த 4 மாதங்களாக இலங்கைக்கு மாதந்தோறும் 1.50 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    நாமக்கல் மண்டல அளவிலான முட்டைகள் தரமாகவும், விலை சற்று குறைவாகவும் இருப்பதால் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் இருந்து மாதந்தோறும் 30 கண்டெய்னர் முட்டைகள் ஏற்றுமதி செய்யப்பட்ட நிலையில் தற்போது கூடுதலாக 15 கண்டெய்னர்கள் வீதம் அனுப்பப்படுகிறது. வரும் டிசம்பர் மாதம் வரையில் இந்த ஏற்றுமதி தடையின்றி நடைபெறுவதற்கு வாய்ப்பு உள்ளது.

    இதுகுறித்து அகில இந்திய முட்டை ஏற்றுமதியாளர்கள் சங்கச் செயலாளர் வல்சன் பரமேஸ்வரன் கூறியதாவது:-

    இலங்கையில் முட்டையின் தேவை அதிகரித்துள்ளதால் நாமக்கல் மண்டலத்தில் இருந்து மாதந்தோறும் கூடுதலாக 15 கண்டெய்னர்கள் வீதம் (ஒரு கண்டெய்னரில் 5 லட்சம் முட்டைகள்) அதாவது சுமார் 70 லட்சம் முட்டைகள் அனுப்பப்பட்டு வருகின்றன. வளைகுடா நாடுகளுக்கு மாதம் 5 கோடி முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    ஓமன் நாட்டில் இந்திய முட்டைக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளதால் அங்கு ஏற்றுமதியானது சற்று தடைபட்டுள்ளது. இலங்கைக்கு தடையின்றி முட்டை அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர போராடி வருகிறது.
    • இலங்கைக்கு தினமும் 10 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆவதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி.

    நாமக்கல்:

    இலங்கையில் கடந்த ஒரு ஆண்டாக பெரும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறது. பண வீக்கத்தால் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஏப்ரல் மாதம் முதல் இலங்கை பாதிக்கப்பட்ட பொருளாதாரத்தை இயல்பு நிலைக்கு கொண்டு வர போராடி வருகிறது.

    இதை தொடர்ந்து இந்தியாவில் உள்ள 2 கோழிப்பண்ணைகளில் இருந்து முதற்கட்டமாக 2 கோடி முட்டைகள் இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்டு, அதில் 1 கோடி முட்டைகள் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இலங்கையில் உள்ள கால்நடை உற்பத்தி துறை மற்றும் எஸ்.டி.சி. அதிகாரிகள் தமிழகம் வந்தனர்.

    நாமக்கல்லுக்கு வந்த அவர்கள் மொத்தம் 5 கோழிப்பண்ணைகளை நேரில் பார்வையிட்டு, முட்டையின் தரத்தை ஆய்வு செய்தனர். பின்னர் முட்டைகள் இறக்குமதி செய்ய பண்ணையாளர்களுக்கு அனுமதி அளித்தனர்.

    இந்த 5 கோழிப்பண்ணைகளில் இருந்தும் தினசரி 10 லட்சம் முட்டைகள் இறக்குமதி செய்ய உள்ளதாக, இலங்கை ஸ்டேட் டிரேடிங் கார்ப்பரேசன் (எஸ்.டி.சி.) சேர்மன் அசின் வலிசுந்தரா தெரிவித்துள்ளார்.

    இறக்குமதி செய்யப்படும் முட்டைகள், இலங்கையில் உள்ள பெரிய பேக்கரிகள், பிஸ்கட் உற்பத்தியாளர்கள், சமையல் காண்ட்ராக்டர்கள் மற்றும் ஓட்டல்களுக்கு, ஒரு முட்டை விலை ரூ.35 (இலங்கை எஸ்.எல்.ஆர்.) விலைக்கு விநியோகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இலங்கைக்கு தினமும் 10 லட்சம் முட்டைகள் ஏற்றுமதி ஆவதால் நாமக்கல் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • தினமும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது.
    • தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டைக்கு விலை நிர்ணயம் செய்கிறது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. தினமும் சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி ஆகிறது. தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு முட்டைக்கு விலை நிர்ணயம் செய்கிறது.

    கடந்த சில நாட்களாக முட்டை விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தற்போது முட்டையின் விலை 515 காசாக இருக்கிறது. சில்லறை விலை கடைகளில் ஒரு முட்டை 650 காசுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

    கடந்த காலங்களில் முட்டையின் விலை உயரும் போது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது விலை உயர்ந்துள்ள நிலையிலும் வெளிநாடுகளுக்கு முட்டை ஏற்றுமதி அதிகரித்துள்ளது. தினமும் 40 லட்சம் முட்டைகள் வரை வளைகுடா நாடுகளுக்கு நாமக்கல் பகுதியில் இருந்து ஏற்றுமதி ஆகிறது. இது மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் முட்டையின் விலை உயர்ந்துள்ள நிலையிலும் வெளிநாடுகளுக்கு அதிக அளவு முட்டையை ஏற்றுமதி செய்யப்படுவதால் ஏற்றுமதியாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    வளைகுடா நாட்டில் உலக கால்பந்து போட்டி நடைபெற்று வருகிறது. உக்ரைன் போர் மற்றும் குளிர்காலம் என்பதால் முட்டையின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் வெளிநாடுகளில் இருந்து தற்போது முட்டை ஆர்டர் அதிகரித்து வருவதாக நாமக்கல் கோழிப் பண்ணை யாளர்கள் தெரிவித்தனர்.

    ×