search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெரியநாயகி அம்மன்"

    தஞ்சை பெரியகோவிலில் பெருவுடையார் - பெரியநாயகி அம்மன் திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    மாமன்னன் முதலாம் ராஜராஜசோழனால் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட தஞ்சை பெரியகோவில் இன்றைக்கும் தமிழர்களின் பெருமைகளை பறைசாற்றி கொண்டிருக்கிறது. பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டு திருக்கல்யாணம் தஞ்சை பெரியகோவிலில் நேற்று இரவு நடந்தது.

    முன்னதாக பழங்கள், குங்குமம், மஞ்சள்கிழங்கு, மஞ்சள் திருமாங்கல்ய சரடு, வளையல், சீப்பு, குங்குமசிமிழ், கண்ணாடி, ரிப்பன், இனிப்பு, பூ, வெற்றிலைபாக்கு, சீவல், ஜாக்கெட் பிட் போன்ற சீர்வரிசை பொருட்களை ஏராளமான பக்தர்கள் மூங்கில் கூடையில் வைத்து பெரியகோவில் வளாகத்தில் ஊர்வலமாக வந்து திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெறும் நடராஜர் மண்டபத்தை வந்தடைந்தனர்.

    பின்னர் சிவாச்சாரியார்கள் வேத, மந்திரங்கள் முழங்க மாப்பிள்ளை அழைப்பு உள்பட சம்பிரதாய சடங்குகள் நடைபெற்றன. தொடர்ந்து மேள, தாளங்கள் முழங்க பெருவுடையாரிடம் இருந்து திருமாங்கல்யத்தை சிவாச்சாரியார் எடுத்து பெரியநாயகி அம்மனுக்கு அணிவித்தார். இதையடுத்து பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் திருக்கல்யாண கோலத்தில் காட்சி அளித்தனர். திருக்கல்யாணத்தில் பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நடந்த திருமஞ்சனம்-வருடாபிஷேக நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில், ஆண்டு தோறும் ஆனி மாதம் சப்தமி உத்திர நட்சத்திர நாளில் ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான ஆனி திருமஞ்சனம் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் நடராஜர் சன்னதியில் நடராஜர், சிவகாமி அம்மன், மாணிக்கவாசகர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது.

    பின்னர் பெரியநாயகி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தேவாரம் திருப்புகழ் பாடி சிறப்பு பூஜைகளும் நடந்தது. அதைத்தொடர்ந்து 16 வகை தீபாராதனையும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. காலை 6 மணிக்கு மேல் நடராஜர்-சிவகாமி அம்மன் சப்பரத்தில் எழுந்தருளி நான்கு ரதவீதிகளில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து 7 மணிக்கு சன்னதியில் நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், சண்டிகேஸ்வரர், மாணிக்கவாசகர், சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோருக்கு தீபாராதனை நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இதேபோல் ஆண்டுதோறும் ஆனி மாதத்தில், உத்திர நட்சத்திர நாளில் பெரியநாயகி அம்மன் கோவிலில் வருடாபிஷேக நிகழ்ச்சி நடைபெறும். அதன்படி நேற்று காலை பெரியநாயகி அம்மன் கோவிலில் சோமஸ்கந்தர் சன்னதி முன்பு வருடாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதையொட்டி 3 கலசங்கள் வைத்து கலச பூஜையும், சிறப்பு யாகமும் நடந்தது. பின்னர் உச்சிகால பூஜையில் சோமஸ் கந்தர், வள்ளி-தெய்வானை, சிவன், பெரியநாயகி அம்மன் ஆகியோருக்கு 16 வகை அபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கலச பூஜை, சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில், பெரியநாயகி அம்மனுக்கு 1,500 கிலோ மலர்களால் பூச்சொரிதல் விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் தனி சன்னதியில் பெரியநாயகி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் மழை வேண்டியும், உலக நன்மைக்காவும் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் விழா நடத்தப்படும்.

    இந்த ஆண்டிற்கான பூச்சொரிதல் விழா நேற்று நடந்தது. இதையொட்டி தஞ்சை பெரிய கோவில் வளாகத்தில் உள்ள நால்வர் மண்டபத்தில் இருந்து பக்தர்கள் பூக்கூடைகளை கையில் ஏந்தியபடி ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். இந்த ஊர்வலம் கோவிலை வலம் வந்து பெரியநாயகி அம்மன் சன்னதியை சென்றடைந்தது.

    பின்னர் பக்தர்களால் வழங்கப்பட்ட முல்லை, ரோஜா, தாழம், மகிழம், தாமரை, அல்லி, செம்பருத்தி, கனகாம்பரம், வெட்டிவேர், அரளி உள்ளிட்ட 51 வகையான மலர்களால் பெரியநாயகி அம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெற்றது. பக்தர்கள் வழங்கிய மலர்களின் எடை 1,500 கிலோ ஆகும். இதையடுத்து அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 
    ×