search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் வியாபாரி கைது"

    • கோவில் திருவிழா, விசேஷம் மற்றும் துக்க காரியங்களுக்கும் வெடிக்க பட்டாசுகளை ஜோட்டியிடம் அப்பகுதி பொதுமக்கள் வாங்கி செல்வார்கள்.
    • ஜோட்டி தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து மற்றும் அதற்கான மூலப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி பழையபேட்டையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலியாகினர். இந்த வெடிவிபத்தில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் ஏற்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதன் காரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனுமதியுடன் பட்டாசு கடை வைத்திருப்பவர்கள் முறையாக பராமரிப்புடன் பட்டாசுகளை பாதுகாப்புடன் வைத்திருக்கிறீர்களா என்று மாவட்ட நிர்வாகத்தினர் லைசென்சு வாங்கிய பட்டாசு கடைக்காரர்களிடம் சோதனை நடத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று ஊத்தங்கரையில் பட்டாசு வெடித்து ஒரு பெண் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் போச்சம்பள்ளியில் நாட்டு வெடிக்கான மருந்து மற்றும் மூலப்பொருட்களை பதுக்கி வைத்திருந்த பெண் பட்டாசு வியாபாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்தவர் ஜோட்டி (வயது55). இவர் அதே பகுதியில் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பட்டாசுகளை விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார்.

    தீபாவளி மற்றும் அப்பகுதிகளில் நடைபெறும் கோவில் திருவிழா, விசேஷம் மற்றும் துக்க காரியங்களுக்கும் வெடிக்க பட்டாசுகளை ஜோட்டியிடம் அப்பகுதி பொதுமக்கள் வாங்கி செல்வார்கள்.

    இந்த நிலையில் ஜோட்டி தனது வீட்டில் நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெடிமருந்து மற்றும் அதற்கான மூலப்பொருட்களை பதுக்கி வைத்துள்ளார்.

    இதுகுறித்து ஜம்புகுட்டப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் அருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இந்த சம்பவம் குறித்து கிராம நிர்வாக அலுவலர் அருண்குமார் போச்சம்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு புகார் தெரிவித்தார்.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை செய்தனர். அப்போது வெடிமருந்து மற்றும் மூலப்பொருட்களை பதுக்கிய ஜோட்டி மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மகளிர் சிறையில் அடைத்தனர்.

    கிருஷ்ணகிரியில் நடந்த வெடிவிபத்துக்கு காரணம் பட்டாசா? அல்லது சிலிண்டரா? என்று தடயவியல் நிபுணர்கள் மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் வீட்டில் வெடிமருந்து பொருட்களை பதுக்கி வைத்ததால் பெண் கைதான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×