search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புர்வி மோடி"

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் கடன்பெற்று தலைமறைவான ஊழல் வழக்கில் நிரவ் மோடியின் தங்கை புர்வி மோடியை கைது செய்ய இன்டர்போல் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. #Interpolnotice #PNBScam #PurviModi #NiravModi
    புதுடெல்லி:

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் 11,400 கோடி ரூபாய் மோசடி செய்து விட்டு வெளிநாட்டில் பதுங்கி இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தினரை கைது செய்ய நடவடிக்கை எடுத்து வரும் அதே நேரத்தில் இந்தியாவில் உள்ள அவரது சொத்துக்களை முடக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது.

    இதில், சி.பி.ஐ., பொருளாதார அமலாக்கப் பிரிவினர், வருமான வரித்துறையினர் என 3 தரப்பினரும் ஈடுபட்டு உள்ளனர். ஏற்கனவே நிரவ் மோடியின் நகை கடை மற்றும் வைர நிறுவனங்களில் இருந்து ரூ.5,714 கோடி முடக்கப்பட்டுள்ளது. அதேபோல் 141 வங்கி கணக்குகளை முடக்கி வைத்துள்ளனர்.

    நிரவ் மோடி நிறுவனங்களின் டெபாசிட்டுகள், பங்குச்சந்தை முதலீடுகள் உள்ளிட்டவை தொடர்ந்து முடக்கப்பட்டு வருகின்றன. அதன்படி ரூ.94 கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டது. நிரவ் மோடி குழுமத்துக்கு சொந்தமான 523 கோடி ரூபாய் மதிப்புடைய 21 சொத்துகளை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். 9 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

    தலைமறைவாக இருக்கும் நிரவ் மோடி மற்றும் அவரது குடும்பத்தாரை கைது செய்ய மும்பை சிறப்பு நீதிமன்றம் ஜாமினில் விட முடியாத கைது உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேவேளையில், இந்த மோசடியில் தொடர்புடைய நிரவ் மோடியின் தங்கை புர்வி தீபக் மோடியும் வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வருகிறார்.



    இந்நிலையில், இந்திய அரசின் நடவடிக்கையின் பேரில் பெல்ஜியம் நாட்டு குடியுரிமை பெற்றவரான புர்வி மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்கும் கைது உத்தரவை சர்வதேச காவல்துறையான ‘இன்டர்போல்’ இன்று வெளியிட்டுள்ளது.

    சட்டவிரோதமான பணப்பரிமாற்றம் தொடர்பாக இந்திய அரசால் தேடப்படும் புர்வி தீபக் மோடி(44) எந்த நாட்டில் காணப்பட்டாலும் உடனடியாக கைது செய்யுமாறு சர்வதேச காவல்துறையினரை இந்த நோட்டீஸ் அறிவுறுத்தியுள்ளது. #Interpolnotice #PNBScam #PurviModi #NiravModi

    ×