search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்"

    • தேர்தலில் மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன
    • இம்ரான் கான் கட்சியின் உறுப்பினர்களின் "சன்னி இதெஹத் கவுன்சில்", ஒமர் அயுப் கானுக்கு ஆதரவளித்தது

    241 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பாகிஸ்தானில், பிப்ரவரி 8 அன்று, தேர்தல் நடைபெற்றது.

    பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் "பாகிஸ்தான் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப்" (PTI) கட்சி போட்டியிட "பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்" (PEC) தடை விதித்தது. இதனை தொடர்ந்து அக்கட்சியின் வேட்பாளர்களில் பலர் சுயேட்சையாக போட்டியிட்டனர்.

    இந்த தேர்தலில் பெரிய அளவிலான மோசடிகளும், முறைகேடுகளும் நடைபெற்றதாக செய்திகள் வெளிவந்தன.

    பெரும் சர்ச்சைக்கு இடையே நடந்த இந்த தேர்தலுக்கு பிறகு, முடிவுகளை அறிவிப்பதிலும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தாமதம் ஏற்பட்டது.

    பிடிஐ கட்சியின் சுயேச்சை வேட்பாளர்கள் 93 இடங்களில் வென்றனர். இக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், "சன்னி இதெஹத் கவுன்சில்" (Sunny Ittehad Council) எனும் அமைப்பை உருவாக்கினர்.

    முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பிஎம்எல்-என் (PML-N) கட்சி 75 இடங்களிலும், பிலாவல் பூட்டோவின் "பாகிஸ்தான் மக்கள் கட்சி" (PPP) 54 இடங்களிலும் வெற்றி பெற்றது.


    தனிப்பெரும்பான்மை இல்லாததால் பிரதமர் வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்படுவதில் சிக்கல் நீடித்து வந்தது.

    இந்நிலையில் இன்று, "நேஷனல் அசெம்பிளி" (National Assembly) என அழைக்கப்படும் பாராளுமன்றத்தின் கீழ்சபை (Lower House) பிரதமரை தேர்ந்தெடுப்பதற்காக கூடியது.

    இந்த கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் முன்னாள் பிரதமர் ஷெபாஸ் ஷரீப் (Shehbaz Sharif) மீண்டும் பிரதமராக வாக்களித்தனர்.

    இதையடுத்து, பாகிஸ்தானின் பிரதமராக இரண்டாம் முறை ஷெபாஸ் ஷரீப் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதாக சபாநாயகர் அயாஸ் சாதிக் (Ayaz Sadiq) தெரிவித்தார்.

    336 உறுப்பினர்களை கொண்ட நேஷனல் அசெம்பிளியில் 201 வாக்குகள் பெற்று ஷெபாஸ் ஷரீப், 92 வாக்குகள் பெற்ற ஒமர் அயுப் கான் எனும் போட்டி வேட்பாளரை வென்றார்.

    "சன்னி இதெஹத் கவுன்சில்" ஒமர் அயுப் கானுக்கு ஆதரவளித்தது.

    பிரதமர் பதவிக்கு குறைந்தபட்சம் 169 ஆதரவு தேவைப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ஷெபாஸ் ஷரீப், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் (PML-N) கட்சியை தொடங்கியவரும், 3 முறை பாகிஸ்தான் பிரதமராகவும் இருந்தவருமான நவாஸ் ஷெரீப்-பின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஷா மெஹ்மூத் குரேஷியை 5 ஆண்டு தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் தகுதிநீக்கம் செய்தது.
    • குரேஷி, அவரது மகன் ஜெய்ன் குரேஷியின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன.

    லாகூர்:

    பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு மந்திரியாக பதவி வகித்தவர் ஷா மஹ்மூத் குரேஷி. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி துணைத் தலைவராக உள்ளார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில் 2018 முதல் 2020 வரை வெளியுறவுத்துறை மந்திரி உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

    சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட மஹ்மூத் குரேஷி, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார்.

    பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்பட்டதில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஷா மெஹ்மூத் குரேஷியை 5 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்துள்ளது.

    பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முடியாதபடி 5 ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் குரேஷியின் தண்டனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

    குரேஷி மற்றும் அவரது மகன் ஜெய்ன் குரேஷி ஆகியோரின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன.

    முல்தான் உள்ளிட்ட 2 சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக அந்தஇடத்தில் மாற்று வேட்பாளர் நிறுத்தப்பட்டார்.

    • இம்ரான் கானின் வேட்பு மனு, தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது
    • நேர்மையற்றவர் எனும் தீர்ப்பால் போட்டியிடும் தார்மீக உரிமையை இழக்கிறார் என்றது ஆணையம்

    பிப்ரவரி 8 அன்று பாகிஸ்தானில் பாராளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெறவுள்ளது.

    இதில் போட்டியிட பாகிஸ்தான் பிடிஐ (PTI) எனப்படும் தெஹ்ரிக்-ஏ-இன்சாஃப் (Tehreek-e-Insaf) கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான 71 வயதான இம்ரான் கான் வேட்புமனு தாக்கல் செய்தார். ஆனால், ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்றவரான அவரது மனு, பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது. அவருடன் அக்கட்சியை சேர்ந்த பல மூத்த தலைவர்களின் வேட்பு மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டன.

    முறையற்ற காரணங்களை கூறி இம்ரானின் மனு தள்ளுபடி ஆனதாக அவர் கட்சி, தேர்தல் ஆணையத்தை விமர்சித்திருந்தது.

    இம்ரான் கானின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதற்கான காரணத்தை தற்போது பாகிஸ்தானின் தேர்தல் ஆணையம் சுமார் 8 பக்கம் கொண்ட அறிக்கையில் வெளியிட்டிருக்கிறது.

    ஆணையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

    இஸ்லாமாபாத் கூடுதல் செஷன்ஸ் நீதிமன்றத்தில் இம்ரான் கான் நேர்மையற்றவர் என தீர்ப்பு வழங்கப்பட்டு விட்டது. அத்தகைய ஒருவர் தேர்தலில் போட்டியிட தார்மீக உரிமை இழந்தவராகிறார். இம்ரானின் பெயரை முன்மொழிந்தவரும், வழிமொழிந்தவரும் அவர்கள் கூறிய தொகுதிகளில் வசிக்கவில்லை; அதுவும் ஒரு காரணம். அரசு கஜானாவிற்கு சேர்க்க வேண்டிய பொருளை முறைகேடாக பயன்படுத்தி லாபம் ஈட்டிய வழக்கில் நேர்மையற்றவராக கருதி தேர்தலில் போட்டியிட நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த தகுதியின்மை அவருக்கு தொடர்கிறது. தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதே தவிர, தீர்ப்பு நிறுத்தி வைக்கப்படவில்லை. எனவே தேர்தலில் போட்டியிடும் தார்மீக உரிமையை இம்ரான் இழக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    பிடிஐ கட்சியின் 90 சதவீத தலைவர்களின் வேட்பு மனுக்கள் தேர்தல் ஆணையத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் வேட்புமனுவை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் நிராகரித்தது.
    • நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் என அந்நாட்டு தேர்தல் ஆணையம் தெரிவித்தது.

    லாகூர்:

    பாகிஸ்தானில் பிப்ரவரி 8-ம் தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் இரு தொகுதிகளில் போட்டியிடுவதற்காக முன்னாள் கிரிக்கெட் வீரரும், முன்னாள் பிரதமருமான இம்ரான்கான் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார்.

    பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பாராளுமன்ற தொகுதிகளான லாகூர் மற்றும் மியான்வாலி ஆகிய 2 தொகுதிகளில் இம்ரான்கான் போட்டியிடுவதற்காக வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

    இந்நிலையில், இம்ரான்கானின் வேட்பு மனுக்களை பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் இன்று நிராகரித்துள்ளது.

    லாகூரில் இருந்து நிராகரிக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலில் அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது, ஏனெனில் அவர் அந்தத் தொகுதியில் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர் அல்ல என்பதாலும், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு தகுதிநீக்கம் செய்யப்பட்டவர் எனவும் பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    2018 முதல் 2022 வரை பதவியில் இருக்கும்போது அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்பனை செய்த குற்றத்திற்காக அவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவிய இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார்.
    • இம்ரான்கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்தது பாகிஸ்தான் தேர்தல் ஆணையம்.

    இஸ்லாமாபாத்:

    இம்ரான் கான் பிரதமராக இருந்த காலத்தில் ஊழல், மோசடியில் ஈடுபட்டதாக அவர்மீது பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. மேலும் தேர்தல் ஆணையம் அளித்த புகாரின் பேரில் தோஷகானா ஊழல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

    பாகிஸ்தான் சட்டத்தின்படி பதவிக்காலத்தில் பெறப்பட்ட பரிசுப்பொருட்களை மந்திரி சபையில் உள்ள தோஷகானா என்ற துறையிடம் ஒப்படைக்க வேண்டும். ஆனால் அந்த பொருட்களை விற்று இம்ரான்கான் தனது சொத்தாக மாற்றியதாக குற்றம் சாட்டப்பட்டது. இதுவே தோஷகானா வழக்கு என அழைக்கப்படுகிறது.

    இந்த வழக்கு தொடர்பான விசாரணையில் இம்ரான் கான் மீதான குற்றம் உறுதி செய்யப்பட்டு அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவர், பஞ்சாப் மாகாணம் அட்டோக் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தேர்தலில் போட்டியிட 5 ஆண்டுகள் தடை விதித்து அந்நாட்டு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    நம்பிக்கையில்லா தீர்மானத்தில் தோல்வியை தழுவிய இம்ரான்கான் பிரதமர் பதவியை இழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • விசாரணை குழு முன்பு கடந்த 11-ந் தேதி இம்ரான் கான் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது.
    • இம்ரான் கானை கைது செய்வதற்காக வாரண்டை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது.

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மீது ஊழல், தேசதுரோகம், பயங்கரவாதம் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இம்ரான் கானுக்கு எதிராக அந்நாட்டு தேர்தல் ஆணையம் கைது வாரண்ட் பிறப்பித்துள்ளது.

    கடந்த ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் கண்காணிப்புக்குழு குறித்து அவதூறாக பேசியதாக இம்ரான் கான் மற்றும் அவரது கட்சி தலைவர்கள் மீது தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.

    விசாரணை குழு முன்பு கடந்த 11-ந் தேதி இம்ரான் கான் ஆஜராக உத்தரவிட்டு இருந்தது. ஆனால் அவர் ஆஜராகவில்லை. இதையடுத்து இம்ரான் கானை கைது செய்வதற்காக வாரண்டை தேர்தல் ஆணையம் பிறப்பித்தது. இதில் இம்ரான் கானை கைது செய்து இன்று ஆஜர்படுத்துமாறு இஸ்லாமாபாத் காவல்துறை தலைவரை தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது.

    • தேர்தல் ஆணையத்தின் விசாரணைக் குழு இம்ரான் கான் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
    • விளக்கம் கேட்டு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.

    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தானில் கடந்த 2018-ம் ஆண்டில் தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான் பிரதமராக பதவியேற்றார். அவருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது. இதனால் அவரது ஆட்சி கவிழ்ந்து பதவி விலகினார்.

    தற்போது பாகிஸ்தான் பிரதமராக ஷாபாஸ் ஷெரீப் பதவி வகித்து வருகிறார்.

    இதற்கிடையே, தேர்தல் ஆணையம் பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக தலைமை தேர்தல் ஆணையர் சிக்கந்தர் சுல்தான் ராஜாவை இம்ரான் கான் தொடர்ந்து விமர்சித்து வந்தார்.

    இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்தின் விசாரணைக் குழு இம்ரான் கான் மீது அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. விளக்கம் கேட்டு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் பதில் இல்லை.

    இந்நிலையில், இம்ரான் கானுக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பித்த தேர்தல் ஆணையம் அடுத்த கட்ட விசாரணையை ஜனவரி 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

    ×