search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்குடியின மாணவி"

    என்னை போல் மற்ற மாணவர்களும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதே எனது ஆசை. நான் டாக்டருக்கு படித்து கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன் என்று மாணவி சங்கவி கூறினார்.
    கோவை:

    நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது.

    இந்த தேர்வில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த மலைவாழ் பழங்குடியின மாணவி தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். அந்த மாணவியின் பெயர் சங்கவி (வயது 20). மதுக்கரை அருகே உள்ள எம்.நஞ்சப்பனூர் என்ற மலைக்கிராமத்தைச் சேர்ந்தவர்.

    இவரது தந்தை முனியப்பன் இறந்து விட்டார். தாயார் வசந்தாமணி கண் பார்வை குறைபாடுள்ளவர். ஏழ்மையில் வாழ்ந்த மாணவி சங்கவி தனது விடாமுயற்சியால் வறுமையை வென்று சாதித்துள்ளார்.

    நீட் தேர்வில் இவர் 720 மதிப்பெண்களுக்கு 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பழங்குடியின மாணவியான இவர் 108 மதிப்பெண்கள் பெற்றிருந்தாலே அரசு மருத்துவக்கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு தகுதி பெற்று விடுவார். தற்போது 202 மதிப்பெண்கள் பெற்றுள்ளதால் நிச்சயம் இவருக்கு அரசு மருத்துவக்கல்லூரியில் படிக்க இடம் கிடைத்து விடும்.

    நீட் தேர்வு

    சங்கவி நீட் தேர்வில் வென்றது மட்டுமல்லாது அவர் வசிக்கும் கிராமத்திலேயே பிளஸ்-2 வரை படித்தவர் இவர் மட்டும் தான். பாலக்காடு முதல் ஆனைமலை பகுதி வரை உள்ள மலை கிராமங்களில் பிளஸ்-2 வரை படித்தவர் இவர்.

    இத்தனை சாதனைகளுக்கு சொந்தக்காரரான மாணவி சங்கவியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    எனது குடும்பம் ஏழ்மை நிலையில் இருந்தாலும் படித்து முன்னேற வேண்டும் என்ற கனவு என்னுள் இருந்தது. இதன் காரணமாக குடும்ப கஷ்டத்தையும் உணர்ந்து உத்வேகத்துடன் படித்தேன். 10-ம் வகுப்பு வரை குமிதிபதியில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். 11 மற்றும் 12-ம் வகுப்புகள் பிச்சானூர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தேன். பிளஸ்-2 தேர்வில் 925 மதிப்பெண்கள் பெற்றேன்.

    முதலில் 2018-ம் ஆண்டு நடந்த நீட் தேர்வில் பங்கேற்று எழுதினேன். அதில் 96 மதிப்பெண்கள் பெற்றேன். அந்த சமயம் எனக்கு சாதி சான்றிதழே கிடைக்கவில்லை. இதனால் மேற்படிப்பு படிக்க முடியாமல் தவித்தேன்.

    அதன்பிறகு கொரோனாவால் பாதிக்கப்பட்ட எங்கள் கிராமத்துக்கு உதவி செய்ய சமூக ஆர்வலர்கள் பலர் வந்தனர். அவர்கள் எனது நிலையை அறிந்து சாதி சான்றிதழ் கிடைக்க நடவடிக்கை எடுத்தனர். மேலும் எனது தாயாரின் கண் சிகிச்சைக்கும் உதவி செய்தனர். தொடர்ந்து நீட் தேர்வு எழுதவும் உதவி செய்தனர்.

    அதன் பயனாக தற்போது 2-வது முறையாக நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளேன். என்னை போல் மற்ற மாணவர்களும் நன்றாக படித்து நல்ல நிலைக்கு வரவேண்டும் என்பதே எனது ஆசை. நான் டாக்டருக்கு படித்து கிராமப்புற மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நகர பகுதிகளில் படிக்கும் மாணவிகளே நீட் தேர்வில் தேர்ச்சி பெற தயங்கும் நிலையில் மலைவாழ் பழங்குடியின மாணவி ஒருவர் நீட் தேர்வில் வென்று சாதனை படைத்துள்ளது அந்த கிராமத்தினரை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.


    ×