search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பழங்கள் விலை உயர்வு"

    • தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது.
    • மாதுளை விலை சற்று குறைந்திருக்கிறது.

    சென்னை:

    சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து காய்கறிகள், பழங்கள் வருகின்றன.

    இதுபோக தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் காய்கறி, கீரை வகைகள், பழங்கள் வருகிறது. அந்த வகையில், தினமும் 700-க்கும் மேற்பட்ட லாரிகளில் 7 ஆயிரத்து 500 டன் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

    தமிழகம் மற்றும் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் கோடை வெயில் கடுமையாக வாட்டி வதைத்து வருகிறது. இதனால் தண்ணீர் தட்டுப்பாடு, வெப்பம் அதிகரிப்பால் காய்கறி மற்றும் பழங்களின் விளைச்சல் குறைந்துள்ளது.

    எனவே, கோயம்பேடு சந்தைக்கு வரும் காய்கறி மற்றும் பழங்களின் அளவு நாளுக்குநாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், கோயம்பேடு மார்க்கெட்டில் 850 பழக்கடைகள் உள்ளன. தற்போது கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் பழங்களின் விலை கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து, சென்னை கோயம்பேடு மார்க்கெட் அண்ணா அனைத்து வியாபாரிகள் பொதுநல சங்க தலைவர் பழக்கடை கே.ஜெயராமன் கூறியதாவது:-

    கோடை காலத்தில் வெயில் தாக்கம் அதிகரிப்பதால் பழங்களின் விலை அதிகரித்து வருகின்றது. பழங்கள் மற்றும் பழச்சாறுகளின் தேவை காரணமாக பழங்களின் விலை கடந்த வாரத்தை காட்டிலும் கிலோவுக்கு ரூ.20 முதல் ரூ.25 வரை உயர்ந்துள்ளது. அந்த வகையில் ஆப்பிள், சாத்துக்குடி, ஆரஞ்சு போன்ற பழங்களின் விலை ரூ.25 வரையிலும், திராட்சை, அன்னாசி, கிர்ணி போன்ற பழங்களின் விலை ரூ.10-ம் உயர்ந்துள்ளது. தர்பூசணி விலை ரூ.5 அதிகரித்துள்ளது.

    அதேநேரம், மாதுளை விலை சற்று குறைந்திருக்கிறது. கடந்த வாரம் ரூ.260 வரை விற்பனையான மாதுளை தற்போது ரூ.240-க்கு விற்பனையாகிறது. தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியிருப்பதால் மாம்பழங்களின் வரத்து அதிகரித்து இருக்கிறது. அந்தவகையில் கடந்த வாரம் ரூ.120 முதல் ரூ.150 வரை விற்பனையான மாம்பழம், தற்போது ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. வரும் காலங்களில் மாம்பழம் விலை குறையவே வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×