search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பல்லாவரம் ரெயில் நிலையம்"

    • பெண் பயணிகள் கூட்டம் ஆண்களை விட அதிகம் காணப்படும்.
    • பெண் பயணிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

    சென்னை தாம்பரம் கடற்கரை வழித்தடத்தில் பல்லாவரம் ரெயில் நிலையம் உள்ளது. இந்த ரெயில் நிலையம் பல்லாவரம் பயணிகள் மட்டுமின்றி, பம்மல், அனகாபுத்தூர், பொழிச்சலூர், திருநீர்மலை, குன்றத்தூர் பகுதி மக்களை இணைக்கும் முக்கிய ரெயில் நிலையமாக உள்ளது.

    இப்பகுதியில் தனியார் பல்கலைக்கழகம், கல்லூரிகள், மேல்நிலை பள்ளிகள் அதிக அளவில் இருப்பதால் மாணவ மாணவிகள் பல்லாவரம் ரெயில் நிலையத்தை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் பிரசித்தி பெற்ற திருநீர்மலை ரங்கநாதர் கோவிலும் இங்கு உள்ளது.

    பெண்கள் அதிக அளவில் வேலை செய்யும் தொழில் கூடங்கள், புதிய குடியிருப்பு அதிக அளவில் இருப்பதால், பல்லாவரம் ரெயில் நிலையத்தில், அதிகாலையில் இருந்து, நள்ளிரவை தாண்டியும் பயணிகள் கூட்டம் அதிக அளவில் இருக்கிறது. பெண் பயணிகள் கூட்டம் ஆண்களை விட அதிகம் காணப்படும். இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த பல்லாவரம் ரெயில் நிலையத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. குறிப்பாக இரவு நேரங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகின்றன.

    கடந்த சனிக்கிழமை மாலை 6 மணிக்கு ஏற்பட்ட மின்தடை, இரவு 9:30 மணிக்கு மேல் தான் மீண்டும், மின்சாரம் வந்தது. அதற்கு முந்தைய வாரத்திலும் இதேப்போல் மூன்று மணி நேரம் மின்தடை ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அடிக்கடி மின்தடை ஏற்படுவதால், பல்லாவரம் ரெயில் நிலையம் இருளில் மூழ்கி தத்தளிக்கிறது.

    இதனால் ரெயில் பயணிகள், குறிப்பாக பெண் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இருளை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் சிலர், பெண் பயணிகளுக்கு பாலியல் ரீதியாக தொல்லையும் கொடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.


    இதனால் பல்லாவரம் ரெயில் நிலையத்தில் பெண் பயணிகள் பலர், ரெயிலை விட்டு இறங்கியதும் தங்கள் செல்போன்களில் உள்ள டார்ச் லைட்டை ஒளிர செய்து, அந்த வெளிச்சத்தில் நடந்து செல்கின்றனர். அதேப்போல் ரெயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கடைகள், மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இயங்கும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் பிளாட்பாரத்தில் வருகின்ற ரெயில்கள், தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமால்பூர், அரக்கோணம் போன்ற இடங்களுக்கு செல்கிறது என்பதை காட்டும் டிஸ்ப்ளே போர்டில், விளக்குகள் எரியாமல், இருள் அடைந்து விடுவதால், வருகின்ற ரெயில் எங்கு செல்வது செல்கிறது என்பது தெரியாமல், பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

    படிக்கட்டுகள் இருளடைந்து கிடப்பதால், வயதானவர்கள் படிகளில் ஏறி வெளியில் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.

    நுங்கம்பாக்கம் ரெயில் நிலையத்தில், கடந்த 2016 -ம் ஆண்டு சுவாதி என்ற இளம் பெண் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து ரெயில் நிலையங்களிலும் சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமராக்கள் உடனடியாக அமைக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. ஆனால் பல்லாவரம், குரோம்பேட்டை உள்ளிட்ட அதிமுக்கியத்துவம் வாய்ந்த ரெயில் நிலையங்களில், இதுவரையில் சி.சி.டி.வி. கேமரா அமைக்கப்படவில்லை.

    பல்லாவரம் ரெயில் நிலையத்தில் அடிக்கடி இரவு நேரங்களில் மின்தடை, சி.சி.டி.வி. கேமராக்கள் இல்லாததை மர்ம கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. இதனால் இரவு நேரங்களில் ரெயில் நிலையம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில், சமூக விரோத செயல்கள் அதிக அளவில் நடக்கின்றன. இதனால் பெண் பயணிகள், பீதியில், தினமும் பயணித்து வருகின்றனர்.

    எனவே ரெயில்வே நிர்வாகம், உடனடியாக பல்லாவரம் ரெயில் நிலையத்தில் கண்காணிப்பு கேமரா அமைப்பதோடு, இரவு நேரங்களில் மின் தடை ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவசர காலங்களில் உபயோகிப்பதற்கான இன்வெர்ட்டர் அல்லது ஜெனரேட்டரை அமைக்க வேண்டும். ரெயில் நிலையத்தில், மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை, பாதுகாப்புக்காக பெண் போலீசார் உள்ளிட்ட காவலர்களை, பணியில் அமர்த்த வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×