search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீயா"

    எல்.கே.சுரேஷ் இயக்கத்தில் ஜெய் - கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி, வரலட்சுமி நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நீயா 2’ படத்தின் விமர்சனம்.
    நடிகர் ஜெய், பால சரவணன் இருவரும் ஒன்றாக வேலை பார்க்கிறார்கள். ஜெய்யை பார்க்கும் கேத்தரின் தெரசாவுக்கு ஜெய் மீது காதல் வந்து, அவரை திருமணம் செய்துகொள்ள விருப்பப்படுகிறார். கேத்தரின் தனது காதலை ஜெய்யிடம் தெரிவிக்க, ஜெய் கேத்தரினை திருமணம் செய்ய மறுக்கிறார். கேத்தரின் விடாப்பிடியாக இருக்க, தனக்கு நாக தோஷம் இருப்பதால், நாக தோஷம் இருக்கும் பெண்ணை தான் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியும் என்று ஜெய் கூறுகிறார்.

    பின்னர் தனக்கும் நாக தோஷம் இருப்பதாக கேத்தரின் கூற, இருவருக்கும் திருமணம் நடக்கிறது. திருமணத்திற்கு பிறகு கேத்தரினுக்கு நாக தோஷம் இல்லை என்பது தெரிய வர, பரிகாரம் செய்வதற்காக இருவரும் கொடைக்கானல் செல்கின்றனர்.



    அங்கு கடந்த ஜென்மத்தில் கிடைத்த சாபத்தால், பிரிந்த தனது காதலனான ஜெய்யுடன் சேருவதற்காக காத்திருக்கிறார் பாம்பு பெண்ணாகிய ராய் லட்சுமி.

    கடைசியில், ஜெய்யின் நாக தோஷம் நீங்கியதா? கேத்தரினுடன் இணைந்தாரா? ராய் லெட்சுமியுடன் இணைந்தாரா? ராய் லட்சுமியின் முன் வாழ்க்கைக் கதை என்ன? அவருக்கு சாபம் வழங்கியது யார்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே படத்தின் மீதிக்கதை.



    நடிகர் ஜெய் இரண்டு விதமான கதாபாத்திரங்களில் வந்து கொடுத்த வேலையை சிறப்பாக செய்துவிட்டுச் சென்றிருக்கிறார். காதல், ஆக்‌ஷன் என தனது வழக்கமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். 

    ஜெய்யை துரத்தி துரத்தி காதலிக்கும் கதாபாத்திரத்தில் கேத்தரின் தெரசா ரசிகர்களை கவர்கிறார். காதல், கவர்ச்சி என கிறங்கடிக்கிறார். பாம்பு பெண்ணாக ராய் லட்சுமி ராயலான பாம்பாக வலம் வருகிறார். குறைவான காட்சிகளில் வந்தாலும் வரலட்சுமி தனது கதாபாத்திரத்திற்கு மெருகேற்றிவிட்டு சென்றிருக்கிறார். பால சரவணன் காமெடியில் ஓரளவு சிரிக்க வைக்கிறார்.



    நாக தோஷத்தை மையமாக வைத்து படத்தின் கதையை நகர்த்தியிருக்கிறார் எல்.கே.சுரேஷ். முதல்பாதியில் இருந்த வேகம் இரண்டாவது பாதியிலும் தொடர்ந்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும். பாம்பு வரும் கிராபிக்ஸ் காட்சிகள் விறுவிறுப்பை தூண்டுகின்றன. படத்தில் எந்த அளவுக்கு விறுவிறுப்பு இருக்கிறதோ அந்த அளவுக்கு கவர்ச்சியும் இருக்கிறது.

    ஷபீரின் பின்னணி இசையும், ராஜவேல் மோகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலமாக இருந்துள்ளன.

    மொத்தத்தில் ‘நீயா 2’ கவர்ச்சி.

    ×