search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நீதிபதி இந்திரா பானர்ஜி"

    நீதி மன்றங்களில் வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி விரைவாகவும் அதே சமயம் தரமானதாகவும் நீதி வழங்கப்பட வேண்டும் என பல்லடத்தில் ஐகோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியுள்ளார். #judgeindirabanerjee #chennaihighcourt

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சார்பு நீதி மன்றத் திறப்பு விழா நடைபெற்றது. புதிய சார்பு நீதிமன்றத்தை ஐகோர்ட்டுதலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

    இதைத்தொடர்ந்து சார்பு நீதிபதி மீனாசந்திரா தலைமையில் நீதிமன்றத்தின் முதல் அமர்வு செயல்பட தொடங்கியது. இதைத்தொடர்ந்து பல்லடம் தனியார் திருமண மண்டபத்தில் விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றன. திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிபதி அல்லி வரவேற்றார். விழாவில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி குத்துவிளக்கேற்றி சார்பு நீதிமன்ற கல்வெட்டை திறந்து வைத்து பேசியதாவது:-

    நீண்ட கால கோரிக்கையான பல்லடம் சார்பு நீதி மன்றத்தை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். நீதி வழங்குவது நீதி துறையின் தனிப்பட்ட பணி என்பது அல்ல அது ஒரு கூட்டுப் பணி ஆகும். நீதித்துறை மட்டும் நீதி வழங்குவதில் முக்கியமானது இல்லை. சட்டம் இயற்றும் பாராளுமன்றம், சட்டப்பேரவையும் முக்கியமானது ஆகும்.

    நீதி மன்றங்களில் வழக்குகளை விரைவாக விசாரணை நடத்தி விரைவாகவும் அதே சமயம் தரமானதாகவும் நீதி வழங்கப்பட வேண்டும். மிக சிறந்த பாராம்பரியம் மிக்க சென்னை ஐகோர்ட்டு அதிக பெண் நீதிபதிகளுடன் தனிச்சிறப்புடன் இயங்கி வருகிறது.

    இளம் வக்கீல்கள் முதலில் மூத்த வக்கீல்களுடன் சேர்ந்து பணியாற்றி அவர்களின் அறிவுரைப்படி செயல்பட்டு நீதி மன்றத்தில் வழக்காடுவதில் சட்ட அனுபவம் பெற வேண்டும். நீதிபதிகள் அமலில் உள்ள சட்டங்களையும் அதில் காலத்திற்கேற்ப செய்யப்படும் திருத்தங்களையும் முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும். மேலும் முந்தைய தீர்ப்புகளை நன்கு தெரிந்து வைத்திருக்க வேண்டும். வக்கீல்கள் நீதி மன்றத்தை புறக்கணிப்பதால் நீதிபதிகளுக்கு நஷ்டம் ஏதும் இல்லை. அதனால் வழக்குதொடுப்பவர்களுக்கு தான் இழப்பு ஏற்படுகிறது.

    தமிழ்நாடு நீண்ட பாராம்பரிய வரலாறு கொண்ட மாநிலம் ஆகும். உலக அளவில் பேசப்படும் தமிழ் சிறந்த மொழியாகும். இந்தியாவின் தேசிய மொழிகளில் ஒன்றாக விளங்குகிறது. தமிழ் மொழி கற்றுக்கொள்ள எனக்கு ஆசை தான். ஆனால் எனக்கு 60 வயது ஆவதால் தமிழ் மொழி கற்றுக் கொள்ள எனக்கு சிறிது காலம் ஆகும். 

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ரவிசந்திரபாபு, கிருஷ்ணகுமார், பவானிசுப்பராயன், திருப்பூர் மாவட்ட கலெக்டர் பழனிசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கயல்விழி, பல்லடம் வக்கீல் சங்க தலைவர் சிவசுப்பிரமணியம் மற்றும் வக்கீல்கள், அரசு அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மை குற்றவியல் நீதிபதி ஜெகநாதன் நன்றி கூறினார். #judgeindirabanerjee #chennaihighcourt

    ×