search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நியூராலிங்க்"

    • மனித மூளையிடும் கட்டளைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபடுகிறது நியூராலிங்க்
    • மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் தென்படுவதாக நியூராலிங்க் தெரிவித்தது

    அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழிலதிபர்களில் ஒருவரும், உலக கோடீசுவரர்களில் முன்னணியில் உள்ளவருமான எலான் மஸ்க் நிறுவியது, நியூராலிங்க் (Neuralink) எனும் நிறுவனம்.

    மனித மூளை, நரம்பு மண்டலம், முதுகுத் தண்டுவடம் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து உயர் தொழில்நுட்ப ஆராய்ச்சி செய்ய தொடங்கப்பட்டது நியூராலிங்க்.

    கடந்த வருடம், அமெரிக்க உணவு மற்றும் மருந்துகள் நிர்வாகத்துறை (FDA), நியூராலிங்க் நிறுவனத்திற்கு, மனித மூளையில் சிப் எனப்படும் மின்னணு சில்லுகளை பொருத்தி அவற்றின் மூலம் மனித மூளையின் திறனை மேம்படுத்தவும், நோய்களின்றி வாழ வழி செய்யவும் ஆராய்ச்சி மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

    தற்போது நியூராலிங்க் நிறுவனத்தின் முதல் முயற்சியாக ஒரு மனிதரின் மூளையில் "சிப் பொருத்துதல்" வெற்றிகரமாக நடந்துள்ளதாக எலான் மஸ்க் தெரிவித்தார்.

    மேற்கொண்டு எந்த தகவலையும் நியூராலிங்க் வழங்கவில்லை.

    நியூராலிங்க் நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட ஒரு ரோபோட்டின் துணையுடன், மிக துல்லியமாக நடைபெற்ற ஒரு அறுவை சிகிச்சை முறையில் இந்த சிப் பொருத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    முதற்கட்ட பரிசோதனைகளில் இந்த சிப்பில் இருந்து மின் சமிக்ஞைகளின் பரிமாற்றம் (electrical signal conduction) நடக்க தொடங்கி விட்டதற்கான அறிகுறிகள் தென்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    பக்கவாதம் போன்ற மனிதர்களை செயலிழக்க செய்யும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கை, கால்கள், முகம் உள்ளிட்ட உறுப்புகள் அசைவற்று போய் விடும். அந்நிலையில் உள்ளவர்களுக்கு அவர்களின் மூளை, உடல் உறுப்புகளுக்கு எண்ணங்கள் மற்றும் கட்டளைகளை உடனுக்குடன் அனுப்பும் பரிமாற்றமும் நின்று விடும்.

    அத்தகைய குறைபாடு உள்ளவர்களின் மூளையில் மின்னணு சிப் பொருத்தி, அவற்றை எண்ணங்களின் மூலம் கட்டுப்படுத்தி, அதன் பயனாக உறுப்புகளை செயல்பட வைக்க முயல்வதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று.

    தனிப்பட்ட பங்குதாரர்களை கொண்டு மஸ்க் உருவாக்கியுள்ள நியூராலிங்க், தற்போது $5 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

    • நியூராலிங்க் நிறுவனம், மனித மூளைக்குள் ‘சிப்’ பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து பரிசோதனை செய்ய திட்டம்
    • பரிசோதனையில் சுமார் 1500 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

    வாஷிங்டன்:

    உலகின் நம்பர் ஒன் பணக்காரரான எலான் மஸ்க் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ், டுவிட்டர், நியூராலிங்க் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளராக உள்ளார்.

    இதில் நியூராலிங்க் நிறுவனம், மனித மூளைக்குள் 'சிப்' பொருத்தி அதனை கணினியுடன் இணைத்து அதன் மூலம் கணினியுடன் நேரடி உரையாடலை ஏற்படுத்தும் பரிசோதனையை தொடங்க இருப்பதாக தெரிவித்து இதற்காக 2018-ம் ஆண்டு முதல் நடத்தும் பரிசோதனையில் விலங்குகள் பயன்படுத்தப் பட்டுள்ளன.

    இதுவரை பரிசோதனையில் செம்மறி ஆடுகள், பன்றிகள், குரங்குகள் உள்பட சுமார் 1500 விலங்குகள் கொல்லப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் நியூராலிங்க் நிறுவனத்தின் தற்போதைய மற்றும் முன்னாள் ஊழியர்கள், விலங்குகள் கொல்லப்பட்டதை உறுதிபடுத்தினர். விலங்குகளிடம் நடந்த பரிசோதனைகள் அவசர அவசரமாக செய்யப்பட்டதால் விலங்குகள் கடுமையாக துன்புறுத்தப்பட்டு உயிரிழப்புகளை சந்தித்தன என்று தெரிவித்தனர்.

    பரிசோதனையில் விலங்குகள் கொல்லப்பட்டு இருப்பது விலங்குகள் நலன் மீறல் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆராய்ச்சியை விரைவுபடுத்துவதற்கான எலான் மஸ்க்கின் அறிவுறுத்தலால் விலங்குகளின் இறப்பு எண்ணிக்கை தேவையை விட அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து விலங்கு நல சட்டத்தின் கீழ் நியூராலிங்க் நிறுவனம் மீது அதிகாரிகள் விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எலான் மஸ்க் மற்றும் நியூராலிங்க் நிறுவனம் கருத்து தெரிவிக்கவில்லை.

    ×