search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாயனார்"

    சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்துக் கூறும் அடியார் பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் எறிபத்தர் என்னும் நாயனார் ஆவார். இவரது வாழ்வில் சிவபெருமான் செய்த திருவிளையாடலை அறிந்து கொள்ளலாம்.
    சுந்தரர் தனது திருத்தொண்டத் தொகையில் சிறப்பித்துக் கூறும் அடியார் பெருமக்களுள் குறிப்பிடத்தக்கவர் எறிபத்தர் என்னும் நாயனார் ஆவார். இவரை ‘இலைமலிந்த வேல்நம்பி எறிபத்தர்க்கு அடியேன்’ என்று சுந்தரர் குறிப்பார். இவர் சோழ நாட்டில் புகழ்பெற்று விளங்கிய கரூரில் அவதாரம் செய்தவர். அவ்வூரின்கண் உள்ள  ஆனிலை என்னும் திருக்கோயிலில் உள்ள இறைவனைப் போற்றி வணங்கி வந்தார். சிவபெருமானின் அடியார்களுக்கு ஏதேனும் இடர் நேரின் அங்கு விரைந்து சென்று அவர்களின் இடர்களைத் தீர்த்து வந்தார்.

    அடியார்களுக்கு இடர் தந்தவர்களை மழு ஆயுதத்தால் எறிந்து தண்டிக்கும் இயல்பினை உடையவர் ஆதலால் எறிபத்தர் எனப்பட்டார், இத்தகைய இலைதொழில் அமைந்த மழு ஆயுதத்தினைத் தாங்கி நின்றமையாலே சுந்தரரால் இலைமலிந்த வேல்நம்பி என்று புகழப்பட்டார். கரூரின் கண் அமைந்திருந்த திருஆனிலைக் கோயிலில் உறைந்து அருட்பாலித்து வரும் இறைவனை வழிபடுவதை தன் வழக்கமாகக் கொண்டு வாழ்ந்து வந்தார் சிவகாஃமியாண்டார் என்னும் அடியவர். இவர் வைகறைப் பொழுதில் எழுந்து நீராடித் தூய்மை உடையவராய்த் தன் வாயினைத் துணியால் கட்டிக்கொண்டு நந்தவனம் சென்று மலர்களைப் பறிப்பார். பின் அவற்றை பூக்கூடையில் கொண்டு சென்று  இறைவனுக்குப் படைப்பார். இதனை,

    ‘‘வைகறை உணர்ந்து போந்து புனல் மூழ்கிவாயும் கட்டி
    மொய்ம்; மலர் நெருங்கு வாச நந்தன வனத்து முன்னிக்
    கையினில்; தெரிந்து நல்ல கமழ் முகையலரும் வேலைத்
    தெய்வநா யகருக்குச் சாத்தும் திருப்பள்ளித் தாமம் கொய்து ’’
    என விளக்குவார் சேக்கிழார்,

     இவ்வாறே ஓர் அஷ்டமி நாளன்று  இறைவனுக்குத் தொண்டு செய்வதற்காகப் பூக்கூடையுடன் தெருவில் சென்று கொண்டிருந்தார். அவ்வேளையில் சோழ மன்னனின் பட்டத்து யானை பாகனுக்கும் அடங்காமல் மதம் பிடித்து தெருவில் ஓடி வந்தது. அந்த யானை சிவகாமியாண்டார் தன் கையில் வைத்திருந்த பூக்கூடையைப் பிடுங்கி தெருவில் எறிந்ததுடன் அந்தப் பூக்களையும் தன் காலால் மிதித்தும் நாசம் செய்தது. அதனைக் கண்டு கோபம் கொண்ட சிவகாமியாண்டார் அந்த யானையினைத் தனது தண்டத்தால் அடிக்க ஓடி, தன் வயதின் இயலாமை காரணத்தால் தவறி விழுந்தார். அந்நிலையிலும் சிவபெருமானை நினைத்து சிவதா, சிவதா என்று அரற்றினார், சிவகாமியாண்டாரின் அலறலைக் கேட்ட எறிபத்தர் அவ்விடத்திற்கு விரைந்து வந்தார், அங்கு அவர் கண்ட காட்சி அவருக்குக் கடும் கோபத்தினை விளைவித்தது. யானையின் முன் சென்ற அவர் தமது மழுவினால் யானையின் துதிக்கையினை வெட்டிச் சாய்த்தார். இதனை

    ‘‘பாய்தலும் விசை கொண்டுய்க்கும் பாகரைக் கொண்டு சீறிக்காய்தழல் உமிழ்கண் வேழம் திரிந்து மேற்கதுவ அச்சம் தாய் தலையன் பின் நிற்குமே! தகைத்து பாய்ந்து தோய் தனித் தடக்கை வீழ மழுவினால் துணித்தார் தொண்டர்’’

    என விளக்கியுரைப்பார் சேக்கிழார், மேலும் யானையின் மேல் வீற்றிருந்த யானைப்பாகர்களையும் வெட்டி வீழ்த்தினார். தனது யானைக்கும் யானைப் பாகர்களுக்கும் நடந்த நிகழ்வுகளைக் கேட்டறிந்த சோழ மன்னன் அவ்விடத்திற்கு வந்தான். அங்கு கையில் மழுவுடன் நின்றிருந்த எறிபத்தரைக் கண்டான். உடன்  தன்னுடன் வந்திருந்த படையினரைப் பின் நிறுத்தி தான் மட்டும் முன்வந்து  எறிபத்தரை வணங்கி இங்கு நிகழ்ந்தது யாது? என வினவினான். அதற்கு எறிபத்தர் யானையின் செயலினையும் அதன் செயலினைத் தடுக்காது நின்ற பாகர்களின் நிலையினையும் எடுத்துக் கூறினார். அதனைக் கேட்ட அரசன் தனது
    பட்டத்து யானை செய்த செயலிற்கு இத்தகைய தண்டனை போதாது, பட்டத்து யானையின் உரிமையாளனான தானே தண்டிக்கப்பட வேண்டியவன் எனத் தாழ்ந்து நின்றான்.

    ‘‘அங்கணர் அடியார் தம்மைச் செய்தஇவ் அபராதத்துக்குக் இங்கிது தன்னாற் போதாது என்னையும் கொல்ல வேண்டும் மங்கல மழுவால் கொல்கை வழக்குமன்று இதுவாமென்று செய்கையால் உடைவாள் வாங்கிக் கொடுத்தனர் தீர்வு நேர்வார்’’

    மேலும் குற்றம் இழைத்தவனாகிய தன்னை மங்கல மழுவால் தண்டிப்பது அவ் ஆயுதத்திற்குப் பெருமை சேர்ப்பதாகாது, எனவே என்னை இவ் வாளினால் தண்டியுங்கள் என்று தன் உடைவாளினைத் தந்து நின்றான். சோழமன்னனின் இத்தகைய செயலினைக் கண்ட எறிபத்தர் இம்மன்னன் சிவனடியார்கள் மேல் வைத்திருக்கும் அன்பினை அறிந்தேன் என மனத்தினுள் நினைத்தவராய் மன்னன் கொடுத்த வாளினை வாங்காதவராய் நின்றார். பின் தான் வாளினை வாங்காது விடுத்தால் மன்னன் அவ்வாளினாலே தன்னை மாய்த்துக் கொள்வான் எனக் கருதி அதனைத் தன் கையில் வாங்கிக்கொண்டார்.

    அவரின் செயலினைக் கண்ட  மன்னன் தன்னை கொல்லுமாறு வேண்டினான். எறிபத்தரோ இவ் அரசனைக் கொல்லக்கூடாது என எண்ணித் தன்னைத்தானே மாய்த்துக்கொள்ளத் துணிந்தார். அதனைப் பார்த்த மன்னன் பெரியவரின் செயலினால் கெட்டேன் எனச் சென்று தன் வாளினைப் பறித்துக் கொண்டான். அத்தகைய நிலையில் இறைவனின் திருவருளால் வானிடை ஓர் அசரீரி எழுந்தது. அவ் அசரீரி அன்பர்களே! உங்களது திருத்தொண்டின் பெருமையினை உலக மாந்தர்க்கு உணர்த்துதற் பொருட்டே இத்தகைய திருவிளையாடலை நிகழ்த்தினோம். என்றது.

    உடன் யானையும் பாகரும் உயிர்பெற்று எழுந்தனர், இத்தகைய அருஞ்செயலினைக் கண்ட எறிபத்தர் மன்னனை வணங்கினார், இருவரும் இறைத் திருவருளைப் போற்றினர், சிவகாமியாண்டாரின் பூக்கூடையும் நல்ல மலர்களால் நிறைந்தது, பாகர்கள் பட்டத்து யானையினை மன்னன் அருகில் கொண்டு சென்றனர். எறிபத்தர் மன்னனிடம்  அவ்யானையின் மீது என் உளம் மகிழ எழுந்தருள வேண்டும் என வேண்டினார்.

    மன்னன் அவ் யானையின் மேல் அமர்ந்து அரண்மனையினை அடைந்தான். சிவகாமியாண்டார் தன் பூக்கூடையுடன் திருக்கோயிலை அடைந்து இறைவனை வணங்கினார். இவ்வாறு சிவனடியார்களுக்கு இடர் நேர்ந்த பொழுதெல்லாம் தன் ஆண்மைத் திறத்தால் நீக்கியருளிய எறிபத்தர் திருக்கயிலையை அடைந்து சிவகணத்தின் தலைவர் ஆனார். இவரது பெருமையினை நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டத் திருவந்தாதியில்

    ‘‘ஊர்மதில் மூன்றட்ட உத்தமர்க் கென்றோர் உயர்தவத்தோன்
    தார்மலர் கொய்யா வருபவன் தண்டின் மலர் பறித்த
    ஊர்மலை மேற்கொளும் பாகர் உடல் துணி யாக்குமவன்
    ஏர்மலி மாமதில் சூழ்கரு வூரி லெறிபத்தனே ’’

    எனக் குறிப்பார்.

    வணிகரான கலிகம்ப நாயனார், சிவனின் திருவடி மறவாத சிந்தனையாளர். இவரது வாழ்வில் சிவபெருமாள் நிகழ்த்திய திருவிளையாடலை அறிந்து கொள்ளலாம்.
    வணிகரான கலிகம்ப நாயனார், சிவனின் திருவடி மறவாத சிந்தனையாளர். ஈசனின் மீது பற்று கொண்டு, திருத்தூங்கானைமடம் என்ற ஆலயத்தில் தொண்டு புரிந்து வந்தார். சிவனடியார்களை தன் இல்லத்திற்கு அழைத்து உயர்தர உணவுகளை படைத்து உபசரிப்பதிலும் முன் நிற்பவர். சிவன் அடியாளர்கள் விருப்பமுற்று எதனைக் கேட்டாலும், இல்லையென்று சொல்லாமல் வழங்குபவர்.

    ஒரு முறை தனது இல்லத்திற்கு பல அடியார்களை உணவருந்த கலிகம்ப நாயனார் அழைத்திருந்தார். அதன்படி பல அடியார்கள் அவர் இல்லத்தில் கூடினர். வந்திருந்த அடியார்களுக்கு கலிகம்ப நாயனாரும், அவரது மனைவியும் பாதபூஜை செய்தனர். மனைவி நீர்வார்த்துக் கொடுக்க, அடியார்களின் பாதங்களை கழுவினார் கலிகம்ப நாயனார்.

    அங்கு வந்திருந்த அடியாரில் ஒருவர், ஏற்கனவே கலிகம்பரின் வீட்டில் பணிபுரிந்த பணியாள். இதனால் அவருக்கு பாத பூஜை செய்ய, நாயனாரின் மனைவி சற்று யோசித்தார். அடியாருக்கு பாதபூஜை செய் வதற்கு நீரை வார்க்காமல், மனைவி அப்படியே நிற்பதைக் கண்டார் நாயனார். அவருக்கு தன் மனைவியின் மனதில் ஓடும் எண்ணத்தை புரிந்து கொள்ள முடிந்தது.

    அவர் தன் மனைவிடம், “அடியார்களின் முந்தைய நிலையை நினைக்கக்கூடாது. அது பிழையானது. யாராக இருந்தாலும் அவர்கள் அடியார் என்ற சிந்தனையே இருக்க வேண்டும். அவர் வழிபடத் தகுந்தவரே ஆவார். எனவே நீ, அடியாருக்கு நீர் வார்க்காமல் இருப்பது குற்றம்” என்றார்.

    சொன்னவர், தன் மனைவியின் பதிலை எதிர்பார்க்காமல், அவரது இரு கரங்களையும் வாள் கொண்டு துண்டித்தார். பின்னர் தாமே அடியாருக்கு நீரை வார்த்து, அவரது திருவடியை தொட்டு பூஜித்தார். வந்திருந்த அடியார்கள் அனைவரும் உணவருந்து வதற்கு, அனைத்தையும் படைத்து உபசரித்தார்.

    அடியாருக்கு நீர்வார்க்க யோசித்தவர் மனைவியே ஆனாலும் அவரை தண்டித்த கலிகம்ப நாயனாரின் முன்பாக, ஈசன் தோன்றினார். அவருக்கும், அவரது மனைவிக்கும் அருள்புரிந்து சிவலோக பதவி வழங்கினார்.
    சோழ வள நாட்டின் கணமங்கலம் என்ற ஊரில் பிறந்தவர் தாயனார் என்னும் சிவபக்தர். இவரது வாழ்க்கையில் சிவபெருமாள் செய்த திருவிளையாடலை பார்க்கலாம்.
    19-1-2019 அரிவாட்டாய நாயனார் குருபூஜை

    சோழ வள நாட்டின் கணமங்கலம் என்ற ஊரில் பிறந்தவர் தாயனார் என்னும் சிவபக்தர். இவர் நாள்தோறும் ஈசனுக்கு செந்நெல் அரிசியால் ஆன அமுதும், செங்கீரை, இனிய மாவடு ஆகியவற்றை இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து வழிபடும் வழக்கம் கொண்டவர். பெரும் செல்வந்தராக இருந்த காரணத்தால், இறைவனுக்கு அனுதினமும் அமுது செய்து படைப்பதில், தாயனாருக்கு எந்த தடையும் இருக்கவில்லை.

    எந்த ஒரு விஷயமும் அப்படியே சென்று கொண்டிருப்பதில் எந்த சுவாரசியமும் இல்லை தானே. அதனால் தாயனாரின் வாழ்க்கையில் கொஞ்சம் விளையாட நினைத்தார், இறைவன். ஆம்.. அவரது பக்தியை சோதித்துப் பார்ப்பதோடு, அதன் மூலம் அவரை உலகறியச் செய்யவும் இறைவன் சித்தமானார்.

    அதன் தொடக்கமாக அதுநாள் வரை செல்வச் செழிப்பில் திளைத்து வந்த தாயனாரின் செல்வம் கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கியது. எந்த வழியில் செல்வம் செலவாகிறது என்பதே தெரியாத வகையில் ஒரு பக்கமாக செல்வம் போய்க் கொண்டிருந்தது. இதனால் சில காலத்திலேயே வறுமையின் பிடியில் சிக்கிக்கொண்டார் தாயனார்.

    ஆனாலும் கூட வறுமையில் இருந்தாலும் தாயனார் தளர்வின்றி, முன்பைவிட அதீத அன்புடன் இறைவனுக்கு தொண்டு செய்யத் தொடங்கினார். செந்நெல் அரிசியும், செங்கீரையும், மாவடுவும் முன்பு போலவே இறைவனுக்கு நைவேத்தியமாக படைத்து வந்தார். அதற்காக தாயனார் கூலிக்கு நெல் அறுக்கச் சென்றார். அதன் வாயிலாக கிடைக்கும் செந்நெல்லைக் கொண்டு அமுது செய்து இறைவனுக்கு நைவேத்தியம் படைத்து வந்தார். கூலியாக கிடைக்கும் செந்நெல் முழுவதையும் இறைவனுக்கே அமுது செய்து படைத்து விடுவார். கார் நெல்லை மட்டும் உணவாக்கி தாயனாரும், அவரது மனைவியும் உண்பார்கள்.

    ஒரு நாள் அதற்கும் சிக்கலை உருவாக்கினார் இறைவன். ஒரு கட்டத்தில் கூலியாக கிடைத்து வந்த நெல் அனைத்தும் செந்நெல்லாகவே கைக்கு வந்து சேர்ந்தது. கார் நெல் கிடைக்கவில்லை. ‘செந்நெல் முழுவதும் இறைவனுக்கே’ என்ற கொள்கையில் இருந்து பின்வாங்க மனமில்லாத தாயனார், அனைத்து செந்நெல்லையும் அமுதாக்கி இறைவனுக்கு படைத்தார். தன் வீட்டின் கொல்லை புறத்தில் இருந்த கீரைகளை சமைத்து கணவனும், மனைவியும் உண்டனர். ஓரிரு நாளில் கீரையும் கிடைக்காமல் போய்விட, தண்ணீர் மட்டுமே அருந்தி இறைதொண்டை தடையின்றி தொடர்ந்தார் தாயனார்.

    ஒரு நாள் வழக்கம்போல், தாயனார், கூடை நிறைய தூய செந்நெல் அரிசி, மென்மையான செங்கீரை, மாவடு போன்றவற்றை சுமந்து கொண்டு மனைவியுடன் கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். பல நாட்களாக பட்டினி என்ற நிலையால், அவரது கால்கள் மேற்கொண்டு நடக்க முடியாமல் தள்ளாடின.

    தாயனாரின் பின்னால் வந்த அவரது மனைவி, தன் கணவன் கீழே விழுந்து விடாமல் இருக்க தன் வலக்கரத்தால் கழுத்தை தாங்கிப் பிடித்தும், சரிந்து விழுந்தார் தாயனார். இதனால் அவர் தலையில் சுமந்திருந்த கூடை விழுந்து செந்நெல் அரிசி, கீரை, மாவடு போன்றவை தரையில் பரவின. தூய்மையற்றதாய் மாறின. நொந்து போனார் தாயனார்.

    ‘இறைவனுக்கு படைக்க வைத்திருந்த அனைத்தும் சிதறிப்போனப் பின் கோவிலுக்கு சென்று என்ன செய்வது?’ என்று சிந்தித்தவர், எல்லாம் இறைவனின் இடம், அவன் இல்லாத இடமே இல்லை. அப்படிஇருக்கையில் நிலப்பரப்பிலும் அவன் இருக்கவே செய்வான். ஆகவே தாயனார் இறைவனை வேண்டினார். ‘இறைவா! நீ எங்கும் நிறைந்தவன், எல்லாம் ஆனவன். இந்த நிலவெடிப்பிலும் நீ இருக்கிறாய். எனவே நிலப்பரப்பில் விழுந்துகிடப்பவற்றை அமுது செய்து அருளும். இல்லையேல் தவறு செய்தவனாவேன். ஆகையால் என்னை மாய்த்துக் கொள்ளவும் தயங்க மாட்டேன்’ என்று ஈசனிடம் மன்றாடினார்.

    நாள்தோறும் இறைவனுக்கு, தாயனார் அமுது செய்விக்கும் போது ஈசன் அமுது செய்யும் குறிப்பாக ‘விடேல்’ என்ற ஒலி கேட்பது வழக்கம். அந்த ஒலி கேட்காததால் இறைவன் அமுது செய்யவில்லை என்பதை உணர்ந்து, தன் இடையில் சொருகி வைத்திருந்த அரிவாளை எடுத்து, கழுத்தை அறுக்க முயன்றார்.

    அப்போது நிலவெடிப்பில் இருந்து வெளிப்பட்ட ஒரு கை, தாயனாரை தடுத்து நிறுத்தியது. மேலும் மாவடுவைக் கடிக்கும் ஒலியாக, ‘விடேல், விடேல்’ என்னும் ஓசையும் எழுந்தது.

    இறைவனுடைய கருணையை எண்ணி துதித்தார் தாயனார். இறைவனை துதிபாடிய கண்ணீர் உகுந்த படி நின்றார்.

    அப்போது இடப வாகனத்தின் மீது பார்வதி சமேதராக சிவபெருமான் காட்சி கொடுத்தார். “அன்பனே! நீ புரிந்த செய்கையால் உயர்வு பெற்றார். உன் மனைவியுடன் என்றும் சிவலோகத்தில் நம்மை விட்டு நீங்காது வாழ்வாய்” என்று அருள் செய்து மறைந்தார்.

    தன்னுடைய கழுத்தை அரிவாளால் அரிந்த காரணத்தால் தாயனார், ‘அரிவாட்டாய நாயனார்’ என்னும் சிறப்பு பெயர் பெற்றார்.
    நாயனாருக்கு ஆயிரத்தில் ஒருவராக வந்து அமுதுண்ட இறைவன் ‘ஆயிரத்தில் ஒருவர்’ என அழைக்கப்படலானார். இந்த ஆயிரத்தில் ஒருவர் அருள்புரியும் ஆலயமே தான்தோன்றி அப்பர் ஆலயம்.
    காவிரி பாயும் வற்றாத வளம் கொழிக்கும் ஊர் ஆக்கூர். இங்கு 63 நாயன்மார்களில் ஒருவரான சிறப்புலி நாயனார் வசித்து வந்தார். இவர் சிறந்த வள்ளல். தன் இல்லம் நாடி வருபவர்களுக்கு இல்லை என்று கூறாது உணவு அளித்து உபசரிப்பவர். எத்தனை சிவனடியார்கள் வந்தாலும் அனைவருக்கும் மனம் கோணாது அமுது படைத்து வந்தார் சிறப்புலி நாயனார். அதனாலேயே சுந்தரர் இவரை ‘சீர்கொண்ட புகழ் வள்ளல்’ எனப் போற்றியுள்ளார்.

    நாயனார் ஒரு நாள் ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவூட்ட முடிவு செய்தார். ஆனால் ஒருவர் குறையவே நாயனார் மன வேதனை அடைந்தார். உள்ளம் உருக இத்தலத்து இறைவனான தான்தோன்றி அப்பரை வேண்டினார். அடியாரின் மன வேதனையை இறைவன் உணர்ந்தார். உடனே தானே சிவனடியார் வேடம் பூண்டு நாயனாரின் இல்லம் வந்தார். நாயனார் ஆயிரம் பேருக்கும் அமுது படைத்தார். பின் நாயனாருக்கு இறைவன் காட்சி தந்தார்.

    நாயனாருக்கு ஆயிரத்தில் ஒருவராக வந்து அமுதுண்ட இறைவன் ‘ஆயிரத்தில் ஒருவர்’ என அழைக்கப்படலானார். பின்னர் கார்த்திகை மாதம் பூராட நட்சத்திரத்தன்று சிறப்புலி நாயனாரை இறைவன் ஆட்கொண்டார். எனவே இந்த ஆலயத்தில் இன்றும் அந்த நட்சத்திர நாளில் சிறப்புலி நாயனார் வழிபாடு சிறப்புற நடந்து வருகிறது.

    இந்த ஆயிரத்தில் ஒருவர் அருள்புரியும் ஆலயமே தான்தோன்றி அப்பர் ஆலயம். இறைவன் தான்தோன்றியப்பர். இறைவியின் திருப்பெயர் வாள்நெடுங்கண்ணியம்மை. ஆலயம் கீழ்திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் உள்ள ராஜகோபுரத்தைக் கடந்ததும் விசாலமான வெளிபிரகாரம். எதிரே இறைவனின் ஆலயம் உள்ளது. முற்பிறவியில் சிலந்தியாக இருந்து யானை மேல் பகை கொண்டு உயிர்விட்டபின் இறைவன் ஆட்கொள்ள மறுபிறவியில் சோழ மன்னனாய் பிறந்தான். அந்த சோழ மன்னன் கோசெங்கோட்சோழன் யானை ஏற முடியாத எழுபது மாடக்கோவில்களை கட்டிய வரலாறு தெரிந்ததே. அந்த மாடக்கோவில்களில் இதுவும் ஒன்று.

    இறைவன் சன்னிதிக்கு நேரேயும், தென்புறத்திலும் படிகட்டுகள் உள்ளன. ஆலயம் 6 அடி உயரத்தில் அமைந்துள்ளது. சன்னிதிக்கு எதிரே நந்தியும் பலிபீடமும் உள்ளன. இந்த முகப்பு மண்டபத்தின் கிழக்கில் சிவசூரியன், பைரவர், காலபைரவர் திருமேனிகள் உள்ளன.

    அடுத்துள்ள மகா மண்டபத்தின் ஈசானிய மூலையில் நவக்கிரக நாயகர்கள் அருள்பாலிக்கின்றனர். மகாமண்டபத்தை அடுத்து உட்பிரகாரம் உள்ளது. பிரகாரத்தை வலமாக வந்தால் பாணலிங்கங்களும், அதை அடுத்து விசுவநாதர், விசாலாட்சி அம்மனும் உள்ளனர். அடுத்து இந்த ஊரில் பிறந்து இங்கேயே முக்தி அடைந்த, இறைவனுக்கு அமுது படைத்த சிறப்புலி நாயனார் உருவம் தனி சன்னிதியில் உள்ளது. அடுத்து நாவுக்கரசர், ஞான சம்பந்தர், சுந்தரமூர்த்தி சங்கிலியார், பாவை நாச்சியார் திருமேனிகள் உள்ளன. மேற்கு திருச்சுற்றில் கணபதியும், பாலமுருகன், அருணகிரி, கஜலட்சுமி, கயிலாய நாதரும், தெற்கில் பர்வதவர்த்தினி, வாயுலிங்கம், தேயுலிங்கம், அப்புலிங்கம் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.

    மகாமண்டபத்தில் சிறப்புலி நாயனாரின் சன்னிதிக்கு நேர் எதிரே தெற்கு நோக்கிய நிலையில் நாயனாருக்கு காட்சி கொடுத்த மூர்த்தியாகிய ஆயிரத்தில் ஒருவர் சன்னிதி உள்ளது. கையில் தண்டு ஊன்றிய நிலையில் காட்சி தருகிறார் இறைவன். இந்த மூர்த்தி செப்பு மேனியாகும். அர்த்த மண்டப நுழைவாயிலின் இருபுறமும் துவாரபாலகர்களின் உருவம் மாடத்தின் உள்ளே மிக அழகாக அமைந்துள்ளது.

    உள்ளே கருவறையில் இறைவன் தான்தோன்றியப்பர் லிங்கத் திருமேனியில் கீழ்திசை நோக்கி அருள்பாலிக்கிறார். லிங்கத்தின் மேல்பகுதி சற்றே பிளந்த நிலையில் காட்சி தருவது எங்கும் காணாத அமைப்பாகும். இந்த ஊருக்கு அருகே உள்ள திருக்கடையூரில் அமிர்தகடேஸ்வரர் மார்க்கண்டேயனுக்காக எமனை சம்ஹாரம் செய்தபோது இந்த பாணம் வெடித்ததாக செவிவழி தகவல்.

    சோழமன்னன் காலத்தில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது இந்த ஆலயம். கோவில் கட்ட எண்ணி ஊர் மக்கள் இடத்தை தேர்வு செய்து அதை சமன் செய்த போது ஓரிடத்தில் மிகப்பெரிய ஒலி எழுந்தது. அந்த இடத்தை தோண்டி பார்த்த போது அங்கே சிவபெருமானின் லிங்கத்திருமேனி விண்ணொளியாகப் பிரகாசித்தது. அந்த இடத்திலேயே சோழ மன்னன் ஆலயம் கட்டினான். இறைவன் தானாகக் கிடைத்ததால் இறைவனுக்கு தான்தோன்றியப்பர் எனப் பெயரிட்டு அழைத்தனர். தரையை தோண்டிய போது லிங்கத்தின் மேல்பகுதி சற்றே பிளந்து இருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

    இறைவனின் தேவகோட்டத்தில் அகத்தியர், நர்த்தனவிநாயகர் தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்க்கை திருமேனிகள் உள்ளன. தவிர இந்த ஆலயத்தைக் கட்டிய கோசெங்கோட்சோழன் இறைவனை வழிபடும் நிலையில் உள்ள திருவுருவம் உள்ளது.

    இறைவன் ஆலயத்திற்கு வலதுபுறம் இறைவி வாள் நெடுங்கண்ணியின் ஆலயம் உள்ளது. இறைவியும் கீழ்திசை நோக்கியே அருள்பாலிக்கிறாள். இரண்டாம் ராஜாதிராஜன், மூன்றாம் ராஜேந்திரசோழன், பல்லவன், கோப்பெருந்சிங்கன், பாண்டியன் குலசேகரன் ஆகிய மன்னர்களின் கல்வெட்டு சாசனங்கள் இந்த ஆலயத்தில் உள்ளன.

    ஆலய வெளி திருச்சுற்றில் மேற்கில் விநாயகர் அருள்பாலிக்கிறார். அடுத்து தலவிருட்சமான சரகொன்றை மரம் தழைத்தோங்கி நிற்க அதனை அடுத்து சரஸ்வதி தேவியின் சன்னிதி உள்ளது. இங்கு சரஸ்வதி வீணையுடன் காட்சி தருகிறாள். அடுத்து முருகன், வள்ளி, தெய்வானையும் வடக்கில் சண்டீஸ்வரர் சன்னிதியும் உள்ளன.

    இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஆலயத்திற்கு தினசரி மூன்று கால ஆராதனை நடக்கிறது. ஐப்பசியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுவதுடன் சிவராத்திரி, நவராத்திரி, திருவாதிரை, கந்தசஷ்டி, பங்குனி உத்திரம், கார்த்திகை என அனைத்து விசேஷ நாட்களிலும் இறைவன் இறைவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

    ஆலயம் தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

    இத்தல இறைவன் இறைவியை ஆராதிப்பதால் திருமண தடை விலகுவதுடன் இத்தலம் ஒரு பரிகார தலமாகவும் விளங்குகிறது என்று பக்தர்கள் சொல்வது உண்மையே.
     
    அமைவிடம் :

    நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் இருந்து திருக்கடையூர் செல்லும் நெடுஞ்சாலையில் 17 கி.மீ. தொலைவில் உள்ள ஆக்கூர் என்ற ஊரில் உள்ளது இந்த ஆலயம். மயிலாடுதுறை, காரைக்கால், சீர்காழி, திருக்கடையூர் ஆகிய ஊர்களிலிருந்து பேருந்து வசதி நிறைய உள்ளது.
     
    63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு தங்க மீன் வழங்கும் விழா நாகை கடற்கரையில் நடந்தது. இந்த விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சிவபெருமானை தரிசனம் செய்தனர்.
    நாகையில், நீலாயதாட்சியம்மன் காயரோகண சாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற பல்வேறு சிறப்புகளை கொண்ட இந்த கோவிலில் 63 நாயன்மார்களில் ஒருவரான அதிபத்த நாயனார், தனி சன்னதியில் அமைந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். அதிபத்த நாயனார், நுழைபாடி எனும் நம்பியார் நகரில், மீனவ சமுதாயத்தில் பிறந்தார்.

    சிவ பக்தரான அவர். மீன்பிடி தொழில் செய்து வந்தார். அப்போது தான் பிடிக்கும் முதல் மீனை, சிவபெருமானுக்கு அர்ப்பணித்து கடலில் விடுவதை வழக்கமாக கொண்டு வந்தார். சிலநேரங்களில், கடலில் கிடைப்பது ஒரு மீனாக இருந்தாலும் அதையும் சிவபெருமானுக்கே கொடுத்து விட்டு வீட்டிற்கு வெறுங்கையுடன் செல்வார்.

    இவரின் பக்தியை சோதிக்க வேண்டி சிவபெருமான், கடலில் தங்க மீன் ஒன்றை கிடைக்குமாறு செய்தார். அதிபத்தர், தனக்கு கிடைத்த தங்க மீனையும் சிவபெருமானுக்கே கொடுத்து விட்டு சென்றார். அவரின் எதிர்பார்ப்பு இல்லாத பக்தியை உணர்ந்த சிவபெருமான், பார்வதி தேவியுடன் ரிஷப வாகனத்தில் எழுந்தருளி அதிபத்தர் முன்பு காட்சி கொடுத்தார்.

    இதை நினைவுகூரும் வகையில் ஆண்டுதோறும் நாகை புதிய கடற்கரையில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திர நாளில் ஆண்டுதோறும் உற்சவ திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    விழாவின்போது கோவிலில் இருந்து ரிஷப வாகனத்தில் சிவபெருமான், சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி ஊர்வலமாக நாகை புதிய கடற்கரைக்கு செல்வார். பின்னர் அதிபத்தர், சிவபெருமானுக்கு தங்க மீனை கொடுக்கும் உற்சவம் நடை பெறும். வழக்கம்போல் இந்த ஆண்டும் விழா ஆயில்ய நட்சத்திர நாளான நேற்று மாலை நடந்தது.

    இதையொட்டி சிறப்பு அலங்காரத்தில் சிவபெருமான், ரிஷப வாகனத்தில் புறப்பாடாகி, ஊர்வலமாக சிவ வாத்தியங்கள் இசைக்கப்பட ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிவனடியார்களுடன் நாகை புதிய கடற்கரைக்கு சென்றார். பின்னர் நம்பியார் நகர், ஆரியநாட்டுத்தெரு ஆகிய மீனவ கிராமங்களின் சார்பில் அதிபத்த நாயனாருக்கு சீர்வரிசை கொண்டு வரப்பட்டது.

    பின்னர் புதிய கடற்கரையில் சிறப்பு பூஜைகள் நடந்தன. இதைதொடர்ந்து அதிபத்த நாயனாரின் உற்சவ சிலையை மீனவர்கள் பைபர் படகில் ஏற்றி கொண்டு கடலுக்கு சென்றனர். பின்னர் வெள்ளி மற்றும் தங்க மீன் பிடிக்கும் காட்சியும், அதை அதிபத்த நாயனார், சிவபெருமானுக்கு வழங்கும் காட்சியும் நடைபெற்றன. தொடர்ந்து சிவபெருமான் பார்வதி தேவியுடன் அதிபத்த நாயானாருக்கு காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.

    விழாவில் அமைச்சர்கள் ஜெயக்குமார், ஓ.எஸ்.மணியன், பவுன்ராஜ் எம்.எல்.ஏ., நாகை மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார், உதவி கலெக்டர் கமல் கிஷோர் மற்றும் சிக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் தங்க.கதிரவன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    தம் முயற்சியாலும், உழைப்பினாலும் உழவுத்தொழிலின் மூலம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கும், நலிந்தவர்களுக்கும் அன்னமிட்டு மகிழ்ந்தவர் மாறனார் என்னும் சிவனடியார்.
    8-9-2018 அன்று மாற நாயனார் குருபூஜை

    ஒருவர் என்ன தொழில் செய்தாலும், எத்தனை தொழில் செய்தாலும், இவ்வுலகில் வாழ அவருக்கும் உழவுத் தொழிலின் மூலம் கிடைக்கும் உணவு தான் தேவைப்படுகிறது. இப்படி பிற தொழில் செய்பவர்களையும் தாங்குபவர்கள், உழவுத்தொழில் செய்பவர்கள் என்றால் அது மிகையாகாது.

    தம் முயற்சியாலும், உழைப்பினாலும் உழவுத்தொழிலின் மூலம் தாம் பெற்ற பெருஞ்செல்வத்தைக் கொண்டு சிவனடியார்களுக்கும், நலிந்தவர்களுக்கும் அன்னமிட்டு மகிழ்ந்தவர் மாறனார் என்னும் சிவனடியார். சிவகங்கை அருகில் உள்ள இளையான்குடியில் வசித்த மாறனார், தனது மனைவி புனிதவதியுடன் இணைந்து இந்த திருத்தொண்டை செய்து வந்தார்.

    சிவனடியார்களுக்குத் தினமும் அன்னமிட்டு, அவர்களுக்கு பாதபூஜை செய்து சிவபெருமானை வழிபட்டு வந்தனர், இந்த தம்பதியர். இதனால் அவர்களுக்கு உழவுத்தொழிலின் மூலம் மேன்மேலும் செல்வம் பெருகியது. பெருகிய செல்வத்தைக் கொண்டு தம் அடியார் வழிபாட்டையும், அவர்களுக்கு அன்னமிடலையும் தொடர்ந்து செய்து வந்தனர்.

    மாறனாரின் சிவதொண்டை உலகம் அறியச் செய்ய நினைத்த சிவனடியார், மாறனாரின் வீட்டில் வறுமை தாண்டவம் ஆடும்படி செய்யலானார். மாறனாரின் வீட்டில் இருந்த செல்வம் குறைந்து, தம் விளை நிலங்களை விற்றும், கடன் வாங்கியும் சிவதொண்டை செய்யும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.

    ஒருநாள் கடும் மழை. அன்று ஆவணி மாதம் மகம் நட்சத்திர நன்னாள். வறுமையின் கொடுமையால், உண்ண உணவின்றி மாற நாயனாரும், அவரது மனைவி புனிதவதியும் சிவநாமத்தை உச்சரித்தவாறே இருந்தனர். இரவுப் பொழுது வந்தும், அடை மழை நின்றபாடில்லை. மாறனாரும் அவரது மனைவியும் பசியால் மிகவும் துவண்டு தூங்கிப்போயினர்.

    நள்ளிரவில் அந்த அடைமழையில் சிவபெருமான், அடியவர் திருக்கோலம்பூண்டு மாற நாயனாரின் வீட்டு வாசல் கதவை தட்டி நின்றார். தம்பதியர் இருவரும் ‘இந்த நள்ளிரவில் யாராக இருக்கும்?’ என்ற எண்ணத்தில் வாசல் கதவினை திறந்தனர். அங்கு ஒரு சிவனடியார் இருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைந்தனர்.

    மழையில் சொட்டச் சொட்ட நனைந்திருந்த அந்த சிவனடியாரை, வீட்டிற்குள் அழைத்து, தலையை துவட்ட துண்டும், மாற்றுத் துணியும் கொடுத்தனர். பின் அடியவரின் பசியைப் போக்க கணவனும், மனைவியும் ஈசனை துதித்தபடியே இருந்தனர்.

    வேறு என்ன செய்வது?. இப்போது வறுமையின் காரணமாக அவர்கள் சாப்பிடவே எதுவும் இல்லாத நிலையில், வந்திருக்கும் அடியவருக்கு எப்படி உணவிட்டு அகமகிழ முடியும்.

    அப்போது மாறனாரின் மனைவி ஒரு யோசனைச் சொன்னார். ‘நாம் இன்று காலையில் வயலில் விதைத்து வந்த விளை நெல்லினை சேகரித்து எடுத்து வந்து தந்தால், நான் அடியவருக்கு சமைத்து அன்னம் பரிமாறுவேன்’ என்றாள்.

    வந்திருந்த அடியவரை கொஞ்ச நேரம் இருக்கும்படி கூறிவிட்டு, அந்த நள்ளிரவு அடைமழை நேரத்தில் கையில் அரிவாளையும், கூடையையும் எடுத்துக் கொண்டு வயலை நோக்கி விரைந்தார், மாறனார். அதே நேரம் வீட்டின் பின்புறம் இருந்த தண்டு கீரைகளை வேரோடு பிடுங்கி வந்து, அதன் தண்டினை அரிந்து குழம்பாக்கினாள், புனிதவதி. தண்டு கீரையின் இலைகளைக் கொண்டு கூட்டுப்பொறியலும் தயாரானது. இந்த நிலையில் வீட்டில் இருந்த விறகு அனைத்தும் காலியாகிப் போய்விட்டது. இனி அடுப்பெரிக்க சிறு துண்டு விறகு கூட இல்லை என்ற நிலையில், கணவனுக்காக காத்திருந்தாள் புனிதவதி.

    இதற்கிடையில் உணவுக்காக காத்திருந்த அடியவர், அப்படியே கண்ணயர்ந்து போனார்.

    இருளில் தட்டுத் தடுமாறி வயலை அடைந்த மாறனார், காலையில் விதைத்திருந்த விதை நெல் அனைத்தும், மழை நீரில் மிதந்து வரப்பு ஓரமாக ஒதுங்கியிருப்பதைக் கண்டார். அதனை அப்படியே அள்ளி எடுத்து கூடையில் போட்டுக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார். கணவனைக் கண்டதும், ‘வீட்டில் விறகு இல்லை’ என்பதைச் சொன்னார் புனிதவதி.

    உடனே மாறனார், வீட்டின் கூரையில் வேயப்பட்டிருந்த குச்சிகளையும், கம்புகளையும் பிய்த்துக் கொடுத்தார்.

    இதையடுத்து விதை நெல்லை நன்கு கழுவி, வறுத்து பின்னர் உரலில் இட்டு குத்தி அரிசியாக்கி, பதமாக உலையிலட்டு சோறாக்கினார் புனிதவதி. பின் இருவருமாக சேர்ந்து களைப்பில் உறங்கி விட்ட அடியவரை உணவு கொடுப்பதற்காக எழுப்பினர். அப்போது அடியவர் மறைந்து அங்கு ஜோதிப் பிழம்பு தோன்றியது. அதில் இருந்து ரிஷப வாகனத்தில் ஈசனும், அம்பிகையும் காட்சி அளித்தனர். மாறனாரும், புனிதவதியும் அம்மையப்பனை வணங்கி நின்றனர்.

    அப்போது ஈசன், ‘அன்பனே! அடியவர்களை உபசரித்து பசியாற்றும் உன் சிறப்பினை உலகம் அறியச் செய்யவே உனக்கு வறுமை நிலையைத் தந்தோம். அந்த வறுமையிலும் நீயும் உன் மனைவியும் செய்த தொண்டினைக் கண்டு உள்ளம் பூரித்தோம். இனி குபேரனின் சங்கநிதியும், பதுமநிதியும் உங்கள் அருகில் நின்று உங்களுக்கு சேவகம் செய்யும். நீங்கள் இருவரும் இன்னும் பலகாலம் தொண்டு செய்து என்னை வந்து அடைவீர்கள்’ என்று கூறி மறைந்தார்.

    மாறனார் அவதாரம் செய்த தலமும், முக்தியடைந்த தலமும் இளையான்குடி திருத்தலமே. இளையான்குடியில் அருளாட்சி செய்யும் ஈசனின் திருநாமம் ‘ராஜேந்திர சோழீஸ்வரர்’ என்பதாகும். அன்னையின் திருப்பெயர் ஞானாம்பாள். இத்திருத்தலத்தில் ஆண்டுதோறும் ஆவணி மாதம் மகம் நட்சத்திர நாளில் மிகச்சிறப்பாக மாற நாயனார் குருபூஜை நடைபெறுகிறது. மாற நாயனாரின் விவசாய விளைநிலமும் இங்கு ஆலயம் அருகிலேயே உள்ளது. இங்கு ஆவணி மகம் அன்று இத்தல ஈசனுக்கு தண்டுக்கீரை நைவேத்தியமாக படைத்து வழிபடுகிறார்கள். திங்கட்கிழமைகளில் அல்லது மகம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து, இத்தல மண்ணெடுத்து ஈசன், அம்பாள், பைரவர், மாற நாயனார் சன்னிதியில் வைத்து வழிபட்டு, அதனை வயல்களில்,தோட்டங்களில் தூவினால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    சிவகங்கையில் இருந்து 25 கிலோமீட்டர் தூரத்திலும், பரமக்குடியில் இருந்து 8 கிலோமீட்டர் தூரத்திலும் இளையான்குடி அமைந்துள்ளது. 
    திருக்கடவூர் திருத்தலத்தில் அமிர்தகடேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பல அடியவர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் தான் கலயனார்.
    திருக்கடவூர் திருத்தலத்தில் அமிர்தகடேசுவரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பல அடியவர்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களில் ஒருவர் தான் கலயனார். திருக்கோவிலுக்குக் குங்கிலியத் தூபமிடும் திருத்தொண்டினை இடைவிடாது செய்து வந்தார். இதனால் இவர் ‘குங்கிலியக் கலயனார்’ என்று பெயர் பெற்றார்.

    இறைவனுக்கு குங்கிலியம் இடும் பணிக்காக தன் சொத்துகள் அனைத்தையும் இழந்தார். இதனால் அவரது குடும்பம் வறுமையின் பிடியில் தள்ளப்பட்டது. இருப்பினும் மனம் தளராது இறைவனுக்கு குங்கிலியம் இடும் பணியைச் செய்து வந்தார். நிலங்களை விற்றார், பசுக்களையும், கன்றுகளையும் விற்றார். ஒரு கட்டத்தில் குழந்தைகளுக்கு உணவுக்கு கூட வழியில்லாத நிலை ஏற்பட்டது. குழந்தைகள் பசியில் துடிப்பதை காண சகிக்காத குங்கிலிய கலயனாரின் மனைவி, தன்னுடைய திருமாங்கல்யத்தை கழற்றிக் கொடுத்து அதை விற்று பணம் வாங்கி வரும்படி கூறி அனுப்பினார்.

    கலயனார் திருமாங்கல்யத்தை விற்பதற்காக சென்று கொண்டிருந்தார். அவரது சிந்தனை எல்லாம் மறுநாள் கோவிலுக்குக் குங்கிலியம் வாங்க என்ன செய்வது என்பதாக இருந்தது. அப்போது எதிரில் வணிகன் ஒருவன் குங்கிலியப் பொதியுடன் வந்து கொண்டிருந்தான். அவனைக் கண்டதும் பெருமகிழ்ச்சி கொண்ட நாயனார், தன் பிள்ளைகளையும், மனைவியையும் மறந்து, திருமாங்கல்யத்தைக் கொடுத்து விட்டு, குங்கிலியப் பொதியை அப்படியே வாங்கிக் கொண்டார். அதோடு கோவிலுக்கு விரைந்தார். இறைவனுக்கு குங்கிலிய தூபம் காட்டியபடி ஆலயத்திலேயே தங்கிவிட்டார்.

    கணவர் வருவார் என்று வழிமேல் விழிவைத்து காத்திருந்த குங்கிலியக் கலயனாரின் மனைவி பரிதவித்துப் போனாள். வீட்டின் வாசலிலேயே படுத்து உறங்கிப்போனாள். அதே நேரத்தில் ஆலயத்திலும் நாயனார் துயில் கொண்டிருந்தார். அப்போது கணவன்- மனைவி இருவர் கனவிலும் தோன்றிய இறைவன், இல்லத்தில் பொன், பொருள் குவிந்திருப்பதை உணர்த்தினார்.

    திடுக்கிட்டு விழித்த நாயனாரின் மனைவி, தன் வீட்டில் குவிந்து கிடக்கும், பொன், பொருள், நெல்மணிகளைக் கண்டு மகிழ்ந்தாள். குழந்தைகளின் பசி போக்க உணவு சமைக்கத் தொடங்கினாள். அதே வேளையில் குங்கிலியக் கலயனாரும் இறைவனின் கருணையை எண்ணி கண்ணீர் சுரந்தார்.

    அப்போது இறைவன் அசரீரியாக, ‘உன்னுடைய இல்லத்திற்குச் சென்று பாலுடன் கலந்த தேன் சுவை உணவை உண்டு, பசி தீர்ந்து மகிழ்வாயாக’ என்றார். குங்கிலியக் கலயனார் மகிழ்ச்சி பொங்க வீட்டுக்கு ஓடோடி வந்தார். மனைவி மக்களை வாரி அணைத்து மகிழ்ந்தார். பின் அனைவரும் ஈசனை வழிபட்டனர்.

    குங்கிலியக் கலயனாரது அன்பின் வலிமையையும், பெருமையும் உலகிற்கு உணர்த்த வேண்டும் என்று ஈசன் விரும்பினார். அந்த பெருமையை திருப்பனந்தாள் திருத்தலத்தில் நிறைவேற்ற இறைவன் சித்தம் கொண்டார்.

    திருப்பனந்தாள் ஆலயத்தில் உள்ள இறைவனுக்கு, தாடகை என்ற பெண் தினமும் மலர்மாலை அணிவித்து வழிபட்டு வந்தாள். அன்று அப்படித்தான், இறை வழிபாடு முடிந்த பிறகு மாலையை அணிவிக்க முற்பட்ட சமயத்தில், அந்தப் பெண்ணின் மேலாடை விலகியது. இரு கையாலும் ஆடையை பிடித்திருந்த தாடகையால், இறைவனுக்கு மாலையை அணிவிக்க முடியவில்லை. அப்போது ஆலயத்தில் இருந்த சிவலிங்கம் சற்றே சாய்ந்து கொடுத்தது. இதையடுத்து அந்தப் பெண் இறைவனுக்கு மாலையை சமர்ப்பித்தாள். ஆனால் சாய்ந்த லிங்கம், மறுபடி நேராகவில்லை.

    இந்த நிலையில் திருப்பனந்தாள் ஆலயத்தில் சோழ மன்னன் திருப்பணி செய்தான். சாய்ந்த லிங்கத் திருமேனியை நிமிர்த்த முயற்சித்தான். யானைகளைக் கொண்டு சிவலிங்கத்தின் மீது கயிறு கட்டி இழுக்கச் செய்தான். எதுவும் பலன் கொடுக்கவில்லை. மன்னனின் மனம் வாடியது.

    ஊர் முழுவதும் பரவிய இந்தச் செய்தி, குங்கிலியக் கலயனாரின் காதுகளுக்கும் எட்டியது. அவர் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு, பஞ்சாட்சர மந்திரம் சொல்லி, இறைவனின் கருவறை முழுவதும் குங்கிலிய தூபம் காட்டினார். பின்னர் ஒரு கயிற்றை எடுத்து, பாசத்தோடு அதை லிங்கத்திருமேனியில் பிணைத்து, மறு பக்கத்தை தமது கழுத்தில் கட்டிக் கொண்டு பலமாக இழுத்தார். கயிறு இறுகி உயிர்போகும் என்பது பற்றிக்கூட கலயனார் கவலைப்படவில்லை.

    என்ன ஆச்சரியம்.. லிங்கத் திருமேனி கொஞ்சம் கொஞ்சமாக நிமிர்ந்தது. குங்கிலிய கலயனாரின் பக்தியையும், அன்பின் திறனையும் கண்டு மன்னனும் மக்களும் மகிழ்ந்தனர். சோழ மன்னன் கலயனார் பாதங்களில் வீழ்ந்து வணங்கினான். அரசன் ஆலயத்திற்குத் திருப்பணிகளும் திருவிழாக்களும் நடத்தினான். கலயனாருக்கு மானியங்கள் கொடுத்து கவுரவப்படுத்தினான். 
    களந்தை என்னும் தலத்தில் கூற்றுவ நாயனார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் பகைவர்களுக்கு எமன் போன்றவர் என்பதால், கூற்றுவனார் என்ற பெயர் பெற்றார்.
    8-8-2018 கூற்றுவநாயனார் குரு பூஜை

    களந்தை என்னும் தலத்தில் கூற்றுவ நாயனார் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் பகைவர்களுக்கு எமன் போன்றவர் என்பதால், கூற்றுவனார் என்ற பெயர் பெற்றார். இவர் பெரிய வீராதிவீரராகவும், அதே சமயம் அடியார்கள் அன்பில் இணையற்றவராகவும் திகழ்ந்தார். ஈசனின் அருள்பெற்றால், இறையுணர்விலும் வீரத்திலும் சிறந்து விளங்கலாம் என்பதற்கு கூற்றுவ நாயனார் எடுத்துக்காட்டாக விளங்கினர்.

    சிறந்த தோள் வலிமையும், வாள் வலிமையும் கொண்டிருந்த கூற்றுவனார், போர்க்களத்தில் பகைவர்களை வெற்றி கொண்டு சிறந்த வீரனாக விளங்கினார். எப்போதும் நாவில் சிவபெருமானின் பஞ்சாட்சரத்தை ஓதிக்கொண்டிருக்கும் அவர், அடியார்களை கண்டால் அன்பொழுக பாதம் பணிந்து வேண்டிய பணிவிடைகளை செய்வார். இறைவனின் திருவருள் அவருக்கு இருந்ததால், அரசர்களும் அவருக்கு அஞ்சி ஒதுங்கினர்.

    தேர், யானை, குதிரை, காலாட்படை என நால்வகை படைகளையும் கொண்டு சிறப்புற்றிருந்தார். சென்ற இடமெல்லாம் வெற்றி வாகை சூடி, நிறைய பொன்னும், பொருளும் சேர்த்தார். அதைக் கொண்டு சிவனடியார்களுக்கு தொண்டுகள் புரிந்து வந்தார். அரசர்கள் பலருடன் போரிட்டு, அந்த நாட்டை தனக்குரியதாக்கிக் கொண்டவர், மணிமுடி ஒன்று மட்டும் நீங்கலாக அரசருக்கு உரிய மற்ற அனைத்து சின்னங்களையும் கொண்டவராக திகழ்ந்தார்.

    இந்த நிலையில் கூற்றுவ நாயனார், தில்லையம்பதி என்று அழைக்கப்படும் சிதம்பரத்தில் நடராஜப் பெருமானை வழிபடும் அந்தணர்களை பணிந்து, தனக்கு முடிசூட்டுமாறு வேண்டினார். ஏனெனில் அந்த காலத்தில் சோழ மன்னர்களுக்கு சூட்டக்கூடிய மணி மகுடம், தில்லைவாழ் அந்தணர்களின் வசம் இருந்தது. உரிய காலத்தில் அந்த மணி மகுடத்தை அவர்கள் மன்னனுக்கு சூட்டி அவனை அரசனாக்குவார்கள். அந்த மணிமகுடத்தை சோழ மன்னர்களுக்கு மட்டுமே அவர்கள் சூட்டுவர் என்பதும் மரபாக இருந்து வந்தது.

    அதற்கு அந்த அந்தணர்கள், ‘ஐயா! நாங்கள் சோழர்களது பரம்பரையில் வரும் மன்னர்களுக்கே அன்றி வேறு ஒருவருக்கும் திருமுடி சூட்டமாட்டோம்’ என்று கூறி மறுத்து விட்டனர். இதனால் மிகுந்த மனவேதனை கொண்டார் கூற்றுவ நாயனார். தான் அன்றாடம் தொழும் அம்பலவாணரை நினைத்து உருகினார். மாறாக, தன் தோள் வலிமையையும், வாள் வலிமையையும் அவர்களிடம் காட்டி, தனக்கு மணிமகுடம் சூட்டும்படி கூறவில்லை. இதில் இருந்து அவர் அடியார்களுக்கு அளித்த மதிப்பை நாம் கண்டுணர முடிகிறது.

    ‘ஐயனே! அருட்கடலே! எனக்கு எப்போதும் அரசர்களுக்கு சூட்டப்படும் மணி முடி இனி தேவையில்லை. இறைவா! இந்த எளியேனுக்கு முடியாக, உமது திருவடியையே சூட்டி அருள் செய்ய வேண்டும்’ என்று கூறியபடி துயில் கொள்ளத் தொடங்கினார்.

    பக்தர்கள் வேண்டியதை அளிக்கும் கருணைக்கடலான சிவபெருமான், கூற்றுவ நாயனாரின் கனவில் தோன்றி அவருடைய தலையில் தனது திருவடியைச் சூட்டி அருள்புரிந்தார்.

    கண் விழித்து எழுந்த நாயனார் அடைந்த மகிழ்ச்சி எல்லையே இல்லை. பேரானந்தம் கொண்டார். இறைவனது திருவடியையே முடியாகக் கொண்டு உலகம் எல்லாம் ஒரு குடையின் கீழ் அரசாண்டு வந்தார். மேலும் தனக்கு அரசையும், அதை ஆளுவதற்குரிய செல்வத்தையும் வழங்கிய இறைவனுக்கு நன்றிக்கடனாக, பூவுலகில் இறைவன் எழுந்தருளி இருக்கும் திருக்கோவில்கள் அனைத்துக்கும் தனித்தனியே நித்திய வழிபாடுகள் இனிதே நடைபெற பெரும் நிலங்களை அமைத்துக் கொடுத்து அகமகிழ்ந்தார்.

    இது போன்ற இனிய திருத்தொண்டுகள் பல புரிந்து உலகை கணையுடன் அரசு புரிந்து முடிவில் அரனார் அடிமலர் சேர்ந்து இன்புற்றார். 
    ×