search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திண்டிவனம் வாலிபர் கொலை"

    திண்டிவனம் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட வழக்கில், பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்து மிரட்டியதால் அடித்து கொன்றதாக கைதான 3 பேர் வாக்குமூலம் அளித்துள்ளனர்.
    திண்டிவனம்:

    விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ளது புலியனூர். அங்குள்ள வயல் பகுதியில் சுமார் 30 மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார். அவரது உடலை வெள்ளிமேடுபேட்டை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊர் என்ற விவரம் தெரியாமல் இருந்தது.

    இதையொட்டி திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு திருமால் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் விசாரணை நடத்திய போது பிணமாக கிடந்தவர் காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே உள்ள மேல்கண்டிகையை சேர்ந்த பாலாஜி என்ற ஜெயபாலன்(வயது 30) என்பது தெரியவந்தது.

    தனிப்படையினர் தீவிர விசாரணை மேற்கொண்டபோது திண்டிவனம் புலியனூர் கிராம நிர்வாக அதிகாரி முன்னிலையில் அதே பகுதியை சேர்ந்த ராஜூ(39). இவரது அண்ணன் சுரேஷ்(41), நந்தன்(55) ஆகியோர் சரண்அடைந்தனர்.

    பின்னர் 3 பேரும் வெள்ளிமேடுபேட்டை போலீஸ்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். அப்போது அவர்கள் பாலாஜியை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பதாவது:-

    எங்களது உறவினரான கனகேஷ்(34) என்பவர் திருவண்ணாமலை மாவட்டம் போளூரில் டிராக்டர் ஷோரும் நடத்தி வருகிறார். அவர் அங்கு ஒரு வாடகை வீடு எடுத்து தங்கியிருந்தார். அவருடன் ஷோரூமில் வேலைபார்க்கும் தாமோதரன் மற்றும் பாலாஜி ஆகியோர் தங்கியிருந்தனர்.

    கொலைசெய்யப்பட்ட பாலாஜி

    பாலாஜி மெக்கானிக் வேலை பார்த்து வந்தார். அவர் அறையில் தங்கியிருக்கும்போது பக்கத்து வீடுகளில் பெண்கள் குளிப்பதை தனது செல்போனில் படம் எடுத்துள்ளார். பின்பு அதை அந்த பெண்களிடம் காட்டி மிரட்டி சில்மி‌ஷத்தில் ஈடுபட்டுள்ளார்.

    இதனால் பாதிக்கப்பட்ட அந்த பெண்கள் கனகேஷிடம் புகார் செய்தனர். இதைத் தொடர்ந்து அவர் மெக்கானிக் பாலாஜியை கண்டித்தார். ஆனாலும் அவர் பெண்களிடம் சில்மி‌ஷம் செய்வதை நிறுத்தவில்லை. இதுபற்றி கனகேஷ் எங்களிடம் கூறினார்.

    அப்போது பாலாஜியை கொலை செய்ய முடிவு செய்தோம். பின்னர் நாங்கள் கூறிய யோசனைப்படி கனகேஷ் தனது காரில் பாலாஜியை புலியனூருக்கு அழைத்து வந்தார்.

    காரில் இருந்து இறங்கியதும் அவரை ஒரு வயல்பகுதிக்கு அழைத்து சென்றோம். அப்போது அவரை சரமாரியாக அடித்து உதைத்தோம். இதில் பாலாஜி நிலைதடுமாறி கீழே விழுந்தார். அப்போது சகதிக்குள் அவரது முகத்தை அழுத்தி கொன்றோம். பிறகு நாங்கள் அங்கிருந்து சென்றுவிட்டோம்.

    இந்தகொலை தொடர்பாக போலீசார் எங்களை தேடியதை அறிந்ததும் கிராம அதிகாரி முன்னிலையில் சரண் அடைந்துவிட்டோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை திண்டிவனம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் அவர்களை காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து கைதான ராஜூ, சுரேஷ், நந்தன் ஆகியோர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ×