search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுனந்தா புஷ்கர் மரண வழக்கு"

    மனைவி சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி சசி தரூருக்கு டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. #ShashiTharoor #SunandaPushkar
    புதுடெல்லி :

    முன்னாள் மத்திய மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

    இவ்வழக்கை விசாரித்த டெல்லி போலீசார் சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனும் அனுப்பப்பட்டது. எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என்பதால் முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார்.

    அவரது மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி கடந்த 5-ம் தேதி தீர்ப்பு வழங்கினார். அப்போது சசி தரூரை கைது செய்வதற்கு தடைவிதித்து முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, ஒரு லட்சம் ரூபாய் பிணைப் பத்திரம் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.

    மேலும், நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் சசி தரூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது, சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில், சசி தரூர் டெல்லி நீதிமன்றத்தில் 7-ம் தேதி (இன்று) ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதன்படி சசிதரூர் இன்று நீதிமன்றத்தில் ஆஜரானார்.

    அப்போது, ‘சுனந்தா புஷ்கர் மரண வழக்கு விசாரணை தொடர்பாக போலீசார் அழைத்த போதெல்லாம் சசி தரூர், விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார். எனவே, அவர் சாட்சிகளை கலைக்க முயற்சிப்பார் எனும் அரசு தரப்பு வழக்கறிஞரின் வாதம் ஏற்புடையதல்ல. அதனால், இந்த வழக்கில் இருந்து சசி தரூருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது’ என நீதிபதி உத்தரவிட்டார்.

    மேலும், இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை இம்மாதம் 26-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். #ShashiTharoor #SunandaPushkar
    ×