search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசி தரூருக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி  கோர்ட்
    X

    சுனந்தா புஷ்கர் மரண வழக்கில் சசி தரூருக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி கோர்ட்

    சுனந்தா புஷ்கர் மரணம் தொடர்பான வழக்கில் அவரது கணவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான சசி தரூருக்கு டெல்லி நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கி உள்ளது. #ShashiTharoor #SunandaPushkarDeathCase
    புதுடெல்லி:

    மத்திய முன்னாள் மந்திரியும், காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் 17-ம் தேதி தெற்கு டெல்லியில் உள்ள லீலா பேலஸ் என்ற 5 நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்தபோது மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக பெரும் சர்ச்சைகள் எழுந்தன.

    இவ்வழக்கை விசாரித்த டெல்லி போலீசார் சசி தரூர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர். விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மனும் அனுப்பப்பட்டது.

    எந்த நேரத்திலும் கைதுசெய்யப்படலாம் என்பதால் முன் ஜாமீன் கோரி டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் சசி தரூர் மனு தாக்கல் செய்தார். அவரது மனு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, தீர்ப்பை ஒத்திவைத்தார். அதன்படி இன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது சசி தரூருக்கு முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்ட நீதிபதி, ஒரு லட்சம் ரூபாய் பிணைப் பத்திரம் செலுத்தி முன்ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என கூறினார்.



    மேலும், நீதிமன்றத்தின் முன் அனுமதி பெறாமல் சசி தரூர் வெளிநாடுகளுக்கு செல்லக் கூடாது, சாட்சிகளைக் கலைக்கக் கூடாது என்றும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

    சசி தரூருக்கு முன்ஜாமீன் அளித்தால் அவர் நாட்டை விட்டு தப்பி செல்லக் கூடும் என்பதால் அவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என வழக்கை கையாளும் சிறப்பு விசாரணை குழு கடும் எதிப்பு தெரிவித்தது. ஆனால், இந்த வாதத்தை நீதிபதி ஏற்க மறுத்துவிட்டார்.  #ShashiTharoor #SunandaPushkarDeathCase
    Next Story
    ×