search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சுகபிரசவம்"

    உரிய அனுமதி பெறாமல் வீட்டிலேயே சுகபிரசவம் பார்க்க ஆலோசனை வழங்கும் தனியார் அமைப்பை முடக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.
    கோவை:

    கோவை அருகே உள்ள கோவைப்புதூர் லட்சுமி நகரில் செயல்பட்டு வரும் அனடாமிக் தெரபி பவுண்டேசன் என்ற ‘தனியார் அமைப்பு சார்பில் மருந்து, மாத்திரைகள், தடுப்பூசிகள், ஸ்கேனிங், ரத்த பரிசோதனை என எதுவுமே எடுக்காமல் டாக்டரிடம் செல்லாமல் வீட்டிலேயே குழந்தை பெற்றுக் கொள்வது தொடர்பாக 1 நாள் எளிய வழிகாட்டி பயிற்சி மற்றும் ஆலோசனை வழங்கப்படும் என்று மாநகர பகுதிகளில் அறிவிப்பு செய்யப்பட்டு இருந்தது.

    இது குறித்து சுகாதாரதுறை துணை இயக்குனர் பானுமதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாநகர போலீஸ் கமி‌ஷனர் பெரியய்யா விசாரணை நடத்த உத்தரவிட்டார். இதனையடுத்து குனியமுத்தூர் போலீசார் அந்த நிறுவனத்தின் பயிற்சியாளரும், மருத்துவ ஆலோசகருமான ஹீலர் பாஸ்கர் (வயது 42), மேலாளர் சீனிவாசன்(32) ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் சுகப்பிரசவ முறை குறித்து ஆலோசனை வழங்குவதாக கூறி பயிற்சிக்கு வருபவர்களிடம் ரூ.5 ஆயிரம் வீதம் நன்கொடை வசூலித்தது தெரிய வந்தது. மேலும் கடந்த 9 ஆண்டுகளுக்கு மேலாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயிற்சி கொடுத்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து ஹீலர் பாஸ்கர், சீனிவாசன் ஆகியோர் மீது மோசடி உள்ளிட்ட 2 பிரிவுகளில் வழக்குபதிவு செய்து கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் ஹீலர் பாஸ்கர், சீனிவாசன் ஆகியோரை கோவை ஜே.எம்.7 மாஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி பாண்டி 2 பேரையும் வருகிற 16-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் குனியமுத்தூர் போலீசார் கோவைபுதூர் லட்சுமி நகரில் செயல்பட்டு வந்த அனடாமி தெரபி பவுண்டேசன் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.

    அப்போது அங்கு இருந்த லட்டர்பேடு, கடிதம், பயிற்சி குறித்த சி.டி., யார்? யாரெல்லாம் இங்கு பயிற்சி பெற்றார்கள் போன்ற முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றினர்.

    மேலும் ஹீலர் பாஸ்கர் அமைப்பு நடத்தவும், கர்ப்பிணி பெண்களுக்கு சுகபிரசவத்துக்கான பயிற்சிகள் அளிக்கவும் உரிய அனுமதி மற்றும் அதற்கான சான்றிதழ் பெறவில்லை. எனவே இந்த அமைப்பை முடக்க சுகாதாரதுறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். #tamilnews
    ×