search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிக்கி தவிப்பு"

    மராட்டியத்தில் நேற்று 4-வது நாளாக கனமழை கொட்டியது. இதன் காரணமாக மும்பை மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். #Mumbai #HeavyRain
    மும்பை:

    மராட்டியத்தில் பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் பெய்து வரும் கனமழை தொடர்ந்து நேற்று 4-வது நாளாக நீடித்தது. மும்பை, தானே, ராய்காட், பால்கர் மாவட்டங்களில் இடைவிடாமல் கொட்டி வரும் மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை புரட்டிப்போட்டு உள்ளது.

    இந்த பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கின்றன. ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது.



    நகர பகுதிகள் மற்றும் கிராமங்களில் பல இடங்களில் குடியிருப்புகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. அந்த பகுதிகளை சேர்ந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டனர். சாலைகள், தெருக்களிலும் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். மாநில தலைநகர் மும்பை வெள்ளத்தில் மிதக்கிறது.

    குடிசை பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது. மும்பை தாராவி நாயக் நகரில் உள்ள 200 வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் தூங்க முடியாமல் நின்றவாரே முழு இரவையும் கழித்தனர். மேலும் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் கடும் அவதி அடைந்தனர்.

    மும்பையின் தாழ்வான பகுதிகளான தாதர் இந்துமாதா, கிங்சர்க்கிள், மலாடு, அந்தேரி மிலன் சப்வே உள்ளிட்ட இடங்களில் முழங்கால் அளவுக்கு மேல் வெள்ளம் தேங்கியது. பல்வேறு இடங்களில் சாலைகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. இதனால் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.

    ரெயில் நிலையங்களையும் வெள்ளம் சூழ்ந்தது. மாட்டுங்கா, சயான், கல்வா, தானே, நாலச்சோப்ரா, டோம்பிவிலி ரெயில் நிலையங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் ரெயில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.

    பயணிகள் மிகுந்த அவதி அடைந்தனர். சில நீண்ட தூர ரெயில்கள் புறப்படும் நேரம் மாற்றி அமைக்கப்பட்டது.

    வசாய் மிட்டாநகரை வெள்ளம் சூழ்ந்ததால் அந்த பகுதியில் வசித்து வரும் 300 பேர் வெளியே வர முடியாமல் தவித்தனர். அவர்களை மீட்க பேரிடர் மீட்பு குழுவினர் படகில் விரைந்தனர்.

    மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை வெள்ளத்தால் துண்டிக்கப்பட்டது. அந்த வழியாக வந்த பல வாகனங்கள் வெள்ளத்தில் சிக்கின.

    பலத்த மழை காரணமாக மும்பையில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

    மும்பையில் இன்னும் 2 நாட்களுக்கு கனமழை நீடிக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  #Mumbai #HeavyRain  #tamilnews
    ×