search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனிப்பிரதோஷம்"

    • மாலை சனி பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும்.
    • இரவில் பக்தர்களுக்கு தங்குவதற்கு அனுமதி இல்லாததால் இன்று செல்பவர்கள் சாமி தரிசனம் முடிந்ததும் கீழே இறங்கி வந்து விடுவார்கள்.

    வத்திராயிருப்பு:

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவில் உள்ளது. அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மாதம் 8 நாட்கள் பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இன்று முதல் வருகிற 9-ந்தேதி வரை நான்கு நாட்களுக்கு பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதில் 8-ந்தேதி வரை காலை 6 மணி முதல் 12 மணி வரையிலும், 9-ந்தேதி காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, சிவகங்கை, விருதுநகர், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் நள்ளிரவு முதல் பல்வேறு வாகனங்கள் மூலம் தாணிப்பாறைக்கு வந்தனர்.

    அங்கு வனத்துறை கேட் பகுதியில் காத்திருந்தனர். இன்று பங்குனி மாத சனிப்பிரதோஷம் என்பதால் திரளான பக்தர்கள் குவிந்தனர். காலை 6.30 மணிக்கு வனத்துறை கேட் திறந்து விடப்பட்டு பக்தர்கள் உடைமைகளை வனத்துறையினர் தீவிர சோதனை செய்தனர். அப்போது பாலித்தீன் கேரி பேக் போன்றவற்றை பறிமுதல் செய்ததோடு போதை வஸ்து பொருட்கள், மது, எளிதில் தீப்பற்ற கூடிய பொருட்கள் கொண்டு செல்கிறார்களா என தீவிர சோதனை செய்து அனுப்பினர்.

    வெயிலையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் மலையேறி சென்றனர். மாலை சனி பிரதோஷத்தை ஒட்டி சுந்தர மகாலிங்கம் சுவாமிக்கு பால், பழம், பன்னீர், இளநீர் உள்ளிட்ட 18 வகையான அபிஷேகங்கள் நடைபெறும். இரவில் பக்தர்களுக்கு தங்குவதற்கு அனுமதி இல்லாததால் இன்று செல்பவர்கள் சாமி தரிசனம் முடிந்ததும் கீழே இறங்கி வந்து விடுவார்கள்.

    மொட்டை உள்ளிட்ட நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்தி வழிபட்டனர். நாளை மறுநாள் பங்குனி மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுந்தர மகாலிங்கம் சாமி பரம்பரை அறங்காவலர் ராஜா என்ற பெரியசாமி, செயல் அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் செய்து இருந்தனர். சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு உள்ளிட்ட ஊர்களில் இருந்து தாணிப்பாறைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.

    சதுரகிரி கோவிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக மருத்துவக் குழுவினர் இல்லாத நிலை இருந்து வருகிறது. ஏற்கனவே கடந்த அமாவாசையின்போது சதுரகிரியிலும், வெள்ளிங்கிரி மலையிலும் பக்தர்கள் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே மருத்துவக்குழுவை நியமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

    • ஏட்டின் செம்மையையும் அறியச் சுழித்துப் பார்க்கும் வழக்கமே பிள்ளையார் சுழியாகி விட்டது என்பது ஒரு கருத்து.
    • அகர உகர வடிவாக உள்ள பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கை என்பது ஒரு கருத்து.

    வேறுபட்ட பிள்ளையார் சுழிகள்

    "உ" எனும் உகரம் பிள்ளையார் சுழியாய் எழுதப்படுகிறது. நாழியின் குறியீடாகவும் உள்ளது. இந்தப் பிள்ளையார் சுழி குறித்து பல்வேறு கருத்துக்கள் வழங்குகின்றன. முன்னோர்கள் உ என்று முதலில் எழுதி அடுத்து சிவமயம் என்று எழுதுவார்கள். தற்போது இந்த வழக்கம் மறைந்து விட்டது. ஆனால் இன்றும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் சாதியினர் உ. சிவமயம் என்று எழுதுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். வேறு சிலர் "உ" என்று பிள்ளையார் சுழியை மட்டும் போட்டு எழுதத் தொடங்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளனர். இந்த "உ" குறியீட்டை சிலர் நாளை (தேதி) க் குறிக்கவும் பயன்படுத்துகின்றனர். இரண்டு என்கிற எண்ணுக்கும் இதே எழுத்து, குறியீடாகவும் அமைந்துள்ளது.

    கருத்து ஒன்று

    தமிழ் எழுத்துக்கள் இயற்கை வடிவமான வட்ட வடிவின என்றும், அவ்வட்டத்தை விரைந்தெழுதும் போது அதன் முடிவு நீளக்கோட்டில் முடியுமென்றும் எழுதத் தொடங்குவான். முதலில் வட்டமிட்டுப் பின் அதைக் கோடாக இழுத்ததால் பிள்ளையார் சுழி ஏற்பட்டதென்பது ஒரு கருத்து.

    கருத்து இரண்டு

    ஏட்டில் எழுதும் போது எழுதுகோலின் சீர்மையையும், ஏட்டின் செம்மையையும் அறியச் சுழித்துப் பார்க்கும் வழக்கமே பிள்ளையார் சுழியாகி விட்டது என்பது ஒரு கருத்து.

    கருத்து மூன்று

    பிள்ளையாரின் முகத் தோற்றம் "ஓ" என்றும் "ஓம்" என்றும் பிரணவத்தைச் சுருக்கமாக "உ" என முன்னெழுதி ஏனையவற்றைப் பின் எழுதுவது சுவடி எழுதுவோரின் மரபாக இருந்துள்ளது. ஒலி வடிவிலும், வரி வடிவிலும் ஐந்தன் கூட்டமாகிய பிரணவத்தின் அகரம் சிவம்; உகரம் சக்தி; மகரம் மலம்; நாதம் மாயை; விந்து உயிர் ஆகும். இவற்றுள் அகர உகர வடிவாக உள்ள பிள்ளையார் சுழி சிவசக்தியின் சேர்க்கை என்பது ஒரு கருத்து.

    கருத்து நான்கு

    திருமூலர் அகரம் உயிரென்றும், உகாரம் இறையென்றும், மகாரம் மலமென்றும் கூறுவதால் அகரமாகிய உயிர் உகாரமாகிய இறைவனோடு இயைந்து ஒன்றியிருக்கும் நிலையை விளக்குவதே பிள்ளையார் சுழியாயிற்று என்கிறது ஒரு கருத்து.

    கருத்து ஐந்து

    திருமூலரே பின்னும் பிரணவத்தின் ஐந்து கூறுகளில் அகரத்திற்குப் பிரமனும், உகரத்திற்கு திருமாலும், மகரத்திற்கு உருத்திரனும், விந்துவிற்கு மகேசனும், நாதத்திற்கு சதாசிவனும் ஆதி தெய்வங்களாவர். எழுதத் தொடங்குவது என்பது இலக்கியப் படைப்பைக் குறிக்கும். அதற்கு முன் பிரமனை ஆதி தெய்வமாகக் கொண்ட அகரத்தின் கூறாகிய ஒற்றைக் கொம்புக் குறியையும், எழுதப் பெறும் இலக்கியம் நின்று நிலை பெற வேண்டுமென்று திருமாலை ஆதி தெய்வமாகக் கொண்ட உகரத்தின் கூறாகிய கோட்டுக்குறியையும் இணைத்து "உ" எனப் பிள்ளையார் சுழியாக எழுதினர் என்றும், அச்சுழி மூல மனுவாகிய பிரணவத்தின் சிதைந்த வடிவு என்றும் குறிப்பிடுகின்றனர்.

    கருத்து ஆறு

    ஓலையை எழுத எடுத்ததும் அதன் பதத்தைப் பார்க்க ஒரு சுழியையும் கோட்டையும் இழுத்துப் பார்ப்பதுண்டு. இந்த முதல் சுழிதான் காலப்போக்கில் பிள்ளையார் சுழியென்று ஆகியிருக்க வேண்டும் என்று தோன்றுகிறது என்றாலும் இது நம் அறிவுப்பசிக்கு முழு உணவும் அளிக்கவில்லை. தமிழ் உயிர் எழுத்துக்கள் அனைத்தும் சுழியையே அடிப்படையாகக் கொண்டவை. எனவே தமிழ் எழுத்துக்களை எழுத வேண்டுமாயின் சுழிக்கக் கற்றுக் கொள் என்று முன்னோர்கள் இந்த முறையை அமைத்ததாக கி.ஆ.பெ.விசுவநாதம் குறிக்கின்றார்.

    கருத்து ஏழு

    கடிதங்களில் க்ஷ என்று எழுதும் பழக்கம் பிள்ளையார் சுழி என்று இன்று அழைக்கப்பட்டாலும் முற்காலத்தில் "தலைக்கீற்று" என்றும், "மேல்பதி" என்றும் அழைக்கப்பட்டதென்றும் இதன் உண்மை வடிவம் க்ஷ் என்று எழுதும் போது ஷ என்றாகியதென்றும் சங்கேத மொழியில் மேற்படி என்று பொருள் கொடுப்பதாகவும், கடிதத் தலைப்பில் பதிக்கப் பெற்ற "மேல்பதி" மருவி "மேற்படி" என்பதைக் குறிக்கும். சங்கேதமானது என்றோ, இன்ன சங்கேதத்தில் எழுதப்பட்டுள்ளது என்று அறிந்த பின் மேலே படிக்க முயலவும் என்றோ பொருள் கொள்ள வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.

    செயலின் தொடக்கம்

    ஓலைச்சுவடிகளின் தொடக்கத்தில் "அறிவோம் நன்றாகக் குரு வாழ்க குருவே" என்று எழுதப்பட்ட நிலை சமயச் சார்புற்று "அரி ஓம் நன்றாக" என்று எழுதப்பட்ட காலத்தில் ஏட்டின் தொடக்கத்தில் பிள்ளையார் சுழி இடம் பெற்றதோடு மட்டுமின்றிப் பாட்டின் முடிவிலும் பாடல் எண்களை அடுத்தும் இடம் பெற்றுள்ளமை இங்குச் சுட்டத் தகுந்தது. இவ்வாறு, பிள்ளையார் சுழி பாடல் தொடக்கத்தையும், பாடல் முடிவையும், எண் முடிவையும் குறித்து நின்ற குறியீடாகப் பயன்படுத்தப்பட்டமையும் புலனாகிறது.

    பிள்ளையார் வழிபாடு என்பதே தமிழகத்தில் பிற்காலத்தில் ஏற்பட்ட ஒன்று. அதற்கு முன்பிருந்தே ஏட்டில் எழுதும் வழக்கம் இருந்து வந்தமை கண்கூடு, ஏட்டின் சேர்பதம் பார்க்கச் சுழித்து பார்த்த நிலையைச் சமயப் பார்வை மிகுந்த பிற்காலத்தில் "பிள்ளையார் சுழி" யாக்கி விட்டனர் எனபதே பொருந்துவதாகும்.

    பிள்ளையார் சுழியின் பிறப்பு எவ்வாறு இருப்பினும் இன்று அது ஒரு செயலின் தொடக்கத்தைக் குறிப்பதாக மருவி வழங்கி வருகிறது.

    ஆதாரம்

    முனைவர் தமிழப்பன் எழுதிய தமிழ் இலக்கியத்தில் எண்ணும் எழுத்தும் (நூல்) பக்கம் 90 முதல் 94 வரை.

    • விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும்.
    • அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார்.

    விநாயகர் சிலை முன்பு மிகவும் பணிவுடன் உடலை சாய்த்து நின்று முதலில் வலக்கையால் நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக் கொள்ள வேண்டும். வலது கையால் இடப்பக்கத்திலும், இடது கையால் வலப்பக்கத்திலும் மூன்று முறை குட்டி ,காதுகளைப் பிடித்து தோப்புக்கரணம் போட வேண்டும். தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளும் அவ்வாறே நொறுங்க வேண்டுமென அவரிடம் பணிவாகக் கேட்க வேண்டும். அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கித் திரும்ப வேண்டும். விநாயகரை மூன்று முறை வலம் வரவேண்டும். இதற்காக புராணங்கள் என்ன சொல்கின்றன தெரியுமா?

    தலையில் குட்டி தோப்புக்கரணம் போடுவது ஏன்?

    அகத்தியர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதியை காகம் வடிவில் வந்த விநாயகர் கவிழ்த்தார். பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் அகத்தியர் முன்பு வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார். அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை கருதி காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார். அகத்தியர் தன் தவறுக்காக வருந்தி தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகருக்குத் தலையில் குட்டி வழிபடும் வழக்கம் வந்தது.

    கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப் படுத்தி தனக்கு தோப்புக் கரணம் போட வைத்தான். விநாயகர் அவனை அழித்து தேவர்களைப் பாதுகாத்தார். அசுரன் முன்பு போட்ட தோப்புக் கரணத்தை விநாயகர் முன்பு பயபக்தியுடன் தேவர்கள் போட்டனர். அன்று முதல் தோப்புக்கரணம் போட்டு வழிபடும் வழக்கமும் துவங்கியது.

    தேங்காயை சிதறு காயாக உடைப்பது ஏன்?

    மகோற்கடர் என்கிற முனிவராக அவதாரம் செய்த விநாயகர் காசிப முனிவரின் ஆஸ்ரமத்தில் தங்கியிருந்தார். ஒரு யாகத்திற்கு புறப்பட்ட போது ஒரு அசுரன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான். விநாயகர் யாகத்திற்காகக் கொண்டு சென்ற கலசங்களின் மேலிருந்த தேங்காய்களை அவன் மீது வீசி அந்த அசுரனைப் பொடிப் பொடியாக்கினார். எந்த செயலுக்கு கிளம்பினாலும் தடைகள் ஏற்பட்டால் அதை உடைக்க விநாயகரை வணங்கிச் செல்லும் வழக்கமுண்டு. தனக்கு வந்த தடையைத் தேங்காயை வீசி எறிந்ததன் மூலம் தகர்த்தார். அதன் மூலம் விக்னங்களை தகர்த்த விக்னேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. சிதறுகாய் உடைக்கும் வழக்கமும் உருவானது.

    அருகம்புல் மாலை ஏன்?

    அனலாசுரன் என்ற அசுரன் தேவர்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றித் தகித்து விடுவான். இவனை பிரம்மாவாலும், தேவேந்திரனாலும் அடக்க முடியவில்லை. அவர்கள் சிவ, பார்வதியைச் சந்தித்து முறையிட்டனர். சிவனும் விநாயகருக்கு அந்த அரக்கனை அழித்து வரும்படி கட்டளையிட்டார். விநாயகரும் பூத கணங்களுடன் போருக்குச் சென்றார். அங்கு சென்றதும் அனலாசுரன் பூதகணங்களை எரித்துச் சாம்பலாக்கினான். விநாயகர் அனலாசுரனுடன் மோதினார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை. கோபத்தில் அவனை அப்படியே விழுங்கி விட்டார்.

    வயிற்றுக்குள் சென்ற அனலாசுரன் அதை வெப்பமடையச் செய்தான். விநாயகருக்கு அந்த வெப்பத்தைத் தாங்க முடியவில்லை. அவருக்கு குடம் குடமாகக் கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. அதனால் எந்த பயனும் ஏற்படவில்லை. இந்நிலையில் ஒரு முனிவர் அருகம்புல்லைக் கொண்டு வந்து விநாயகரின் தலை மேல் வைத்தார். அவரது எரிச்சல் அடங்கியது. அனலாசுரனும் வயிற்றுக்குள் ஜீரணமாகி விட்டான். அன்று முதல் தன்னை அருகம்புல் கொண்டு அர்ச்சிக்க வேண்டுமென விநாயகர் கட்டளையிட்டார்.

    • விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும்.
    • வேலை இல்லாதவர்களுக்கும் படிப்பைத் தொடங்குபவர்களுக்கும் விநாயகரே முதற்கடவுள்.

    விநாயகர் பெருமான் சனாதன தர்மக் கடவுளாக உலக நாடுகள் அனைத்திற்கும் பரவிய காலத்திலிருந்தே விரத முறைகளும் வழிபாட்டு விதிகளும் பரவி பக்தர்களால் பின்பற்றப்பட்டு வருகின்றன.

    ஒவ்வொரு வருடமும் விநாயகர் சதுர்த்தியை மிகப் பிரபலமாகவும் சிறப்பாகவும் கொண்டாடி வரும் நாம், அவர் குறித்த வெள்ளி விரதம், செவ்வாய் விரதம் சதுர்த்தி விரதம், குமார சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி, தூர்வா கணபதி விரதம், சித்தி விநாயக விரதம், தூர்வாஷ்டமி விரதம், விநாயக நவராத்திரி விரதம் ஆகியவற்றைக் கொண்டாடுவதும் ஏற்றுச் செய்வதும் மிகக் குறைவே.

    விநாயக விரதத்தை அனுஷ்டிப்பதால் மூன்று முக்கிய பலன்களைப் பெற முடியும். தொழில் வியாபாரம் செய்பவர்கள் படிப்படியாக முன்னேற்றத்தைக் காண முடியும். அதில் ஏற்பட்டுள்ள கடன் தொல்லைகளில் இருந்து மீண்டு வர முடியும்.

    வேலை இல்லாதவர்களுக்கும் படிப்பைத் தொடங்குபவர்களுக்கும் விநாயகரே முதற்கடவுள். எனவே இந்த விநாயக விரதத்தால் கல்வி முன்னேற்றமும், நல்ல பணி அமர்வதும் சாத்தியமாகிறது. பிள்ளைகள் கலைகளில் சிறந்து விளங்கிட இந்த விரதத்தைப் பெண்களும் (தாய்) ஆண்களும் (பிள்ளைக்குத் தந்தை) கடைப் பிடிக்க வேண்டும்.

    • விநாயகருக்கு இருக்கும் விரதங்களுள் விநாயக சுக்ரவார விரதம் மிக முக்கியமானதாகும்.
    • வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் இந்த விரதம் இருத்தல் வேண்டும்.

    நல்லவற்றை மட்டும் செய்து, தீய செயல்களை ஒடுக்க வேண்டுமானால், பட்டினி கிடக்க வேண்டும் அல்லது உணவைக் குறைக்க வேண்டும். இதற்காகவே விரதங்கள் ஏற்படுத்தப்பட்டன. அதிலும் விநாயகருக்கு இருக்கும் விரதங்களுள் விநாயக சுக்ரவார விரதம் மிக முக்கியமானதாகும்.

    முதன் முதலில் இந்த விரதத்தை தொடங்குபவர்கள் வைகாசி மாதம் தொடங்க வேண்டும். உங்கள் வாழ்நாள் முழுவதும் இந்த விரதத்தை கடைபிடித்தால் விநாயகரின் அருள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    நாள் : வைகாசி மாதம் வளர்பிறை முதல் வெள்ளிக்கிழமை துவங்கி வாழ்நாள் முழுவதும் இந்த விரதம் இருத்தல் வேண்டும்.

    தெய்வம் : விநாயகர்

    விரதமுறை : பகலில் விரதம் இருந்து இரவில் பழம், இட்லி உள்ளிட்ட உணவு சாப்பிடலாம். அல்லது அன்றைய தினம் முழுவதும் உணவு அருந்தால் விரதமிருந்து விநாயகர் கோவிலுக்கு சென்று வழிபாடலாம். அல்லது நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் நீர் ஆகாரம் மட்டும் அருந்தி விரதமிருக்கலாம்.

    பலன் : கல்வி அபிவிருத்தி.

    • செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.
    • விரதத்தை பார்வதி தேவியிலிருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர்.

    விநாயகரை தினமும் எந்த நேரத்திலும் வணங்கலாம் என்றாலும் அவரை குறிப்பிட்ட நாட்களில் வணங்குவதன்மூலம் அவரின் அன்பைப் பெறலாம். வெள்ளிக்கிழமை, சதுர்த்தி திதி, மார்கழி மாத வளர்பிறை சஷ்டி ஆகிய நாட்களில் விரதமிருந்து அவரை வழிபட்டால் அனைத்துவிதமான பேறுகளையும் பெறலாம்.

    விநாயகரை அவிட்ட நட்சத்திரத்தன்று நெல்பொரியால் அர்ச்சனை, அபிஷேகங்கள் செய்து வணங்குவதுடன் ஏழைப் பெண்களுக்கு முடிந்தவரை தானங்கள் செய்தால் திருமணத் தடைகள் நீங்கி நல்வாழ்க்கை அமையும். அவிட்ட நட்சத்திரத்தன்று வன்னி மரத்தடியில் வீற்றிருக்கும் விநாயகருக்கு பொரியை நைவேத்தியமாகப் படைத்து அதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால் தொழிலில் நல்ல லாபம் அடையலாம்.

    விநாயகருக்கு பால் அபிஷேகம் செய்து அந்தப் பாலை அருந்திவிட்டு எந்த ஒரு இடத்துக்கும் சென்றால் அங்கு உணர்ச்சிவசப் படாமல் இருக்க முடியும். சென்ற வேலையில் வெற்றி உண்டாகும். உத்திரட்டாதி நட்சத்திரத்தில் தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இலுப்ப எண்ணெய், விளக்கெண்ணெய், பசு நெய் ஆகிய ஐந்துவகை எண்ணெய்களால் பஞ்சதீபம் ஏற்றி விநாயகரை வழிபட்டால் பெண்கள் ஆசைபட்டபடி இல்லற வாழ்வு அமையும்.

    செய்யும் தொழில் செழிப்பாக இருக்கும். பூச நட்சத்திரத்தன்று விநாயகருக்கு அன்னாபிஷேகம் செய்து வழிபட்டால் விளைச்சல் பெருகி விவசாயம் தழைக்கும், உறவினர்கள் மனம்மகிழ்ந்து உதவி புரிவார்கள். மூல நட்சத்திரத்தன்று விநாயகருக்கு பால்கோவாவை நைவேத்தியமாகப் படைத்தால் பதவி மாற்றம், இடமாற்றம் போன்றவை நடக்கும்.

    திருவாதிரை நட்சத்திரத்தன்று விநாயகருக்கு கோதுமையால் செய்யப்பட்ட அல்வாவை படைத்து வணங்கி வந்தால் அபாண்டமாக பழிசுமத்தப்பட்டு பதவியை இழந்தவர்கள், மீண்டும் இழந்த பதவியையும், மனநிம்மதியையும் பெறுவார்கள். செவ்வாய்க்கிழமைகளில் வரும் சங்கடஹர சதுர்த்தி சனிப்பிரதோஷத்தைப்போல் மிகவும் சிறப்பான ஒன்றாகக் கருதப்படுகிறது.

    இந்த விரதத்தை பார்வதி தேவியிலிருந்து, பஞ்சபாண்டவர்கள் வரை கடைப்பிடித்துள்ளனர். சிவபெருமானும் இந்த விரதம் இருந்துள்ளார். விநாயகர் சதுர்த்தி விரத தினத்தன்று விநாயகர் அகவல், விநாயகர் காயத்ரி போன்றவற்றை பாராயணம் செய்து பயன்பெறலாம்.

    ×