search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோழிகள் வழங்கும் திட்டம்"

    கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.
    சென்னை:

    கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில் 77 ஆயிரம் பெண்களுக்கு தலா 50 நாட்டுக்கோழிகள் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் நாட்டுக்கோழி முட்டை மற்றும் இறைச்சியின் தேவை அதிகரித்துள்ளதால், புழக்கடை கோழி வளர்ப்பு தொழில் பெருமளவில் வெற்றியடைந்துள்ளது. எனவே, புழக்கடை கோழி வளர்ப்பை மேலும் ஊக்குவிக்க சென்னை நீங்கலாக அனைத்து மாவட்டங்களிலும் பெண்களுக்கு தலா 50 கோழிகள் வீதம் மொத்தம் ரூ.25 கோடி செலவில் வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் 6-ந் தேதி சட்டசபையில் விதி 110-ன் கீழ் அறிவித்தார்.

    பின்னர் 25 கோடி ரூபாயை 50 கோடி ரூபாயாக உயர்த்தி அரசு ஆணை பிறப்பித்தது. அதன்படி கிராமப்புற ஏழை பெண்கள் பயன்பெறும் வகையில், கோழி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், ரூ.50 கோடி மதிப்பீட்டில், 77 ஆயிரம் கிராமப்புற பெண் பயனாளிகளுக்கு, தலா ஒருவருக்கு 50 விலையில்லா நான்கு வார வயதுடைய அசில் இன நாட்டுக்கோழிகள் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக கூண்டு வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    அதன் அடையாளமாக 5 பெண் பயனாளிகளுக்கு நாட்டுக்கோழிகள் மற்றும் கூண்டுகளை அவர் வழங்கினார். அப்போது, அரசால் வழங்கப்படும் இக்கோழிகளை நல்லமுறையில் வளர்க்க வேண்டும் என்று பயனாளிகளிடம் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தினார்.

    இத்திட்டத்தை நிறைவேற்ற ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் அருகில் உள்ள 4 அல்லது 5 கிராமங்களில் உள்ள பயனாளிகள் ஒரு குழுவாக அமைக்கும் வகையில் தேர்வு செய்யப்படுவர்.

    ஒரு பயனாளிக்கு நான்கு வார வயதுடைய 50 எண்ணிக்கை அசில் இன கோழிகள் - சேவல் மற்றும் பெட்டை சரிவீதத்தில் வழங்கப்படுவதால், அடுத்த 16 வாரத்தில் 20 சேவல்களை விற்று வருவாய் ஈட்டலாம். மீதமுள்ள 25 பெட்டை மற்றும் 5 சேவல்களை பராமரிப்பதன் மூலம், இனப்பெருக்கத்திற்கு உகந்த முட்டைகளை உற்பத்தி செய்து, அதன்மூலம் அதிக கோழிகளை உற்பத்தி செய்து, நிலையான வாழ்வாதாரத்தை பெற வாய்ப்பு உருவாக்கப்படும்.

    இத்திட்டம் கிராமப்புறங்களில் பெண் தொழில் முனைவோரை உருவாக்கி, தனி நபர் வருமானத்தை பெருக்கி, கிராமப்புற பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

    இந்த நிகழ்ச்சியில், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை முதன்மைச் செயலாளர் கே.கோபால், கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப்பணிகள் இயக்குனர் ஞானசேகரன் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×