search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காமல்வெல்த் போட்டி"

    • சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்த லோகப்பிரியா மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.
    • கல்லுக்காரன்பட்டியில் லோகப்பிரியாவின் தந்தை மறைவால் வெற்றியை கொண்டாட முடியாமல் கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

    கந்தர்வகோட்டை:

    காமன்வெல்த் விளையாட்டுப்போட்டிகள் நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் நடைபெற்று வருகிறது. இதில் வலுதூக்கும் போட்டிகளில் பங்கேற்க தமிழ்நாட்டிலிருந்து 11 வீரர்கள்-வீராங்கனைகள் சென்றுள்ளனர்.

    தமிழக அரசு சார்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் அவர்களுக்கு வாழ்த்து கூறி அனுப்பி வைத்திருந்தார். கடந்த நவம்பர் மாதம் 28-ந்தேதி தொடங்கிய போட்டிகள், வருகிற 4-ந்தேதி வரை நடக்கிறது.

    போட்டியில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 11 பேரில் 10-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பல்வேறு பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர். இதில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த வீராங்கனை லோகப்பிரியாவும் ஒருவர் ஆவார்.

    கந்தர்வகோட்டை அருகே கல்லுக்காரன்பட்டியை சேர்ந்த செல்வமுத்து-ரீட்டா மேரி தம்பதியின் மூத்த மகளான லோகப்பிரியா தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகில் உள்ள கரம்பயம் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இதற்காக பெற்றோரும் தற்போது பட்டுக்கோட்டையில் வசித்து வந்தனர். சிறு வயது முதலே பளுதூக்கும் போட்டியில் ஆர்வம் கொண்டிருந்த அவர் மாவட்ட, மாநில அளவில் நடைபெற்ற பளுதூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார்.

    தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் பங்கேற்ற லோகப்பிரியா நேற்று நடந்த பளுதூக்கும் போட்டியில் 52 கிலோ எடை பிரிவில், 350 கிலோ எடையை தூக்கி லோகேஸ்வரி தங்கப்பதக்கம் வென்றார். இதற்கிடையில் லோகேஸ்வரியின் தந்தை செல்வமுத்து நேற்று முன்தினம் மாலை 6 மணி அளவில் மாரடைப்பால் இறந்தார்.

    தந்தை இறந்த செய்தியை மகளுக்கு தெரிவித்தால் மகள் போட்டியில் தோல்வி அடைந்து விடுவார் என்று எண்ணிய அவரது தாய் ரீட்டா மேரி தனது மகளுக்கு தந்தை இறந்த செய்தியை தெரிவிக்க வேண்டாம் என கூறிவிட்டார். தங்கம் வென்ற அவர் வெற்றி மகிழ்ச்சியில் இருந்து வந்தார்.

    இதற்கிடையே அவருக்கு அவரது தந்தை இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டது. தங்கம் வென்ற மகிழ்ச்சி 5 நிமிடம் கூட நீடிக்கவில்லை. அவரது தந்தை இறந்த செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்தது. இதனால் அவர் அங்கு கண்ணீர் விட்டு கதறி அழுதார். இதையடுத்து போட்டிக்கு சென்ற வீரர்கள் அவரை அரவணைத்து ஆறுதல் கூறி தேற்றினர்.

    அப்போது வீராங்கனை லோகப்பிரியா கூறுகையில், தங்கம் வாங்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்த தந்தை, நான் தங்கம் வாங்கிதைப் பார்க்க கூட இல்லாமல் போய்விட்டாரே. தங்கத்தை வென்று விட்டேன், தந்தையை இழந்து விட்டேன் என துடித்தார். இது அங்கிருந்தவர்களின் மனதை கலங்கவைத்தது.

    அதேவேளையில், அவர் பிறந்த மண்ணான கல்லுக்காரன்பட்டியில் லோகப்பிரியாவின் தந்தை மறைவால் வெற்றியை கொண்டாட முடியாமல் கிராம மக்கள் அனைவரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர். இதற்கிடையே இறந்த செல்வமுத்துவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. வறுமையில் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு மத்திய, மாநில அரசுகள் வேலைவாய்ப்பு வழங்க முன்வரவேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×