search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காங்கிரீட் கல்"

    திருமங்கலம் அருகே தண்டவாளத்தில் காங்கிரீட் கல்லை வைத்த சம்பவத்தில் போலீசார் துரிதமாக விசாரணை மேற்கொண்டு வாலிபரை கைது செய்தனர்.
    விருதுநகர்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம்-கள்ளிக்குடி ரெயில் நிலையங்களுக்கு இடையே சில தினங்களுக்கு முன்பு ஒரே தண்டவாளத்தில் எதிர் எதிரே 2 பயணிகள் ரெயில்கள் இயக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்பாக கடந்த 26-ந் தேதி திருமங்கலம் அருகே இரவு 10 மணி அளவில் தண்டவாளத்தில் காங்கிரீட் கல் வைக்கப்பட்டு இருந்தது. அப்போது தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முத்துநகர் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. தண்டவாளத்தின் குறுக்கே ஒரு பொருள் கிடப்பதை அறிந்த என்ஜின் டிரைவர் ரெயிலின் வேகத்தை குறைத்தார். எனினும் அந்த என்ஜினின் முன்பகுதி தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த காங்கிரீட் கல் மீது மோதி கடந்து சென்றது.

    இதுகுறித்து என்ஜின் டிரைவர் மதுரையில் உள்ள அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இரவோடு இரவாக அதிகாரிகள் அங்கு சென்று ஆய்வு நடத்தினர்.

    அந்த பகுதியில் காலி மதுபாட்டில்கள், உணவு பொட்டலங்கள் சிதறிக்கிடந்தன. இதனால் குடிபோதையில் யாரேனும் காங்கிரீட் கல்லை வைத்தார்களா அல்லது ரெயிலை கவிழ்க்க நடந்த சதியா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    திருச்சி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு சரத்குமார் தாக்கூர் நேற்று அந்த பகுதிக்கு வந்து பார்வையிட்டார். மேலும் துணை போலீஸ் சூப்பிரண்டு இளங்கோவன், இன்ஸ்பெக்டர் குருசாமி ஆகியோரது தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு துரிதமாக விசாரணை நடந்தது.

    இந்த சம்பவம் நடந்த இடம் அருகே ராணுவத்தில் பணிக்கு சேர விரும்புவோருக்கு பயிற்சி அளிக்கும் மையம் செயல்பட்டு வருகிறது. அங்கு படிக்கும் யாரேனும் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் கிளம்பியது. இதைத்தொடர்ந்து அங்கு படிக்கும் மாணவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

    அங்கு படித்த கள்ளிக்குடி அருகே திருமால் என்ற கிராமத்தை சேர்ந்த திருவேட்டை என்பவரது மகனான அழகுமலை கண்ணன்(வயது19) என்பவரிடமும் விசாரணை நடந்தது. அப்போது அவர், விளையாட்டாக தண்டவாளத்தில் காங்கிரீட் கல்லை வைத்ததாக தெரிவித்துள்ளார். அவரை கைது செய்த போலீசார் விருதுநகர் முதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் காவலில் வைக்கப்பட்டார்.

    இந்த சம்பவத்தில் துரிதமாக செயல்பட்டு தண்டவாளத்தில் கல் வைத்த நபரை பிடித்த ரெயில்வே போலீசாரை உயரதிகாரிகள் பாராட்டினர்.
    ×