search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு"

    • ஆஸ்பத்திரிக்கு வந்து, தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து பெற்றோர்கள் கதறி அழுதது அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.
    • தகவல் அறிந்ததும், அமைச்சர் முத்துசாமி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார்.

    வால்பாறை:

    கோவை அருகே மலுமிச்சம்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் 10 பேர் 5 மோட்டார் சைக்கிள்களில் வால்பாறைக்கு சுற்றுலா சென்றனர்.

    சோலையாறு நல்லகாத்து சுங்கம் என்ற இடத்துக்கு சென்ற அவர்கள், சோலையார் ஆற்றில் இறங்கி குளித்தனர். அப்போது மாணவர் வினித் ஆற்றில் உள்ள சுழலில் சிக்கி கொண்டு சத்தம் எழுப்பினார்.

    அவரை காப்பாற்றுவதற்காக, தனுஷ், சரத், நபில், அஜய் ஆகியோர் ஆற்றுக்குள் இறங்கினர். அப்போது எதிர்பாராத விதமாக அவர்களும் சுழலில் சிக்கி வெளியில் வரமுடியாமல் தண்ணீரில் மூழ்கினர்.

    இதை கரையில் இருந்த சக நண்பர்கள் பார்த்து அபயகுரல் எழுப்பவே அருகே வசித்து வரும் பொதுமக்கள் ஓடி வந்தனர். மேலும் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஆற்றில் இறங்கி மாணவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஒரு மணி நேரத்திற்கு பிறகு வினித், தனுஷ், அஜய், சரத், நபில் ஆகிய 5 பேரும் இறந்த நிலையில் மீட்கப்பட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர்களது உறவினர்களுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரிக்கு வந்து, தங்கள் மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது, அங்கிருந்தவர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இறந்தவர்களில் வினித், தனுஷ், அஜய் ஆகியோர் கிணத்துக்கடவு மணிகண்டபுரத்தை சேர்ந்தவர்கள். இதில் வினித்தும், தனுசும் அண்ணன் தம்பிகள் ஆவர்.

    ஒரே பகுதியை சேர்ந்த 3 பேர் சுற்றுலா சென்ற இடத்தில் இறந்ததால், அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும், அமைச்சர் முத்துசாமி பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு இறந்த 5 கல்லூரி மாணவர்களின் உடலுக்கும் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து கிணத்துக்கடவு மணிகண்டபுரத்திற்கு சென்ற அவர் வினித், தனுஷ் ஆகியோரின் பெற்றோர்களான ராமகிருஷ்ணன்- கவிதா, அஜயின் பெற்றோர் ரவி-தெய்வானை ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

    ×