search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஎன்எஸ் திரிசூல்"

    • இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக காந்தி மிகப்பெரும் போராட்டம் துவங்க இந்த சம்பவம் துவக்கமாக அமைந்தது.
    • ஜூன் 9ம் தேதி வரை ஐஎன்எஸ் திரிசூல் கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறது

    புதுடெல்லி:

    மகாத்மா காந்தியின் வாழ்வில் இந்திய சுதந்திரத்திற்கான வேட்கையை தூண்டிய முதல் சம்பவம், அவர் தென் ஆப்பிரிக்காவில், பீட்டர்மாரிட்ஸ்பர்க் என்னும் ரெயில் நிலையத்தில், 1893ம் ஆண்டு நிறவெறி கொண்ட டிக்கெட் பரிசோதகரால் ரெயிலில் இருந்து இறக்கி விடப்பட்ட சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

    இது நடந்து 130 வருடங்கள் ஆகிவிட்டன. இதை முன்னிட்டு நடத்தப்படவிருக்கும் நினைவு நிகழ்ச்சிகளில், இந்திய கடற்படை பங்கேற்கிறது. இதற்காக கடற்படையின் போர்கப்பலான ஐ.என்.எஸ். திரிசூல் தென் ஆப்பிரிக்காவின் டர்பன் நகருக்கு சென்றடைந்தது. பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் டர்பன் நகருக்கருகே அமைந்துள்ளது.

    இந்திய சுதந்திரத்தின் முக்கியமான தருணங்களையும் நிகழ்வுகளையும், நினைவு கூறும் விதமாக, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா என்னும் பெயரில் இந்திய கடற்படை கொண்டாடி வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே ஐ.என்.எஸ். திரிசூல் போர்கப்பலின் டர்பன் நகர பயணமும் அமைந்துள்ளதாக இந்திய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக ராணுவ அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது:

    ஜூன் 6 முதல் 9 வரை இக்கப்பல் தென் ஆப்பிரிக்க நிகழ்ச்சிகளில் பங்கேற்பதன் மூலம் 1893ம் வருடம் நிகழ்ந்த அச்சம்பவத்தை நினைவு கூறவும், இந்திய-ஆப்பிரிக்க உறவுகளில் ஒரு புத்தாக்கம் உண்டாக்கவும் இயலும். அப்பொழுது காந்தியின் நினைவுத்தூணுக்கு மலர்களால் அஞ்சலி செலுத்தப்படும். மேலும் அந்த சில நாட்களில், பல தொழில்முறை மற்றும் சமூக நிகழ்ச்சிகளிலும் இக்கப்பல் பங்கேற்கும்.

    1893ம் வருடம் தாதா அப்துல்லா என்பவருக்கு வக்கீலாக ஆஜர் ஆவதற்காக பாரிஸ்டர் பட்டம் பெற்ற காந்தி டர்பன் நகருக்கு வந்திறங்கினார். ஜூன் 7, 1893 அன்று பிரிட்டோரியா செல்லும் வழியில் முதலில் பீட்டர்மாரிட்ஸ்பர்க் ரெயில் நிலையம் வரும் பொழுது, முதல் வகுப்பு பயணச்சீட்டு வைத்திருந்தும், ஒரு ஐரோப்பிய பயணியின் தூண்டுதலால், பரிசோதகரால் இறக்கி விடப்பட்டார்.

    நிறவெறி உச்சத்தில் இருந்த அக்காலத்தில், முதல் வகுப்பு பயணம் வெள்ளையரல்லாதவர்களுக்கும், கூலி வேலை செய்பவர்களுக்கும் மறுக்கப்பட்டிருந்தது.

    காந்தி இனவெறிக்கும், நிறவெறிக்கும் எதிராக மிகப்பெரும் போராட்டம் துவங்கவும், பின்னாளில் சத்யாகிரக போராட்டம் நடத்தவும் இந்த நிகழ்ச்சியே துவக்கமாக அமைந்தது.

    1997ம் வருடம் ஏப்ரல் 25 அன்று முன்னாள் தென் ஆப்பிரிக்காவின் அதிபர் நெல்சன் மண்டேலா தலைமையில் நடைபெற்ற ஒரு நெகிழ்ச்சியான விழாவில், மறைந்த காந்திக்கு "ஃப்ரீடம் ஆஃப் பீட்டர்மாரிட்ஸ்பர்க்" விருது வழங்கப்பட்டது. அப்பொழுது அடக்குமுறைக்கு எதிரான காந்தியின் தியாகத்தையும், ஈடுபாட்டையும் மண்டேலா நினைவு கூர்ந்தார்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தொவிக்கப்பட்டுள்ளது.

    ×