search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு"

    பக்ரைனில் நடந்த நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. #Bakriniparliamentaryelections
    துபாய், 

    பக்ரைனில் நாடாளுமன்ற தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகள், தேர்தலை புறக்கணிக்க விடுத்த அழைப்புக்கு மத்தியில், மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.

    வளைகுடா நாடுகளில் ஒன்று பக்ரைன். அங்கு சன்னி பிரிவை சேர்ந்த மன்னர் ஹமாத்தின் ஆட்சி நடக்கிறது. இந்த நிலையில் அரசியலமைப்பின் கீழான மன்னராட்சியை ஏற்படுத்தி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரைக் கொண்ட அரசு அமைக்க வேண்டும் என்று ஷியா பிரிவு எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் குரல் கொடுத்தனர்.

    இதையொட்டி 2011-ம் ஆண்டு ஆட்சிக்கு எதிராக அந்த எதிர்க்கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அந்த கிளர்ச்சி, ராணுவத்தைக் கொண்டு ஒடுக்கப்பட்டது. எதிர்க்கட்சிகள் பலவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளன. எதிர்க்கட்சி தலைவர்கள் பலரும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இதனால் அங்கு அமைதியற்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையில் அந்த நாட்டின் நாடாளுமன்றத்துக்கு நவம்பர் 24-ந்தேதி (நேற்று) தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நாடாளுமன்றத்தில் மொத்தம் 40 இடங்கள் உள்ளன.

    இந்த தேர்தலில் ஷியா பிரிவு எதிர்க்கட்சியான ஷியா அல் வெபாக் மற்றும் மதச்சார்பற்ற வாத் கட்சிகள் போட்டியிடுவதில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளன.

    எனவே இந்த தேர்தலை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று அந்த கட்சிகள் வலியுறுத்தி அழைப்பு விடுத்தன. இந்த தேர்தல் கேலிக்கூத்தானது, நம்பகத்தன்மையற்றது என கூறி ஜனநாயக ஆர்வலர்கள் பலரும் குரல் கொடுத்துள்ளனர்.

    இதுவும் அங்கு பிரச்சினையை ஏற்படுத்தியது. தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டதாக 6 பேர் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டனர். அவர்களில் ஷியா அல் வெபாக் கட்சியின் முன்னாள் எம்.பி. அலி ரஷீத் அல் அஷீரியும் அடங்குவார்.

    இந்த அஷீரியும், அவரது குடும்பத்தினரும் தேர்தலை புறக்கணிப்பதாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

    இருப்பினும் 40 இடங்களை கொண்ட நாடாளுமன்றத்துக்கு 506 வேட்பாளர்கள் போட்டியில் உள்ளனர். பெண் வேட்பாளர்கள் மிக அதிகமான எண்ணிக்கையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    தற்போதைய நாடாளுமன்றத்தின் 40 உறுப்பினர்களில் 23 பேர் மட்டுமே இந்த தேர்தலில் போட்டியில் உள்ளனர். நாடாளுமன்றத்துக்கு வரம்புக்குட்பட்ட அதிகாரங்கள்தான் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

    தேர்தலில் மக்கள் ஆர்வமுடன் பங்கேற்க வேண்டும் என்று மன்னர் ஹமாத், மக்களை கேட்டுக்கொண்டார். இதே போன்று வேட்பாளர்களும், மக்கள் ஓட்டு போட்டு தங்கள் தேசப்பற்றை வெளிப்படுத்த வேண்டும் என்று சமூக வலைத்தளங்கள் வாயிலாக வாக்காளர்களுக்கு அழைப்பு விடுத்தனர்.

    உள்ளூர் நேரப்படி நேற்று காலை 8 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியது. எதிர்க்கட்சிகளின் புறக்கணிப்பு அழைப்புக்கு மத்தியிலும் வாக்காளர்கள், வாக்குச்சாவடிக்கு வந்து தங்கள் ஓட்டுகளை பதிவு செய்தனர். இரவு 8 மணிக்கு ஓட்டுப்பதிவு முடிந்தது.

    முக்கிய எதிர்க்கட்சிகள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த தேர்தலின் மூலம் அமைய உள்ள புதிய நாடாளுமன்றம் என்ன செய்து விட முடியும் என்ற கேள்வி எழுந்து உள்ளதாக சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர். #Bakriniparliamentaryelections
    ×