search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உயர் கல்வி ஆராய்ச்சி"

    உயர் கல்வி ஆராய்ச்சி, கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்டுவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. #Cabinet #Research #HigherEducation
    புதுடெல்லி:

    டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் உயர் கல்வி நிறுவனங்களில் ஆராய்ச்சி மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதற்கு உயர் கல்வி நிதி நிறுவனம் (எச்.இ.எப்.ஏ.) இன்னும் 4 ஆண்டுகளில் (2022-ம் ஆண்டுக்குள்) ரூ.1 லட்சம் கோடி நிதி திரட்டிக்கொள்வதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

    இதேபோன்று உயர் கல்வி நிதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்துவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.

    ஏற்கனவே ரூ.1,000 கோடி வழங்கி உள்ள நிலையில் மத்திய அரசு இந்த நிறுவனத்துக்கு கூடுதலாக அரசு தரப்பு பங்காக ரூ.5 ஆயிரம் கோடி வழங்குவதற்கும் இந்தக் குழு தனது ஒப்புதலை வழங்கியது.

    உயர் கல்வி நிதி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட பங்கு மூலதனத்தை ரூ.10 ஆயிரம் கோடி அளவுக்கு உயர்த்தும் மத்திய மந்திரிசபையின் முடிவால், தொழில் கல்வி நிறுவனங்கள் நிதி பெற வழி பிறந்து உள்ளது.

    புதிதாக உருவாக்கப்பட்டு உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைகள், பிற சுகாதார கல்வி நிறுவனங்கள், கேந்திரிய வித்யாலயாக்கள், நவோதயா வித்யாலயாக்கள் உயர் கல்வி நிதி நிறுவனத்திடம் இருந்து நிதி வசதி பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள்:-

    * இணையதளம் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பம் வளர்ந்து வருகிற சூழலில், சர்வதேச காப்புரிமை அமைப்பின்கீழ் அறிவுசார் படைப்பாளர்கள் தங்கள் கடின உழைப்பின் பலனைப் பெற ஏதுவாக உலக அறிவுசார் சொத்துக்கள் அமைப்பின் அறிவுசார் பதிப்புரிமை ஒப்பந்தத்தில் இணைவதற்கு மத்திய மந்திரி ஒப்புதல் வழங்கியது.

    * மரபணு தொழில் நுட்ப ஒழுங்குமுறை மசோதாவுக்கு ஒப்புதல் தரப்பட்டது.

    * நலிவுற்ற நிலையில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு செலவுக்கான நிதியை ரூ.200 கோடியில் இருந்து ரூ.336 கோடியே 24 லட்சமாக உயர்த்தும் திட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.

    * சட்டம், நீதித்துறையில் கூட்டு ஆலோசனை குழு அமைப்பதற்கு இந்தியாவும், இங்கிலாந்தும் புரிந்து உணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய மந்திரிசபை ஒப்புதல் தந்தது.  #Research #HigherEducation #Tamilnews
    ×