search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இந்தியா ஆஸ்திரேலியா கிரிக்கெட் தொடர்"

    • முதலில் விளையாடிய ஆஸ்திரேலியா 186 ரன் எடுத்தது.
    • இந்திய தரப்பில் சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன் குவித்தார்.

    ஐதராபாத்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றதால் டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையை எட்டியிருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 186 ரன்கள் எடுத்தது. அந்த அணி தொடக்க வீரர் கேமரூன் கிரீன் 52 ரன்னில் அவுட்டானார். கேப்டன் ஆரோன் பின்ச் 7 ரன்னிலும், ஸ்டீவ் ஸ்மித் 9 ரன்னிலும், மேக்ஸ்வெல் 6 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிம் டேவிட் 54 ரன் அடித்தார்.

    இதையடுத்து 187 ரன் என்ற இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கே.எல். ராகுல் ஒரு ரன்னுடன் வெளியேற, கேப்டன் ரோகித் சர்மா 17 ரன் எடுத்தார். பின்னர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய விராட் கோலி 48 பந்துகளில் 63 ரன்னும், சூரியகுமார் யாதவ் 36 பந்துகளில் 69 ரன்னும் எடுத்தனர். 


    ஹர்திக் பாண்ட்யா 25 ரன் அடித்த நிலையில் களத்தில் இருந்தார். இந்திய அணி 19.5 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 187 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது.

    • ஐதராபாத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என தகவல்.
    • இந்திய அணி புதிய உலக சாதனை படைக்க வாய்ப்பு.

    ஐதராபாத்:

    ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. மொகாலியில் நடந்த முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணியும், நாக்பூரில் நடந்த இரண்டாவது டி20 போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. இதனால் தொடர் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளது.

    இந்த நிலையில் இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இந்த மைதானத்தில் இதுவரை நடைபெற்ற இரண்டு சர்வதேச டி20 போட்டிகளில் இந்திய அணி ஒரு ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளது.

    ஐதராபாத்தில் இன்று வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் ஆட்டத்தின் போது மழை குறுக்கிட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்கள் நேரடி ஒளிபரப்பு செய்கின்றன.

    இந்த நிலையில் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது. இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணியை இந்திய அணி வீழ்த்தினால், கோப்பையை வெல்வதுடன் டி20 ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற உலக சாதனை படைக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

    • சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை இந்தியா சமன் செய்துள்ளது.
    • ஒரு வருடத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் 20 வெற்றிகளை பெற்று சம நிலையில் உள்ளது.

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக கேப்டன் ரோகித் சர்மா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்துள்ளது.

    கடந்த வருடம் துபாயில் நடைபெற்ற டி20 உலகக்கோப்பையில் விராட் கோலி தலைமையில் இந்திய அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனையடுத்து இந்தியாவுக்கு முழுநேர கேப்டனாக ரோகித் சர்மா பொறுப்பேற்றார். அவரது தலைமையில் அதன்பின் பங்கேற்ற அத்தனை இருதரப்பு தொடர்களிலும் தோல்வியே அடையாமல் வென்று உலகின் நம்பர் ஒன் டி20 அணியாக முன்னேறியது.

    இருப்பினும் சமீபத்திய ஆசிய கோப்பையில் தோல்வியை சந்தித்து பின்னடைவுக்கு உள்ளான இந்தியா தற்போது சொந்த மண்ணில் வலுவான ஆஸ்திரேலியாவுடன் போட்டி போட்டு வருகிறது. இந்நிலையில் நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்தியா சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற பாகிஸ்தானின் உலக சாதனையை சமன் செய்துள்ளது.

    அந்த பட்டியல்:

    1. இந்தியா : 20* வெற்றிகள் (2022)

    2. பாகிஸ்தான் : 20 வெற்றிகள் (2021)

    3. பாகிஸ்தான் : 17 (2018)

    இதனால் நாளை ஹைதராபாத் நகரில் நடைபெறும் இத்தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் கடைசி போட்டியில் வெல்லும் பட்சத்தில் ஒரு காலண்டர் வருடத்தில் அதிக வெற்றிகளை பதிவு செய்த அணி என்ற உலக சாதனையை முழுமையாக தனதாக்கும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.

    எனவே நாளைய கடைசி போட்டியில் சிறப்பாக செயல்பட்டு ஆஸ்திரேலியாவுக்கு தக்க பதிலடி கொடுத்து கோப்பையை வெல்வதுடன் இந்த உலக சாதனையை முழுமையாக இந்தியா தனதாக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

    • ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
    • 3 பேருக்கு பதிலாக நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. செப்டம்பர் 20-ம் தேதி மொஹாலியில் தொடங்கும் இந்தத் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அணியின் 3 முக்கிய வீரர்கள் விலகி உள்ளனர்.

    கடைசி நிமிடத்தில் காயம் காரணமாக மிட்செல் ஸ்டார்க், மிட்செல் மார்ஷ் மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் இந்திய தொடரில் இருந்து விலகியுள்ளனர்.

    ஏற்கனவே டேவிட் வார்னர் சுற்றுப்பயணத்தில் இடம் பெறதாக நிலையில் இவர்களும் 3 பேரும் விலகி உள்ளது ஆஸ்திரேலியா அணிக்கு பின்னடைவாக அமையும். உள்நாட்டில் நடக்கவுள்ள டி20 உலகக்கோப்பை தொடரை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது.

    இவர்கள் 3 பேருக்கு பதிலாக நாதன் எல்லிஸ், டேனியல் சாம்ஸ் மற்றும் சீன் அபோட் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    எல்லிஸ் டி20 சீசனில் 13 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை 6.87 என்ற சிறந்த ரன்ரேட்டில் பெற்றார். சாம்ஸ் 12 போட்டிகளில் 14 விக்கெட்டுகளை எடுத்தார். மேலும் ஐபிஎல் போட்டியின் போது டேனியல் சாம்ஸ் மும்பை இந்தியன்ஸ் அணியின் முக்கிய பந்து வீச்சாளராக இருந்தார்.

    ஆரோன் ஃபிஞ்ச் தலைமையில் களமிறங்கும் ஆஸ்திரேலியா அணி மொஹாலி, நாக்பூர் மற்றும் ஹைதராபாத்தில் செப்டம்பர் 20, 23, மற்றும் 25 ஆகிய தேதிகளில் விளையாடுகிறது. ஆரோன் பிஞ்ச் சமீபத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலியா அணி:

    சீன் அபோட், ஆஷ்டன் அகர், பாட் கம்மின்ஸ், டிம் டேவிட், நாதன் எல்லிஸ், ஆரோன் பின்ச் (கே), கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், ஜோஷ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், கேன் ரிச்சர்ட்சன், டேனியல் சாம்ஸ், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், ஆடம் ஜாம்பா.

    ×