search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அருஞ்சுனைகாத்த அய்யனார் வரலாறு"

    • மேலப்புதுக்குடியில் தான் அருஞ்சுனைகாத்த அய்யனார் கோவில் உள்ளது.
    • நான் இந்த இடத்தில் சுனையாக இருக்க விரும்புகிறேன்.

     திருச்செந்தூர் அருகில் உள்ள ஊர் தான் மேலப்புதுக்குடி. இந்த பகுதியில் தான் அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில் அமைந்துள்ளது. சுமார் 700 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவைகுண்டத்தை தலைமையிடமாகக்கொண்டு சிங்கராஜன் என்ற மன்னன் இந்த பகுதியை ஆட்சி செய்து வந்தார்.

    இந்த பகுதியில் ஒரு தடாகம் ஒன்று இருந்தது. இந்த தடாகத்தில் இருக்கக்கூடிய நீர் பன்னீர்போல் சுவைகொண்டதாக இருக்கும்.

    ஒருதடவை கனகமணி என்ற பெண் இந்த தடாகத்துக்கு வந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு போய்க்கொண்டு இருந்தார். அவ்வாறு போகும்போது கல்தடுக்கி கீழே விழுந்தார். இப்படி கல் தட்டி கால் இடறி கீழே விழுந்ததால் இடுப்பில் வைத்துக்கொண்டிருந்த நீர் கீழே விழுந்தது.

    கீழே விழுந்ததும் அங்கு தவம் செய்துகொண்டிருந்த முனிவரை நனைத்துவிட்டது. தண்ணீர் பட்டு முனிவரை நனைத்துவிட்டதால் அவர் கோபம் அடைந்து அந்த பெண்ணை பார்த்து உன் கையால் நீர் வாங்கி அருந்தினால் அவர்கள் உயிரிழந்துவிடுவார்கள். இந்த உண்மையை நீ வெளியே தெரிவித்தால் மறுகணமே மரணம் உன்னை தழுவும். இதையெல்லாம் விட நீ எவ்வகையில் இறந்தாலும் இறக்கும் தருவாயில் செய்யாத குற்றம் சுமத்தப்பட்டு தண்டனைக்காக மறிப்பாய் என்று சாபமிட்டார் முனிவர்.

    உடனே கனகமணி முனிவரை பார்த்து அய்யனே அறியாமல் செய்த இந்த பிழைக்கு மாபெரும் தண்டனையா? என்று கேட்டாள்.

    உடனே முனிவர் பெண்ணே நீ இறக்கும் தருணத்தில் சொல்வது எல்லாம் பலிக்கும். மரணத்திற்கு பிறகு நீ சொர்க்கத்திற்கு செல்வாய் என்று கூறினார்.

    இப்படி பல நாட்கள் கடந்தது.  அந்த தடாகத்துக்கு அருகில் கனி தரக்கூடிய மரம் ஒன்று இருந்தது. அந்த மரத்தில் இருந்து வரக்கூடிய கனியை அந்த இடத்தை ஆட்சி புரிந்து வந்த சிங்கராஜன் என்பவர் சாப்பிட்டு வந்தார். மரத்தில் இருக்கும் கனி மன்னன் வருகைக்காக அதே இடத்தில் இருக்கும். கனியை யாரும் எடுத்துவிடக்கூடாது என்பதற்காக சிங்கராஜனின் காவல்காரர்கள் 5-க்கும் மேற்பட்டோர் அங்கு காவல் காத்து நின்றனர்.

    வழக்கம்போல் கனகமணியும் தண்ணீர் எடுத்து வருவதற்காக தடாகத்திற்கு வந்தார். கனகமணி தண்ணீர் எடுத்துக்கொண்டிருக்கும் போது மரத்தில் இருக்கும் கனி அவருடைய குடத்திற்குள் விழுந்துவிட்டது. அதை காவலாளிகள் கவனிக்கவில்லை.

    கனகமணி அந்த குடத்துடன் வீட்டிற்கு வந்துகொண்டிருக்கும்போது 21 தேவாதி தேவதைகள் கனகமணிக்கு முன்னால் வந்து நாங்கள் அனைவரும் தாகத்துடன் இருக்கிறோம். பெண்ணே... தண்ணீர் கொடு என்று கேட்டார்கள். இதைக்கேட்டதும் கனகமணி அவர்களை ஆச்சரியத்துடன் பார்த்தாள்.

    உடனே அந்த முனிவர் கொடுத்த சாபம் தான் அவளுக்கு நினைவுக்கு வந்தது. அவள் யாருக்காவது தண்ணீர் கொடுத்தால் அவர்கள் மரணம் அடைவார்கள். அந்த விஷயத்தை வெளியே சொன்னால் கனகமணியும் மறித்துவிடுவாள் என்று முனிவர் கொடுத்த சாபம் அவள் கண்முன் தோன்றியது.

    அந்த சாபத்தை எண்ணி 21 தேவாதி தேவதைகளுக்கும் தண்ணீர் கொடுக்க மறுத்தாள் கனகமணி. உடனே அந்த 21 தேவாதி தேவதைகளும், கனகமணியிடம் ரொம்ப தாகமாக இருக்கிறது. தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் இறந்துவிடுவோம் என்று கெஞ்சி கேட்டனர். ஆனாலும் கனகமணி மனதை கல்லாக்கிக் கொண்டு தண்ணீர் கொடுக்க மறுத்துவிட்டாள்.

    அதன்பிறகு கனகமணி அந்த 21 தேவாதி தேவர்களை பார்த்து ரொம்ப கோபத்துடன் நான் அனுதினம் வழிபடும் ஹரிஹர புத்திரன் மீது ஆணை எனக்கு வழிவிடுங்கள் என்று சொன்னாள். உடனே தேவாதி தேவதைகளும் அவளுக்கு வழிவிட்டனர். உடனே கனகமணியும் வீட்டிற்கு வந்து சேர்ந்தாள்.

    அந்த சமயத்தில் சிங்கராஜ மன்னன் அந்த கனியை தேடி தடாகத்திற்கு வந்தார். தடாகத்திற்கு பக்கத்தில் இருக்கும் மரம் அருகே வந்ததும் காவலில் இருந்தவர்கள் மன்னா கனி இன்னும் விழவே இல்லை என்று கூறினர். இதை கேட்டதும் கோபம் கொண்ட மன்னன் நேரம் தவறிவிட்டது. கனி இன்னும் விழாமல் இருக்காது. கனி விழுந்துவிட்டது. கனியை உண்டது உங்களில் யார்? என்று  கேட்டார்.

    காவலாளிகள் அனைவரும் அரசனிடம் நாங்கள் யாரும் உண்ணவில்லை மன்னா... என்று கூறினார்கள் பயத்துடன். காவலாளிகளை பார்த்து அரசன் சரி எப்படியானாலும் இன்னும் ஒரு மணிநேரத்திற்குள் அந்த கனியை நான் உட்கொள்ள வேண்டும். ஊருக்குள் செல்லுஙள் ஒரு வீடு விடாமல் தேடுங்கள் பழத்தோடு வாருங்கள். இல்லையென்றால் உங்களில் ஒருவருக்கும் தலை தப்பாது என்று கூறி எச்சரித்தார்.

    தலைவனின் கட்டளைக்கிணங்க காவலாளிகள் அனைவரும் ஊருக்குள் சென்று அனைவரது வீடுகளிலும் தேடினார்கள்.

    கடைசியாக கனகமணி வீட்டுக்கு முன் வந்தனர். குடத்திற்குள் நீரோடு மன்னன் சாப்பிடும் கனியும் இருந்தது. அந்த பழத்தை எடுத்துவந்த காவலாளிகள், அந்த பெண்ணையும் இழுத்துவந்து மன்னரது முன்னால் நிறுத்தி மன்னா... நீங்கள் சாப்பிடக்கூடிய கனி இவளுடைய குடத்து நீருக்குள் இருக்கிறது என்று கூறினார்கள்.

    அப்போது அங்கு வந்த தேவாதி தேவதைகள் அரசனிடம், அரசரே நாங்கள் கூறுவதையும் ஒரு தடவை கேளுங்க. குடத்தினுள் கனியினை இவள்தான் திருடி சென்றிருக்க வேண்டும். நாங்கள் ஒரு தடவை மிகுந்த தாகத்துடன் இவளிடம் சென்று எங்களுக்கு சிறிதளவு தண்ணீர் கொடு என்று கேட்டோம். ஆனால் அவள் எங்களுக்கு தரவே இல்லை.

    அதனால் எங்களுக்கு இப்போதுதான் புரிகிறது. எதற்காக தரவில்லை என்று. நீங்கள் தினமும் சாப்பிடக்கூடிய அதிசய பழத்தை இவள் தான் திருடி இருக்கிறாள். அதனால் தான் இவள் எங்களுக்கு தண்ணீர் தரவில்லை என்று 21 தேவாதி தேவதைகளும் சொன்னார்கள்.

    அப்போது பேச்சியம்மன் முதுமை பெண் வடிவத்தில் அங்கு வந்து அரசன் முன்னால் சென்று மன்னா... அந்த கனியை இந்த பெண் களவாடவில்லை. அந்த மரத்தின் பழம் தானாகவே இவளது குடத்து நீருக்குள் விழுந்துவிட்டது என்று கூறினாள். அந்த வயதான பெண் கூறுவதை கேட்காமல் மன்னன் உடனே கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றுங்கள் என்று உத்தரவிட்டார்.

    மன்னனின் கட்டளையை ஏற்ற காவலாளிகள் கனகமணிக்கு மரண தண்டனையை நிறைவேற்றினார்கள். கனகமணி இறக்கும் தருவாயில் தான் வணங்கும் அய்யனே என்று ஹரிஹர புத்திரனை அழைத்தாள். கனகமணியின் பக்திக்கு மனமிறங்கி வந்தார் ஹரிஹரபுத்திரன். பெண்ணே கலங்காதே உன்னை உயிர்ப்பிக்கிறேன் என்று சொன்னார்.

    இதைக்கேட்டதும் கனகமணி வேண்டாம். நான் இந்த பிறவியில் சாபம் வாங்கிவிட்டேன். அந்த சாபத்தோடு வாழ்வதை நான் விரும்பவில்லை. நான் இறக்கும் தருவாயில் நான் எண்ணியது நிறைவேறும் என்றார் முனிவர். எந்த தண்ணீருக்காக நான் சாபம் பெற்றேனோ அதுபோல் இனி தண்ணீருக்காக அலைந்து திரிந்து சாபம் பெறக்கூடாது என்பதற்காக நான் இந்த இடத்தில் சுனையாக இருக்க விரும்புகிறேன்.

    இந்த சுனையை யாரும் அபகரிக்காமல், வேலியிட்டு தடுக்காமலும் இருக்க அய்யனே நீங்களே சுனையை காத்தருள வேண்டும் என்று கனகவல்லி ஹரிஹரபுத்திரனிடம் கேட்டார். உடனே ஹரிஹர புத்திரனும் அருமையான சுனையாக மாறும் உன்னை நான் காத்தருள்வேன் என்று உறுதியளித்தார். அதனால் தான் அருஞ்சுனைகாத்த அய்யனார் என்று அழைக்கப்படுகிறார்.

    இந்த நிகழ்ச்சியை கண்ட மன்னன் தன்னுடைய தவறுக்கு வருந்தி உயிரை மாய்த்துக்கொண்டார். உடனே 21 தேவாதி தேவதைகளும் ஹரிஹரனிடம் வந்து மன்னிப்பு கேட்டனர். அதன்பிறகு அவர்களுக்கும் தன்னுடைய இருப்பிடத்தில் இடம் கொடுத்து தன் அருகில் வைத்துக்கொண்டார் அய்யனார்.

    இங்குள்ள அய்யனார் பூரணபுஷ்கலையுடன் அமர்ந்த கோலத்தில் உள்ளார். பரிவார தெய்வங்களாக பேச்சியம்மன், பரமேஸ்வரி அம்மன், தளவாய் மாடன், வன்னியடி ராஜன் கருப்பசாமி, சுடலைமாடசுவாமி, இசக்கி அம்மன், பட்டானி சாமி, முன்னோடி முருகன் ஆகியோருடன் அருள்பாலித்து வருகிறார்கள்.

    இங்குள்ள சுனைநீரில் குளித்தால் தீராத நோய்களும் தீரும் என்ற நம்பிக்கை இன்றளவும் மக்களிடம் உள்ளது. இங்குள்ள அருஞ்சுனை காத்த அய்யனாரை வழிபட்டால் கடன் தீர்ந்து துன்பம் அனைத்தும் மாறிவிடும் என்பது இங்கு வரும் பக்தர்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது. துன்பங்களை நீக்கி அருமையான வாழ்க்கையை தரும் அருஞ்சுனைகாத்த அய்யனாரை நாம் ஒவ்வொருவரும் வணங்குவோம். அவர் அருள் பெறுவோம்.

    ×