search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அனுமதிச்சீட்டு"

    • சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாளவாடி வட்டத்தில் உள்ள கார் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அனுமதிச்சீட்டு மூலம் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு இரவு நேரத்திலும் உள்ளூர் மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியே சத்தியமங்கலம் -மைசூரு தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்த வழியாக கனராக வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன. இரவு நேரங்களில் செல்லும் வாகனங்களில் அடிபட்டு வனவிலங்குகள் இறப்பது தொடர்கதையாகி வந்தது.

    இதையடுத்து வனவிலங்குகள் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி இந்த சாலையில் இரவு நேரத்தில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்களும், இதர வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின்போது சத்தியமங்கலம் புலிகள் காப்பகப் பகுதியில் உள்ள தாளவாடி வட்டார மக்கள் அவசர தேவைகளுக்காக இரவு நேரத்திலும் பயணிக்க அனுமதிக்க வேண்டும் என்றும், அதற்காக அனுமதிச்சீட்டு (பாஸ்) வழங்கி வரைமுறைப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தது. இதன்படி தாளவாடி வட்டார மக்களுக்கு வாகன அனுமதிச்சீட்டு வழங்க வருவாய்த்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    நீதிமன்றம் உத்தரவின்படி சத்தியமங்கலம்-மைசூரு சாலையில் இரவு போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதன்படி பண்ணாரி மற்றும் காரப்பள்ளம் சோதனைச் சாவடிகளில் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதில் உள்ளூர் மக்களுக்கு விலக்களிக்க வகை செய்யப்பட்டுள்ளது.

    தற்போது அவசர தேவைகளுக்காக இந்த சாலையில் பயணிக்கும் உள்ளூர் மக்கள் தங்களின் ஆதார் அட்டையை காட்டினால் அனுமதிக்கப்படுகின்றனர். இதை வரைமுறைப்படுத்தும் வகையில் தாளவாடி வட்டாரத்தில் உள்ள 10 ஊராட்சிகளை சேர்ந்த மக்கள் பயன்படுத்தும் வாகனங்களுக்கு வருவாய்த்துறை மூலம் வாகன அனுமதிச்சீட்டு வழங்கப்படவுள்ளது. இந்த அனுமதிச்சீட்டு மூலம் மருத்துவம் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு இரவு நேரத்திலும் உள்ளூர் மக்கள் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து தாளவாடி வட்டாட்சியர் ரவிசங்கர் கூறும்போது, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தாளவாடி வட்டத்தில் உள்ள கார் மற்றும் ஜீப் உரிமையாளர்களுக்கு அனுமதிச்சீட்டு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் தங்களது வாகன ஆர்.சி.புத்தகம், ஆதார் கார்டு, ஓட்டுநர் உரிமம் ஆகியவைகளின் ஜெராக்ஸ் நகல்களை சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் வழங்கி அனுமதிச்சீட்டு பெற விண்ணப்பிக்கலாம் என்றார்.

    ×